19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, அதாவது பெருவீத இயந்திரத் தொழில்கள் நிலைக்க ஆரம்பித்ததிலிருந்து, முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரம் அவ்வப்போது பொருளாதார நெருக்கடிகளால் உலுக்கப்பட்டு வருகிறது. 1825- இல் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாகப் பாதித்த முதல் பொருளாதார நெருக்கடி இங்கிலாந்தில் ஏற்பட்டது. 1836-இல் மற்றொரு புதிய நெருக்கடி இங்கிலாந்தை உலுக்கியது; அது அமெரிக்காவுக்கும் பரவியது. 1845-48-இல் ஏற்பட்ட அடுத்த நெருக்கடி உலக நெருக்கடியாக இருந்தது. அதைத் தொடர்ந்து 1856, 1857, 1873, 1882, 1890 ஆகிய ஆண்டுகளிலும் நெருக்கடிகள் ஏற்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் 1900-03: 1907; 1920-21; 1929–33; 1937-38 ஆகிய வருடங்களில் நெருக்கடிகள் ஏற்பட்டன. உதாரணமாக, இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்னர், அமெரிக்காவில் (1948-49; 1953-54; 1957-58; 1960 -61) நான்கு நெருக்கடிகள் ஏற்பட்டன. 1957-58-ஆம் வருடத்திய நெருக்கடி யானது முதலாளித்துவ உலகின் இயந்திரத் தொழில் உற்பத்தியில் அநேகமாக மூன்றில் இரண்டு பாகத்தைக்கொண்டிருந்த நாடுகளைப் பாதித்ததாக இருந்தது.
முதலாளித்துவத்தின்
கீழ்ப் பொருளாதார நெருக்கடிகள் என்பவை அமித உற்பத்தி (over production)
நெருக்கடிகளாகும்.
ஒரு நெருக்கடியின் போது சரக்குகள் விற்பனையாகாமல் தேக்கமடைகின்றன. ஏனென்றால், ஒரு எல்லைக்
குட்பட்ட (வரையறுக்கப்பட்ட வாங்கும் சக்தியை உடைய உபயோகிப் பாளர்களால் வாங்கக் கூடியதைக்
காட்டிலும் அதிகமான சரக்குகள் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. உற்பத்தி அமிதமாக ஏற்பட்டுள்ளது
என்பதால் சமூகத்தின் அங்கத்தினர் அனைவருடைய தேவைகளையும் திருப்தி செய்துவிட்டது என்பதல்ல,
அதற்குமாறாக, நெருக்கடி சமயத்தில் தொழிலாளி மக்கள் மிகவும் கஷ்ட நிலைமையை அனுபவிக்கிறார்கள்.
அவர்களுடைய வாழ்க்கைத் தரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தின்
விளைவாக மிகப் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை வசதிகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன.
சரக்குகள் உபரியாக இருப்பது சமூகத்தின் உண்மையான தேவைகளுடன் சம்பந்தப் பட்டதாக இல்லை.
இந்த சரக்குகளை வாங்கும் சக்தி மக்களுக்கு இல்லை என்பதையே இது குறிக்கிறது. எனவே, நெருக்கடியின்போது
அமித உற்பத்தி என்பது பெயரளவுக்குத் தான் (இதற்குமுன் இருந்த நிலைமையுடன் ஒப்பிட்டுக்
கூறுவது மட்டுந்தான்).
அமித
உற்பத்தி (over
production) என்பதன்
விளைவாக ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளானவை உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும், உற்பத்தியின்
பலனை அபகரித்துக் கொள்வதில் உள்ள தனியார் முதலாளித்துவ உருவத்திற்கும் இடையிலுள்ள முரண்பாட்டை
அடிப்படையாகக் கொண்டது. லட்சோப லட்சக்கணக்கான மக்கள் முதலாளித்துவத் தொழில் நிறுவனங்களில்
வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் உற்பத்தி செய்வதெல்லாம் தொழில் நிலையங்களின் உடைமையாளர்களுக்குச்
சொந்தமாகிறது. ஒரு தொழிலாளி எவ்வளவுதான் உற்பத்தி செய்தாலும், அவனுடைய கூலி அவனை எவ்வளவு
வாங்குவதற்கு சாத்திய மாக்குகிறதோ அந்த அளவுக்குத்தான் அவன் வாங்க முடியும்.
அதிகபட்ச
லாபம் பெறும் முயற்சியில் முதலாளிகள் உற்பத்தியை விரிவுபடுத்துகிறார்கள். தொழில்நுட்பத்தைச்
செம்மைப் படுத்துகிறார்கள். மிகப் பெரும் அளவு சரக்குகளை விற்பனைக்காகச் சந்தைக்குக்
கொண்டு வருகிறார்கள். ஆனால் தொழிலாளிகளின் கூலி உயர்வு, அது ஒருக்கால் உயர்வதானாலும்
கூட, உற்பத்தியின் வளர்ச்சிக்குப் பின்தங்கியே நிற்கிறது. இதன் பொருள், தொழிலாளி வர்க்கத்தின்,
உழைப்பாளி மக்களின் பரந்த பகுதியினரது உண்மையான கோரிக்கை அத்துடன் ஒப்பு நோக்கும்போது
குறைகிறது. முதலாளித்துவ உற்பத்தி விரிவுபடுவதானது, பெருவாரியான பிரதான மக்கள் பகுதியின்
எல்லைக் குட்பட்ட உபயோகிக்கும் சக்தியினால் தவிர்க்க முடியாமல் தடைப்படுத்தப்படுகிறது.
முதலாளித்துவத்தின்
பிரதான முரண்பாடு பூர்ஷுவா வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்க
முரண்பாடுகளாக வெளித்தோன்றுகிறது. உற்பத்தியின் இரு மிக முக்கிய நிலைமைகளுக்கிடையில்
முதலாளிகளின் கையில் குவிந்திருப்பதற்கும் நேரிடையான உற்பத்திச் சாதனங்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து
உற்பத்தி சாதனங்கள் பறிக்கப் பட்டு, அவர்கள் தமது உழைப்புச் சக்தியை மட்டுமே உடைமையாகப்
பெற்றிருப்பதற்கும் இருக்கும் முரண்பாடு ஒரு புறத்தில், அளவுக்கு மீறிய உற்பத்திச்
சாதனங்களும், உற்பத்திப் பொருள்களும் மறுபுறத்தில், வாழ்க்கை வசதிகள் பறிக்கப்பட்ட
வேலையில்லாதோர் கூட்டம், அளவுக்கு மீறிய உழைப்புச் சக்தியும் என அமித உற்பத்தியும்
என்னும் நெருக்கடியில் குறிப்பாக, தெளிவாகத் தோற்றமளிக்கிறது.
தொழிலாளி
வர்க்கத்திற்கும் பூர்ஷுவா வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் அவர்களைச் சுரண்டுகிற
நிலச் சொந்தக்காரர்களுக்கும் இடையிலான வர்க்க முரண்பாடுகளை நெருக்கடிகள் அதிகப்படுத்துகின்றன.
முதலாளித்துவ சமுதாயத்தில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைகிறது. இந்தப் போராட்டத்தில்
உழைப்பாளி மக்களின் பரந்த பகுதியினர் பங்கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.
நெருக்கடியானது,
முதலாளித்துவ உற்பத்தி முறையின் தவிர்க்க முடியாத உடன்பிறப்பாகும். இயற்கையான விளைவாகும்.
முதலாளித்துவம் இருக்கிறவரையில் அவை ஏற்படாமற் செய்ய முடியாது. முதலாளித்துவத்தினால்
படைக்கப்பட்ட உற்பத்திச் சக்திகள் பூர்ஷுவா உற்பத்தி உறவுகளின் எல்லைவட்டத்தை மீறி
வளர்ந்துவிட்டன என்பதையும், அதன் விளைவாகப் பிந்தியது (உற்பத்தி உறவுகள்) உற்பத்திச்
சக்திகள் மேலும் வளர்வதற்கு தடையாகிவிட்டன என்பதையும் அவை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த வளர்ச்சியை உத்தரவாதம் செய்ய உற்பத்திச் சாதனங்கள் மீதான முதலாளித்துவ தனியுடைமையையும்,
முதலாளித்துவ உற்பத்தி உறவுகளையும் ஒழித்துக் கட்டுவது அவசியமாகும்.
உற்பத்திச் சக்திகளை வளர்த்து, உற்பத்தியை சமூகமயமாக்கியதன் மூலம் முதலாளித்துவமானது, சோஷலிஸத்திற்கான பௌதிக முன் தேவைகளை எதார்த்தத்தில் சிருஷ்டித்து விடுகிறது. அதேசமயத்தில் சமுதாயத்தை மாற்றியமைக்கப்போகும் சக்தியையும் அது தோற்றுவிக்கிறது. இந்த சக்திதான் தொழிலாளி வர்க்கம்.