Tuesday 24 September 2019

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு குறைநுகர்வு காரணமல்ல – எங்கெல்ஸ்


(முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவாய் ஏற்படுகிற மிகை உற்பத்தியே பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகிறது, குறை-நுகர்வு பிரச்சினை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முன்பே காணக்கூடியது. புதியதாகத் தோன்றிய பொருளாதார நெருக்கடிக்கு குறை-நுகர்வு காரணமாது)
*******************************************************************************************************************************
“ஹெர் டூரிங்கைப் பொருத்தவரை, சோஷலிசம், வரலாற்று வளர்ச்சியின் அவசியமான விளைவு அல்லவே அல்ல, மற்றும் முற்றிலும் வயிற்றை நிரப்பும் திசையில் நெறியாண்மை செய்யப்படும் இன்றைய படுமோசமான பொருளாயதத் தன்மை வாய்ந்த பொருளாதார நிலைமைகளின் விளைவும் அல்ல. இதை எல்லாம் அவர் மேலும் நல்ல முறையில் செய்து நிறைவேற்றியுள்ளார். அவரது சோஷலிசம் ஓர் இறுதியும் அறுதியுமான உண்மை;

அது “சமுதாயத்தின் இயற்கையான அமைப்பு'', இதன் வேர்கள் “நீதியின் சர்வப்பொதுக் கோட்பாட்டில் காணப்படுவன;

கடந்த காலத்தின் பாவகரமான வரலாறு சிருஷ்டித்த தற்போதைய நிலைமையைக் கவனிக்காமல் அவரால் தவிர்க்க முடியவில்லை என்றால், அதற்குப் பரிகாரம் காண்பதற்காக, இதை நீதியின் புனிதக் கோட்பாட்டுக்கு ஏற்பட்ட ஒரு துரதிருஷ்டம் என்றே கருதவேண்டும். ஹெர் டூரிங் மற்றவை எல்லாவற்றையும் போலவே தமது சோஷலிசத்தையும் தமது புகழார்ந்த இரு மனிதர்களை ஊடகமாக் கொண்டே உருவாக்குகிறார். சென்ற காலத்தில் இந்த இரு பொம்மைகளும் எஜமான், வேலையாள் என்ற பாத்திரங்களில் நடித்தது போலன்றி, மாறாக இந்தத் தடவையில், ஒரு மாறுதலுக்காக, உரிமைகளின் சமத்துவம் பற்றிய கதையினை நடிக்கின்றனர்-டூரிங்கின் சோஷலிசத்தின் அடித் தளங்கள் நிறுவப்பட்டுவிட்டன.

எனவே ஹெர் டூரிங்கைப் பொருத்தவரை, தொழில் துறையில் ஏற்படும் அலை வட்ட நெருக்கடிகளுக்கு நாம் கற்பித்துக் கூறுமாறு நிர்ப்பந்திக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் எதுவுமே இல்லை என்பது கூறாமலே விளங்கும். அவரது கருத்துப்படி,

நெருக்கடிகள் “சகஜ நிலையில் இருந்து” எப்போதாவது ஏற்படும் திரிபுகள் மட்டுமே, மற்றும் அவை “மேலும் முறைப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பின் வளர்ச்சியை” மேம்படுத்தவே பெரும்பாலும் உதவுகின்றன என்பதாகும். மிகை உற்பத்தியால் தான் நெருக்கடிகள் ஏற்படுகின்றன என்று விளக்கும் “சாமான்ய முறை'' அவரது “விஷயங்கள் குறித்த மேலும் துல்லியமான கருத்தோட்டத்திற்கு” எவ்வகையிலும் போதுமானதல்ல. அத்தகைய விளக்கம் "குறிப்பிட்ட பகுதிகளிலான பிரத்தியேக நெருக்கடிகள் விஷயத்தில் அனுமதிக்கப்படலாம்'' என்பது வாஸ்தவம். உதாரணம்: “பெருமளவில் விற்பனை செய்யத் தகுதியுள்ள நூல்களைத் திடீரென மறுபதிப்பாக வெளியிட்டுப் புத்தக மார்க்கெட்டை விழுங்கிவிடுவது.''

அவரது அமரத்துவம் பெற்ற நூல்கள் இத்தகைய உலகப் பேரிடர் எதையும் என்றுமே கொண்டு வந்துவிடா என்ற மன ஆறுதல் உணர்வுடன் ஹெர் டூரிங் உறங்கச் செல்லலாம்.

பெரிய நெருக்கடிகளில் “தரவுக்கும் தேவைக்கும் இடையிலான பிளவை இத்தனை மோசமாக விரிவாக்குவதற்கு” மிகை உற்பத்தி காரணம் அல்ல என்றும், மாறாக “வெகுஜன நுகர்வு பின்தங்கி இருப்பதும்.., செயற்கையாக உருவாக்கப்படும் குறை-நுகர்வும்... மக்களின் தேவைகளின்" (!) “இயல்பான பெருக்கத்தில் தலையிடுவதுமே" காரணம் என்றும் வாதாடுகிறார்.

அவரது இந்த நெருக்கடிக் கோட்பாட்டுக்கு ஒரு சீடரைப் பெறும் நல்வாய்ப்பும் அவருக்குக் கிட்டியுள்ளது.

ஆனால் துரதிருஷ்டவசமாக வெகு ஜனங்களின் இந்தக் குறை- நுகர்வும், அவர்களது பராமரிப்பு மற்றும் இனப் பெருக்கத்துக்குத் தேவையான நுகர்வைக் கட்டுப்படுத்துவதும் ஒரு புதிய புலப்பாடன்று. சுரண்டும் மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்கள் இருந்தவரையில் இது தொடர்ந்து நிலவி வந்துள்ளது. வெகுஜனங்களின் நிலைமை விசேஷமாயும் சாதகமாக இருந்த அந்த வரலாற்றுக் காலகட்டங்களில் கூட, உதாரணமாக 15 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில், மக்கள் குறை-நுகர்வுக்கு இலக்காயிருந்தார்கள். தமது நுகர்வுக்குத் தமது ஒட்டு மொத்தமான வருடாந்த உற்பத்திப் பொருளைப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு இருக்கவில்லை. எனவே குறை- நுகர்வு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்றில் ஓர் இடையறாத அம்சமாக இருந்து வந்துள்ளது.

அதே பொழுதில், உபரி உற்பத்தியின் விளைவாக ஏற்படும் நெருக்கடிகளால் மார்க்கெட் பொதுவாகச் சுருங்குவது என்பது கடந்த ஐம்பதாண்டுகளாக மட்டுமே இருக்கும் ஒரு புலப்பாடாகும்; எனவே இந்தப் புதிய மோதலை மிகை உற்பத்தி என்ற புதிய புலப்பாடு மூலம் அல்லாது ஆயிரமாண்டு பழமையான குறை-நுகர்வு என்ற புலப்பாடு மூலம் விளக்குவதற்கு ஹெர் டூரிங்கின் மேம்போக்கான கொச்சைப் பொருளியல் முழுதும் தேவைப்படுகிறது. இது, ஒரு கணிதவியலாளர் நிலையான ஒன்றும் மாற்றத்தக்க ஒன்றுமான இரு அளவுகளின் இடையிலான விகிதத்திலுள்ள வகை பிரிவினை மாறத்தக்க அளவைக் கொண்டு அல்லாமல் நிலையான அளவு மாற்றமடையாமல் இருக்கிறது என்ற உண்மையை வைத்து விளக்க முயல்வது போன்று உள்ளது.

வெகு ஜனங்களின் குறை- நுகர்வு சுரண்டலை அடிப்படையாக்கியதான எல்லா வடிவங்களிலு மான சமுதாயத்தின், இதன் பின்விளைவாக முதலாளித்துவ வடிவ சமுதாயத்தினதுமான அவசியமான நிபந்தனையாகும்; ஆனால் உற்பத்தியின் முதலாளித்துவ வடிவம்தான் முதலில் நெருக்கடிகளுக்குக் காரணமாக உள்ளது. எனவே வெகு ஜனங்களின் குறை- நுகர்வு நெருக்கடிகளுக்கான முன்தேவையான ஒரு நிபந்தனையுமாகும், மற்றும் இது நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்டு வந்த ஒரு பாத்திரத்தை அவற்றில் வகிக்கிறது. ஆனால் இது முன்னே ஏன் நெருக்கடிகள் நிலவவில்லை என்பதற்கு எவ்விதக் காரணமும் கூறாதது போலவே இன்று ஏன் நெருக்கடிகள் நிலவு கின்றன என்பதற்கும் எவ்விதக் காரணமும் கூறவில்லை.”
(டூரிங்குக்கு மறுப்பு- பொருளுற்பத்தி)

No comments:

Post a Comment