Sunday 1 September 2019

3) பாட்டாளி வர்க்கமும் வர்க்க உணர்வும் – மார்க்ஸ்-எங்கெல்ஸ்


(பொருளாதார நெருக்கடிப் பற்றி “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யில்)

பாட்டாளி வர்க்கம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து செல்கிறது. பிறந்தவுடனே அது முதலாளித்துவ வர்க்கத்துடனான தனது போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. முதலாவதாக, இந்தப் போராட்டத்தைத் தனித்தனித் தொழிலாளர்களும், அடுத்து ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும், தம்மை நேரடியாகச் சுரண்டும் தனித்தனி முதலாளிகளுக்கு எதிராக நடத்துகின்றனர். தொழிலாளர்கள், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு எதிராகத் தங்களின் தாக்குதல்களைத் தொடுக்கவில்லை. உற்பத்திக் கருவிகளை எதிர்த்தே தாக்குதல் தொடுக்கின்றனர். அவர்களின் உழைப்போடு போட்டியிடும் இறக்குமதிப் பொருள்களை அவர்கள் அழிக்கின்றனர்; எந்திரங்களைச் சுக்கு நூறாக உடைத்தெறிகின்றனர்; தொழிற்சாலைகளைத் தீவைத்துக் கொளுத்துகின்றனர்; மறைந்துபோய்விட்ட, மத்திய காலத்துத் தொழிலாளியின் அந்தஸ்தைப் பலாத்காரத்தின் மூலம் மீட்டமைக்க முயல்கின்றனர்.

இந்தக் கட்டத்தில் தொழிலாளர்கள், இன்னமும் நாடு முழுமையும் சிதறிக் கிடக்கின்ற, தமக்குள்ளே ஒத்திசைவில்லாத ஒரு கூட்டமாகவே உள்ளனர். அவர்களுக்கிடையே நிலவும் பரஸ்பரப் போட்டியால் பிளவுபட்டுள்ளனர். அவர்கள் எங்காவது மிகவும் கட்டுக்கோப்பான அமைப்புகளில் ஒன்றுபட்டுள்ளார்கள் எனில், அந்த ஒற்றுமை இன்னமும்கூட அவர்கள் தாமாக முன்வந்து ஒன்றுபட்டதன் விளைவாக இல்லாமல், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமையால் ஏற்பட்ட விளைவாகவே உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் தன் சொந்த அரசியல் லட்சியங்களை அடையும் பொருட்டு, ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தைக் களத்தில் இறக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறது. மேலும், சிறிது காலத்துக்கு அவ்வாறு செய்யவும் அதனால் முடிகிறது. எனவே, இந்தக் கட்டத்தில் பாட்டாளிகள் அவர்களின் பகைவர்களோடு போராடவில்லை; பகைவர்களின் பகைவர்களாகிய எதேச்சாதிகார முடியாட்சியின் மிச்சமீதங்கள், நிலவுடைமையாளர்கள், தொழில்துறை சாராத முதலாளிகள், குட்டி முதலாளிகள் ஆகியோரை எதிர்த்துத்தான் போராடுகின்றனர். இவ்வாறாக, வரலாற்று ரீதியான இயக்கம் முழுமையும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் குவிந்துள்ளது; இவ்வகையில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றியும் முதலாளித்துவ வர்க்கத்துக்கே வெற்றியாக அமைகிறது.

ஆனால் தொழில்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவது மட்டுமின்றி, பெருந்திரள்களாகவும் குவிக்கப்படுகிறது; அதன் வலிமை வளர்கிறது; அந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது. எந்த அளவுக்கு எந்திர சாதனங்கள் உழைப்பின் பாகுபாடுகள் அனைத்தையும் துடைத்தொழித்து, அனேகமாக எல்லா இடங்களிலும் கூலி விகிதங்களை ஒரேமாதிரிக் கீழ்மட்டத்துக்குக் குறைக்கிறதோ அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்க அணிகளுக்குள்ளே பல்வேறு நலன்களும், வாழ்க்கை நிலைமைகளும் மேலும் மேலும் சமன் ஆக்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே வளர்ந்துவரும் போட்டியும், அதன் விளைவாக எழுகின்ற வணிக நெருக்கடிகளும் தொழிலாளர்களின் கூலிகளை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன.

தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடு, அவர்களுடைய பிழைப்பை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள், மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கூட்டமைப்புகளை (தொழிற் சங்கங்களை) அமைத்துக்கொள்ளத் தொடங்குகின்றனர். கூலிகளின் விகிதத்தைத் [குறைந்து போகாமல்] தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவ்வப்போது மூளும் இந்தக் கிளர்ச்சிகளுக்கு முன்னேற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு, நிரந்தரமான சங்கங்களை நிறுவிக்கொள்கின்றனர். இங்கும் அங்கும் [சில இடங்களில்] இந்தப் போராட்டம் கலகங்களாக வெடிக்கிறது.

அவ்வப்போது சில வேளைகளில் தொழிலாளர்கள் வெற்றி பெறுகின்றனர். ஆனாலும் அது தற்காலிக வெற்றியே. அவர்களுடைய போராட்டங்களின் மெய்யான பலன் அவற்றின் உடனடி விளைவில் அடங்கியிருக்கவில்லை. எப்போதும் விரிவடைந்து செல்லும் தொழிலாளர்களின் ஒற்றுமையில் அடங்கியுள்ளது. நவீனத் தொழில்துறை உருவாக்கியுள்ள மேம்பட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன. வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ள இவை உதவுகின்றன. யாவும் ஒரே தன்மை கொண்ட, எண்ணற்ற வட்டாரப் போராட்டங்களை வர்க்கங்களுக்கு இடையேயான ஒரே தேசியப் போராட்டமாக மையப்படுத்த இந்தத் தொடர்புதான் தேவையாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே ஆகும். மத்திய காலத்து நகரத்தார், அவர்களுடைய படுமோசமான சாலைகளின் துணைகொண்டு, எந்த ஒற்றுமையைச் சாதிக்கப் பலநூறு ஆண்டுகள் தேவைப்பட்டனவோ அந்த ஒற்றுமையை, நவீனப் பாட்டாளிகள் ரயில்பாதைகளின் துணைகொண்டு ஒருசில ஆண்டுகளிலேயே சாதித்துவிட்டனர்.

தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன்மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும் ஆக்கிக் கொள்ளும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பானது, தொழிலாளர்களுக்கு உள்ளேயே நிகழும் போட்டியின் காரணமாகத் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. எனினும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிமை மிக்கதாக, உறுதி மிக்கதாக, சக்தி மிக்கதாக மீண்டும் வீறுகொண்டு எழுகிறது. இது முதலாளித்துவ வர்க்கத்தின் மத்தியிலேயே நிலவும் பிளவுகளைப் பயன்படுத்தித் தொழிலாளர்களின் குறிப்பிட்ட நலன்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கக் கட்டாயப்படுத்துகிறது. இவ்வாறுதான் இங்கிலாந்தில் பத்து மணிநேர வேலைநாள் மசோதா சட்டமாக்கப்பட்டது.

மொத்தமாகப் பார்க்குமிடத்து, பழைய சமுதாயத்தின் வர்க்கங்களுக்கு இடையே நிகழும் மோதல்கள், பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்குக்குப் பல வழிகளிலும் உதவுகின்றன. முதலாளித்துவ வர்க்கம் இடையறாத ஒரு போராட்டத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. முதலில் பிரபுக் குலத்துடன் போராட வேண்டியிருந்தது; அதன்பிறகு, முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் நலன்கள் தொழில்துறை முன்னேற்றத்துக்கு எதிராகிவிடும்போது, அந்தப் பகுதிகளுடன் போராட வேண்டியுள்ளது; எந்தக் காலத்திலும் அன்னிய நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்துடன் அது போராட வேண்டியுள்ளது. இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கவும், அதன் உதவியை நாடவும், அப்படியே அதனை அரசியல் அரங்குக்கு இழுத்துவரவும் வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கமே, பாட்டாளி வர்க்கத்துக்குத் தன் சொந்த அரசியல் கல்வியின் கூறுகளையும், பொதுக் கல்வியின் கூறுகளையும் வழங்குகிறது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவத்தோடு போரிடுவதற்கான ஆயுதங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்கு முதலாளித்துவமே வழங்குகிறது.

மேலும், நாம் ஏற்கெனவே அறிந்தபடி, தொழில்துறை முன்னேற்றத்தின் விளைவாக ஆளும் வர்க்கங்களில் பல பிரிவுகள் முழுமையாகப் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்படுகின்றன. அல்லது, குறைந்தபட்சம் அவற்றின் வாழ்வாதார நிலைமைகள் ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்தப் பிரிவுகளும் பாட்டாளி வர்க்கத்தின் ஞானோதயத்துக்கும் முன்னேற்றத்துக்குமான பல புத்தம் புதிய கூறுகளை வழங்குகின்றன.
(முதலாளிகளும் பாட்டாளிகளும்,
அத்தியாயம்-1)


No comments:

Post a Comment