Tuesday, 24 September 2019

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு குறைநுகர்வு காரணமல்ல - மார்க்ஸ்


“பயன்திறனுள்ள நுகர்வு (effective consumption) அல்லது பயன் திறனுள்ள நுகர்வாளர் பற்றாக்குறையாகி விடுவதுதான் நெருக்கடிகளுக்குக் காரணம் என்கிறார்கள். கூறியதையே கூறும் சொற்புரட்டு ஆகுமே தவிர இது காரண விளக்கம் ஆகாது. பஞ்சையர் நுகர்வையும் மோசடிக்காரர் நுகர்வையும் ஒதுக்கி விட்டுப் பார்த்தால், முதலாளித்துவ அமைப்பானது பயன்திறனுள்ள நுகர்வைத் தவிர வேறு எந்த விதமான நுகர்வையும் அறியாதது. சரக்குகள் விற்பனையாகாமல் தேங்குகின்றன என்றால், விலை கொடுத்து வாங்கக் கூடியவர்கள், அதாவது பயன்திறனுள்ள நுகர்வாளர்கள் அவற்றுக்கு யாரும் கிடைக்கவில்லை என்றுதான் அர்த்தம். (ஏனெனில், இறுதியாகப் பார்க்கையில், திறனுடை நுகர்வுக்காகவோ சொந்த நுகர்வுக்காகவோதான் சரக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள்.)

தொழிலாளி வர்க்கம் உற்பத்தி செய்வதில் மிகச் சிறு பகுதியே அதன்கைக்குக் கிடைக்கிறது. இன்னும் கூடுதலான ஒரு பங்கு அதற்குக் கிடைக்குமானால், அதாவது அதற்குக்கிடைக்கும் கூலி உயருமானால், கேடு தீர்ந்து விடும் என்று வாதாடி. மேற்கூறிய சொற் புரட்டுக்கு நியாய விளக்கம் அளிக்க முயலுவார்களாயின், அவர்களுக்கு நாம் கூற விரும்புவது இதுதான்:

பொதுவாக எல்லாருக்கும் கூலி எப்போது உயர்ந்து செல்கிறதோ, சமுதாயத்தின் வருடாந்தரப் பொருளுற்பத்தியில் நுகர்வுக்கென அமையும் பகுதியில் தொழிலாளி வர்க்கத்துக்கு எப்போது உள்ளபடியே பெரியதொரு பங்கு கிடைக்கிறதோ, அந்தக் காலகட்டம்தான் எப்போதுமே நெருக்கடிகளுக்குத் தயாரிப்பு செய்யும் காலகட்டமாகிறது. குற்றங்குறையற்ற ''சர்வ சாதாரண" (!) அன்றாடப் பொது அறிவை ஆதாரமாய்க் கொண்டு வாதாடுவதாகக் கூறுகிற இவர்களது கண்ணோட்டத்தின் படி, இம்மாதிரியான ஒரு காலகட்டம் நெருக்கடி வராமல் அல்லவா தடுத்து நிறுத்த வேண்டும்?

ஆக முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கு அவசியமான நிலைமைகள் எப்படிப்பட்டவை என்பது தெளிவாகிறது. யாருடைய நல்ல எண்ணத்தையோ, கெட்ட எண்ணத்தையோ சார்ந்திராத இந்நிலைமைகள் தொழிலாளி வர்க்கம் கணப் பொழுதுக்கு மட்டும் ஒப்பளவில் வளமான வாழ்வு (relative pros perity) வாழ்வதற்கு அனுமதி அளிக்கின்றன, அதுவுங்கூட வரப்போகும் நெருக்கடியின் முன்னறிவிப்பாக அமையும் பொருட்டு அனுமதி அளிக்கின்றன என்பது தெளிவாகிறது.”
(மூலதனம்- தொகுதி இரண்டு- பக்கம்-543)

No comments:

Post a Comment