Sunday, 1 September 2019

1) முதலாளித்துவமும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் – மார்க்ஸ்-எங்கெல்ஸ்


(பொருளாதார நெருக்கடிப் பற்றி “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யில்)

உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. இதற்கு மாறாக, பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் முந்தைய தொழில்துறை வர்க்கங்கள் அனைத்துக்கும் வாழ்வுக்குரிய முதல் நிபந்தனையாக இருந்தது. உற்பத்தியை இடையறாது புரட்சிகரமாக மாற்றியமைத்தலும், சமூக நிலைமைகள் அனைத்திலும் இடையறாத குழப்பமும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்புமே முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைத்த, இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும் முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. கட்டியானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தனது வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான்.

முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து விரிவடைந்து செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இத்தேவை முதலாளித்துவ வர்க்கத்தைப் புவியின் பரப்பு முழுவதும் விரட்டியடிக்கிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று கூடு கட்டிக்கொள்ள வேண்டும்; எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும்; எல்லா இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டே ஆக வேண்டும்.

உலகச் சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்வதன்மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஓர் உலகத் தன்மையை (cosmopolitan character) அளித்துள்ளது. பிற்போக்காளர்கள் கடுங்கோபம் கொள்ளும் வகையில், [ஒவ்வொரு நாட்டிலும்] தொழில்துறை எழும்பி நின்றுள்ள அதன் தேசிய அடித்தளத்தை அகற்றிவிட்டது. நெடுங்காலமாக நிலைபெற்றிருந்த தேசியத் தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை ஒழித்துக்கட்டப்படுகின்றன. இந்தப் புதிய தொழில்களை நிறுவுவது, நாகரிகமடைந்த நாடுகள் அனைத்துக்கும் வாழ்வா சாவா என்னும் பிரச்சினையாகி விடுகிறது. இந்தப் புதிய தொழில்கள் முந்தைய தொழில்களைப்போல் உள்நாட்டு மூலப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. இவற்றுக்கான மூலப் பொருள்கள் தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படுகின்றன. இவற்றின் உற்பத்திப் பொருள்கள் உள்நாட்டில் மட்டுமன்றி, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நுகரப்படுகின்றன. உள்நாட்டு உற்பத்திப் பொருள்களால் நிறைவு செய்யப்பட்ட பழைய தேவைகளின் இடத்தில் புதிய தேவைகள் எழுந்துள்ளதைக் காண்கிறோம். அவற்றை நிறைவு செய்யத் தொலைதூர நாடுகளிலும் பிரதேசங்களிலும் உற்பத்தியாகும் பொருள்கள் தேவைப்படுகின்றன.

தேசங்களும் வட்டாரங்களும் தனித்தொதுங்கி நின்றும், தன்னிறைவு கண்டும் இருந்த நிலை மாறி, ஒவ்வொரு திசையிலும் பரஸ்பரப் பிணைப்பும், தேசங்களுக்கிடையே ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் உலகளாவிய சார்புத் தன்மையும் நிலவக் காண்கிறோம். நுகர்பொருள் உற்பத்தியில் எப்படியோ அறிவுத்துறை உற்பத்தியிலும் அதே நிலைதான். தனித்தனி நாடுகளின் அறிவுசார் படைப்பாக்கங்கள் அனைத்து நாடுகளின் பொதுச் சொத்தாகின்றன. தேசிய ஒருதலைப்பட்சப் பார்வையும் குறுகிய மனப்பான்மையும் மேலும் மேலும் சாத்தியமின்றிப் போகின்றன. எண்ணற்ற தேசிய, வட்டார இலக்கியங்களிலிருந்து ஓர் உலக இலக்கியம் உதயமாகிறது.

அனைத்து உற்பத்திக் கருவிகளின் அதிவேக மேம்பாட்டின் மூலமும், தகவல் தொடர்பு சாதனங்களின் பிரம்மாண்ட முன்னேற்றத்தின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைகள் என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு, சீன மதிலையொத்த தடைச்சுவர்களை எல்லாம் தகர்த்தெறிகின்றது; அதன்மூலம், அநாகரிக மக்களுக்கு அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாதமான வெறுப்பைக் கைவிட்டுப் பணிந்துபோகக் கட்டாயப்படுத்துகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையை ஏற்காவிடில் அழிய நேருமென்ற அச்சத்தின் காரணமாக அனைத்துத் தேசங்களும் அம்முறையைத் தழுவிட நிர்ப்பந்திக்கிறது. அனைத்து தேசங்களையும் நாகரிகம் என்று தான் கருதுவதை ஏற்கும்படி, அதாவது, அவை தாமாகவே முதலாளித்துவமாக மாறக் கட்டாயப்படுத்துகிறது. சுருங்கக் கூறின், தன்னுடைய பிரதிபிம்பமான ஓர் உலகைப் படைக்கிறது.

முதலாளித்துவ வர்க்கம் நாட்டுப்புறத்தை நகரங்களின் ஆட்சிக்கு உட்படுத்திவிட்டது. மாபெரும் நகரங்களை உருவாக்கியுள்ளது. நாட்டுப்புற மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புற மக்கள் தொகையைப் பெருமளவு அதிகரிக்கச் செய்துள்ளது. இவ்வாறாக, மக்கள் தொகையில் கணிசமான ஒரு பகுதியினரைக் கிராம வாழ்க்கையின் மடமையிலிருந்து மீட்டுள்ளது. நாட்டுப்புறம் நகரங்களைச் சார்ந்திருக்குமாறு செய்துள்ளதைப் போன்றே, அநாகரிக நிலையிலும் அரை-நாகரிக நிலையிலுமுள்ள நாடுகள் நாகரிக நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், விவசாயிகளின் நாடுகள் முதலாளித்துவ நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், கிழக்கு நாடுகள் மேற்கு நாடுகளைச் சார்ந்திருக்குமாறும் செய்துள்ளது.

மக்கள் தொகையும், உற்பத்திச் சாதனங்களும், சொத்துகளும் சிதறுண்டு கிடக்கும் நிலையை முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் ஒழித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தொகையை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளது. உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியுள்ளது. சொத்துகளை ஒருசிலர் கையில் குவிய வைத்துள்ளது. இதன் தவிர்க்கவியலாத விளைவு அரசியல் அதிகாரம் மையப்படுதலாகும். தமக்கென தனியான நலன்கள், சட்டங்கள், அரசாங்கங்கள், வரிவிதிப்பு முறைகளைக் கொண்ட, சுயேச்சையான அல்லது தளர்ந்த இணைப்புக் கொண்டிருந்த மாநிலங்கள், ஒரே அரசாங்கம், ஒரே சட்டத் தொகுப்பு, ஒரே தேசிய வர்க்க நலன், ஒரே தேச எல்லை, ஒரே சுங்கவரி முறைகொண்ட ஒரே தேசமாக ஒன்றிணைந்துவிட்டன.

முதலாளித்துவ வர்க்கம் நூறாண்டுகள்கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமான உற்பத்தி சக்திகளை உருவாக்கி வைத்துள்ளது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், எந்திர சாதனங்கள், தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தல், நீராவிப் கப்பல் போக்குவரத்து, ரயில் பாதைகள், மின்சாரத் தந்தி, கண்டங்கள் முழுவதையும் திருத்திச் சாகுபடிக்குத் தகவமைத்தல், கால்வாய்கள் வெட்டி நதிகளைப் பயன்படுத்தல், மனிதனின் காலடி படாத இடங்களிலும் மாயவித்தைபோல் பெருந்திரளான மக்களைக் குடியேற்றுவித்தல் – இத்தகைய உற்பத்தி சக்திகள் சமூக உழைப்பின் மடியில் துயில் கொண்டிருக்குமென இதற்கு முந்தைய நூற்றாண்டு கற்பனையாவது செய்திருக்குமா?

ஆக நாம் காண்பது என்னவெனில்: முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கட்டி அமைத்துக்கொள்ள அடித்தளமாக இருந்த உற்பத்திச் சாதனங்களும், பரிவர்த்தனைச் சாதனங்களும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த உற்பத்தி மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், நிலப்பிரபுத்துவ சமுதாயம் எத்தகைய சமூக நிலைமைகளின்கீழ் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ அந்தச் சமூக நிலைமைகளும், விவசாயம், பட்டறைத் தொழில் ஆகியவற்றில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும், சுருங்கக் கூறின், நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள், ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்திச் சக்திகளுக்கு இனிமேலும் ஒவ்வாதவை ஆயின. அவை, [உற்பத்தியைக் கட்டிப்போடும்] கால் விலங்குகளாக மாறின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது; அவை உடைத்தெறியப்பட்டன.

அவற்றின் இடத்தில் தடையற்ற போட்டியும், அதனுடன் கூடவே அதற்கு ஏற்றாற் போன்ற சமூக, அரசியல் அமைப்புச் சட்டமும், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார, அரசியல் ஆதிக்கமும் வந்து அமர்ந்து கொண்டன.

இதேபோன்ற ஓர் இயக்கம் [இப்போது] நம் கண்ணெதிரே நடைபெற்று வருகிறது. தனக்கே உரிய உற்பத்தி உறவுகளையும், பரிவர்த்தனை உறவுகளையும் சொத்துடைமை உறவுகளையும் கொண்டுள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் - இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள இந்த முதலாளித்துவ சமுதாயம் – தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளது தொழில்துறை, வணிகம் ஆகியவற்றின் வரலாறானது, நவீன உற்பத்தி உறவுகளுக்கு எதிராகவும், முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஆட்சியதிகாரமும் நிலவுதற்கு அடிப்படையாக விளங்கும் சொத்துடைமை உறவுகளுக்கு எதிராகவும், நவீன உற்பத்தி சக்திகள் நடத்தும் கலகத்தின் வரலாறே ஆகும்.

இதனை உறுதிப்படுத்த, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் வணிக நெருக்கடிகளைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடிகள் ஒவ்வொரு முறை வரும்போதும் முன்னைவிட அச்சமூட்டும் வகையில், ஒட்டுமொத்த முதலாளித்துவ சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்த நெருக்கடிகளின்போது, இருப்பிலுள்ள உற்பத்திப் பொருள்களின் பெரும்பகுதி மட்டுமன்றி, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும்பகுதியும் தொடர்ந்து அழிக்கப்படுகிறது.

இதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலும் அபத்தமானதாகக் கருதப்பட்டிருக்கும் ஒரு கொள்ளை நோய் – தேவைக்கு அதிகமான உற்பத்தி என்னும் கொள்ளை நோய் - இந்த நெருக்கடிகளின்போது தொற்றுகிறது. சமுதாயம், தான் திடீரெனெத் தற்காலிக அநாகரிக நிலைக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதைக் காண்கிறது. ஏதோ ஒரு பெரும் பஞ்சம் அல்லது உலகளாவிய ஒரு சர்வநாசப் போர் ஏற்பட்டு வாழ்வாதாரப் பொருள்கள் அனைத்தின் வினியோகமும் நிறுத்தப்பட்டதுபோல் தோன்றுகிறது; தொழிலும் வணிகமும் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது; ஏன் இப்படி? காரணம், இங்கே மிதமிஞ்சிய நாகரிகம், மிதமிஞ்சிய வாழ்வாதாரப் பொருள்கள், மிதமிஞ்சிய தொழில்கள், மிதமிஞ்சிய வணிகம் இருப்பதுதான். சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள், முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இனிமேலும் உதவப் போவதில்லை. மாறாக, அந்த உறவுகளை மீறி உற்பத்தி சக்திகள் வலிமை மிக்கவை ஆகிவிட்டன. முதலாளித்துவ உடைமை உறவுகள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தளைகளாகிவிட்டன.

உற்பத்தி சக்திகள் இந்தத் தளைகளைக் தகர்த்தெறியத் தொடங்கியதுமே அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் விளைவிக்கின்றன; முதலாளித்துவச் சொத்துடைமை நிலவுதற்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன. தாம் உற்பத்தி செய்யும் செல்வத்தைத் தம்முள் இருத்தி வைக்க இடம் போதாத அளவுக்கு, முதலாளித்துவ சமுதாய உறவுகள் மிகவும் குறுகலாக இருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் இந்த நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கிறது? ஒருபுறம், உற்பத்தி சக்திகளில் பெரும்பகுதியை வலிந்து அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை வென்றெடுப்பதன் மூலமும், பழைய சந்தைகளை இன்னும் ஒட்டச் சுரண்டுவதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது. அதாவது மேலும் விரிவான, மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழி வகுப்பதன் மூலமும், நெருக்கடிகளை முன்தடுப்பதற்கான வழிமுறைகளைக் குறைப்பதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது.

எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தித் தரைமட்டம் ஆக்கியதோ, அதே ஆயுதங்கள் இப்போது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன. ஆனால், முதலாளித்துவ வர்க்கம் தனக்கே அழிவைத் தரப்போகும் ஆயுதங்களை மட்டும் வார்த்தெடுக்கவில்லை; அந்த ஆயுதங்களைக் கையாளப்போகும் மனிதர்களையும், அதாவது நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பட்டாளிகளையும் உருவாக்கி உலவவிட்டுள்ளது.
(முதலாளிகளும் பாட்டாளிகளும்,
அத்தியாயம்-1)


பொருளாதார நெருக்கடிப் பற்றி “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” – மார்க்ஸ்-எங்கெல்ஸ்

Friday, 26 July 2019

முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி – கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்


“முதலாளித்துவ முரண்பாடுகள் கூர்மையடைதல்

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான மோதல் தான் வரலாற்று நிகழ்ச்சிப் போக்கின் உந்து சக்தியாக, ஒரு உற்பத்தி முறையிலிருந்து வேறு முறைக்கு மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய சமூகப் புரட்சிகளின் பொருளாதார அடிப்படையாக விளங்குகிறது. நமது கண்களின் முன்னே கூர்மையடைந்து வரக்கூடிய உற்பத்தியின் சமுதாயத் தன்மைக்கும் தனி முதலாளித்துவ அபகரிப்பு முறைக்கும் இடையிலுள்ள முரண்பாடு இத்தகைய மோதலின் உதாரணமாகத் திகழுகிறது. இந்த முரண்பாடுதான் முதலாளித்து வத்தின் முக்கிய முரண்பாடாகும்.

இந்தப் பகைமையான, சமரசப்படுத்த இயலாத முரண்பாடு இப்போது பெரிதும் கடுமையாக உள்ளது. அரசு- ஏகபோக முதலாளித்துவம் சோஷலிசத்தை நோக்கிய மாற்றத்திற்கான எல்லாப் பொருளாயத முன்தேவைகளையும் தயார்படுத்தியுள்ளது. பெரும் இயந்திரத் தொழில் துறையும் உற்பத்தியை மிக உயர்வான அளவில் பொதுமயப்படுத்தியதும் அராஜகத் தன்மைக்கும் நெருக்கடிகளுக்கும் முடிவுகட்டவும் சமுதாயம் முழுவதன் நலன்களுக்காக உற்பத்திச் சக்திகளின் நட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகோலவும் தேவையான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கின்றன, ஆனால் இதற்கு முதலாவதாக உற்பத்திச் சாதனங்களின் மீதான தனிச் சொத்துடைக்கு முடிவு கட்ட வேண்டும்.

ஏகாதிபத்தியம் அழிந்து வரக் கூடிய முதலாளித்துவம் என்பதற்கு, அது தானாகவே, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான வெகுஜனங்களின் தீர்மான கரமான போராட்ட மின்றி அழிந்துவிடும் என்பது பொருளல்ல, வி.இ.லெனின் ஏகாதிபத்தியத்தை சோஷலிசப் புரட்சியின் முன்னணைப் பொழுது என்று குறிப்பிட்டார். நிச்சயமாக ஏகபோக முதலாளி வர்க்கம் போராட்டமின்றி விட்டுக் கொடுக்காது, முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்க அது சக்திகள் அனைத்தையும் செல்விடும். ஆனால் தவிர்க்க இயலாததை அதனால் தடுக்க முடியாது. முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மேன்மேலும் கூர்மையடைந்து அதன் அழிவிற்கு இட்டுச் செல்லுகின்றன.

உழைப்பாளிகளைச் சுரண்டுவதன் மூலம் தனது செல்வங்களைப் பெருக்கும் ஏகபோக முதலாளி வர்க்கம் இவர் களுடைய வளர்ந்து வரும் எதிர்ப்பைச் சந்திக்கிறது. முதலாளித்துவ ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் சமுதாயத்தின் சோஷலிச மாற்றத்திற்காகவும் தொழிலாளி வர்க்கமும் மக்கள் திரளினரும் நடத்தும் புரட்சிகர இயக்கம் வளர்ந்து மேன்மேலும் பலமடைகிறது.

காலனிகளின் மக்களை அடிமைப்படுத்தி, பின் அவர்களைப் பொருளாதார சார்புநிலை எனும் வலையில் சிக்கவைத்த ஏகபோக முதலாளி வர்க்கம் அவர்களது தேசியச் செல்வத்தைக் கொள்ளையடிப்பதன் மூலம் தொடர்ந்து லாபம் சம்பாதிக்கிறது. இதனால் ஏகாதிபத்திய அடிமை முறைக்கு எதிரான மக்களின் தேசிய விடுதலை இயக்க அலை வளர்ந்து வருகிறது.

அடக்குமுறையைப் பின்பற்றி யுத்தங்களைக் கட்டவிழ்த்து விட்டு ஏகபோக முதலாளி வர்க்கம் தனது சுய நலன்களுக்காகப் பல லட்சக்கணக்கான மனித உயிர்களைப் பழிவாங்குகிறது. பல்லாண்டு மனித உழைப்பால் தோற்றுவிக்கப்பட்ட செல்வங்களைப் போராட்டச் சுவாலையில் இட்டுப் பொசுக்குகிறது. இதனால் ஜனநாயகத்திற்கும் சமாதானத்திற்குமான மக்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

இந்த மகத்தான சக்திகள் அனைத்தும் ஒரே பெருக்காக ஒன்றுசேர்ந்து ஏகாதிபத்தியத்தை அழிக்கின்றன. முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க இயலாத மறைவு கட்டம், முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்தை நோக்கி மாறும் கட்டம் வருகிறது.

முதலாளித்துவம் சமமின்றி வளர்ந்து வருவதால் சோஷலிசத்திற்குச் சமுதாயம் மாறுவதும் ஒரே நேரத்தில் நடைபெறாது. முதலாளித்துவத்தின் அழிவும் சோஷலிசத்தின் வெற்றியும் ஒரு சகாப்தம் முழுவதும் நீடிக்கக் கூடிய நீண்ட நிகழ்ச்சிப் போக்காகும். இச்சகாப்தம் முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி சகாப்தம்.

முதலாளித்துவ பொது நெருக்கடியின் கட்டங்கள்

முதலாளித்துவத்தின் பொது நெருக்கடிக் காலகட்டத்தில், தனிப்பட்ட நாடுகளைத் தனது ஆதிக்கத்தின் கீழ் இனிமேலும் முதலாளித்துவ அமைப்பு வைத்திருக்க இயலாத அள்விற்கு இதன் உள் முரண்பாடுகள் கூர்மையடைகின்றன; இந்த நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இதிலிருந்து விலகி சோஷலிசப் பாதைக்கு வருகின்றன. மறு புறத்தில் சோஷலிச அமைப்பின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் பலப்படுத்தலும் ஏகாதிபத்தியத்தின் சிதைவை மேலும் அதிகமாகத் துரிதப்படுத்துகின்றன.

முதலாளித்துவ பொது நெருக்கடியின் முதல் கட்டம் முதல் உலக யுத்தத்தையடுத்து, குறிப்பாக அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் வெற்றியோடு துவங்கியது. அக்டோபர் புரட்சி தொழிலாளர் மற்றும் தேசிய விடுதலை இயக்கத்தின் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியது, சமுதாய வளர்ச்சி முழுவதற்கும் பெரும் உந்து சக்தியை அளித்தது. சோஷலிசம் தத்துவத்திலிருந்து நடைமுறையாகியது, முதலாளித்துவத்தின் தவிர்க்க இயலாத அழிவைப் பற்றியும் அதைப் புதிய சமுதாய அமைப்பால் மாற்றுவதைப் பற்றியும் மார்க்சிய-லெனினியப் போதனை கூறிய ஆரூடத்தின் உண்மை முதன் முதலாக மெய்ப்பிக்கப்பட்டது.

இரண்டாவது உலக யுத்தம் முதலாளித்துவத்தின் பொது நெருக்கடியைக் கூர்மையாக்கி ஆழப்படுத்தியது; ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பல நாடுகள் முதலாளித்துவ அமைப்பிலிருந்து விலகியதையடுத்து இந்த நெருக்கடியின் இரண்டாவது கட்டம் துவங்கியது. சோஷலிசம் ஒரு நாட்டின் வரம்பை விட்டு வெளியேறி உலக அமைப்பாக மாறியது. அதே பொழுது தேசிய விடுதலைப் புரட்சிகள், பல முந்தைய காலனிகள் மற்றும் அரைக் காலனிகளின் இடத்தில் சுயமான அரசுகளைத் தோற்றுவித்தன.

50ம் ஆண்டுகளின் இரண்டாம் பாதியிலிருந்து முதலாளித்துவ பொது நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஆரம்பமாகியது, இது உலக யுத்தத்தோடு தொடர்பின்றி துவங்கியது என்பதில் தான் இதன் சிறப்பியல்பு அடங்கியுள்ளது. முன்பு சமாதானக் காலத்தில் உழைப்பாளிகளின் சோஷலிச இயக்கத்தையும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் தேசிய விடுதலை இயக்கத்தையும் நசுக்கக் கூடிய அளவிற்கு முதலாளித்துவம் சக்தி வாய்ந்ததாக இருந்தது; பரஸ்பர வேறுபாடுகளால் பலவீனமடைந்து, அவர்களாலேயே மூட்டி விடப்பட்ட உலக யுத்தங்களில் மும்முரமாயிருந்ததால் தான் ஏகாதிபத்தியவாதிகளால் விடுதலை இயக்கங்களின் பெரும் வெற்றிகளுக்குத் தடைவிதிக்க இயலவில்லை.

இப்போது அவர்களால் சமாதானக் காலத்திலும் கூட இதைச் செய்ய இயலவில்லை. காலனியாதிக்க முறையின் சிதைவு இதைத் தெளிவாக நிரூபிக்கிறது.”
(சமூக விஞ்ஞானம் – முன்னேற்றப் பதிப்பகம் -1985- பக்கம் 169 - 172)


உபரி மதிப்பு – கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்


“முதலாளிகளைச் செல்வந்தர்களாக ஆக்குவது தான் முதலாளித்துவ உற்பத்தியின் ஒரே நோக்கம். யாரைப் பலி கொடுத்து இது அடையப்படுகிறது?

சந்தையில் பண்டங்களை விற்று பணம் சம்பாதிக்கும் முன்பாக இவற்றை உற்பத்தி செய்ய வேண்டும், உழைப்பால் மட்டுமே மதிப்பைத் தோற்றுவிக்க இயலும். முதலாளி அடிமைச் சொந்தக்காரனோ, நிலப்பிரபுவோ இல்லை, தனது சொத்தாகப் பாவிக்கக் கூடிய அடிமைகளோ, பண்ணையடிமைகளோ அவனிடம் இல்லை. ஆனால் அவனிடம் உற்பத்திச் சாதனங்கள் உள்ளன, சமுதாயத்தில் இவை மறுக்கப் பட்ட பாட்டாளி வர்க்கம் உள்ளது. தொழிலாளி முதலாளியைத் தனிப்பட்ட முறையில் சார்ந்திருக்கவில்லை, ஆனால்  வாழ்வதற்காக அவன் தனது உழைப்புச் சக்தியை விற்க வேண்டியவனாகிறான். இதனை வாங்கும் முதலாளி மதிப்பை உருவாக்க வல்ல ஓரே பண்டத்தைப் பெறுகிறான்.

பண்டம் என்ற முறையில் உழைப்புச் சக்தி குறிப்பிட்ட ஒரு மதிப்பிற்கு விற்கப்படுகிறது. மனிதனின் அவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் தான் அவனால் உழைக்க இயலும். ஒரு நாளில் தொழிலாளி குறிப்பிட்ட அளவு ரொட்டி, இறைச்சி, வெண்ணெய், சர்க்கரையைப் பயன் படுத்துகிறான், ஆடைகள், காலணிகளை அணிந்து அவற்றை குறிப்பிட்ட அளவு தேய்மானம் அடையச் செய்கிறான், வீட்டு வாடகைக்காகக் குறிப்பிட்ட அளவு பணத்தைச் செலவழிக்கிறான்; முதலாளிக்கான புதிய உயிருள்ள "பண்டம்” வளர்ந்து வரும் குடும்பத்தை அவன் பராமரிக்க வேண்டும். இதிலிருந்து உழைப்புச் சக்தியின் மதிப்பு, தொழிலாளியையும் அவனது குடும்பத்தையும் பராமரிப்பதற்கு அவசியமான வாழ்க்கைச் சாதனங்களின் மதிப்பிற்குச் சமமானது.

உழைப்புச் சக்தியின் மதிப்பின் முழுமுதல் அளவு பல்வேறு நாடுகளில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மாதிரியானது. இது இயற்கைச் சூழ்நிலைகளையும் வரலாற்று ரீதியாக உருவாகியுள்ள உழைப்பாளிகளின் வாழ்க்கைத் தரத்தையும் பொறுத்தது. உற்பத்தியின் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் போன்ற பொருளாதாரக் காரணங்களும் இதைப் பாதிக்கின்றன. ஒரு புறம் உழைப்பின் உற்பத்தித் திறன் வளர்ச்சி தொழிலாளர்களுடைய வாழ்க்கைச் சாதனங்களின் மதிப்பைக் குறைப்பதால் உழைப்புச் சக்தி மதிப்பைக் குறைக்கிறது. மறு புறம் நகரங்கள் வளர்ந்து வருவதால் போக்குவரத்துச் செலவினங்கள் அதிகமாகின்றன, எரிவாயு, தொலைபேசி போன்ற புதிய வீட்டு வசதிகளுக்கான செலவுகள் கூடுதலாகின்றன. புதிய கலாச்சாரத் தேவைகள் தோன்றுகின்றன. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலுள்ள நவீன தொழிலாளியால் பத்திரிககைகள், திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி இல்லாமல் இருக்க இயலாது. தொழிலாளியின், அவனது குடும்பத்தின் தேவைகள் வளருகின்றன என்றால் உழைப்புச் சக்தியின் மதிப்பு கூடுதலவாகிறது.

தமது நிலைமையை மேம்படுத்துவதற்காக முகலாளிகளுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப்போராட்டமும் உழைப்புச் சக்தியின் மதிப்பின் அளவு மீது தாக்கம் செலுத்துகிறது.

உழைப்புச் சக்தியை வாங்கிய முதலாளி இதை உற்பத்திச் சாதனங்களுடன் ஒன்றிணைக்கிறான், ஆலைகள் கட்டப்பட்டு மூலப்பொருள் கொணரப்பட்டு தொழிலாளி இயந்திரத்தின் முன் நின்றதும் காரியம் துவங்குகிறது.

உழைப்புச் சக்தியின் பங்கும் உற்பத்திச் சாதனங்களின் பங்கும் வெவ்வேறானவை. உழைப்புச் சக்தி புதிய மதிப்பைத் தோற்றுவிக்கிறது. ஆனால் உற்பத்திச் சாதனங்களால் எந்தவித மதிப்பையும் தோற்றுவிக்க இயலாது. உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு தொழிலாளிகளின் உழைப்பால் தக்க வைக்கப்பட்டு, இந்தச் சாதனங்கள் தேய்மானம் அடைவதைப் பொறுத்து புதிதாக உற்பத்தி செய்யப்படும் பண்டங்களுக்கு மாற்றப்படுகிறது. உதாரணமாக, ஒரு இயந்திரத்தால் 10 ஆண்டுகள் வேலை செய்ய முடியுமெனில் ஒவ்வொரு ஆண்டும் இது தனது மதிப்பில் பத்திலொரு பங்கை இழக்கிறது, இந்தப் பகுதி புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட பண்டத்தின் மேல் மாற்றப்படுகிறது. மூலப் பொருள், உதாரணமாக பருத்தி தயாரான வடிவத்தில் புதிய பொருளாகிய பருத்தித் துணியில் முற்றிலுமாக இடம் பெறுகிறது, பருத்தியின் மதிப்பு முழுவதும் துணியின் மதிப்பிற்கு மாற்றப்படுகிறது.

குளிர்கால மேலாடைக்குத் தேவையான துணி, உள்துணி, பொத்தான்கள் போன்றவற்றின் விலை 50 டாலர்கள், தையற்கூலி 30 டாலர்கள் என்றால் தயாரான இந்த மேலாடையின் விலை 80 டாலர்களாயிருக்கும். 50 டாலர்களுக்குச் சமமான பழைய மதிப்பு தையற்காரனால் தக்கவைக்கப்பட்டு மேலாடைக்கு மாற்றப்பட்டது. குறிப்பிட்ட உழைப்பின் போக்கில் தையற்காரனால் உருவாக்கப்பட்ட புதிய மதிப்பு 30 டாலர்களாகும்.

முதலாளித்துவ உற்பத்திப் போக்கில் தொழிலாளியால் தோற்றுவிக்கப்படும் புதிய மதிப்பு தனது அளவில் அவனது உழைப்புச் சக்தியின் மதிப்பைவிட அதிகமாயிருக்கிறது.

ஒரு மணி நேரத்தில் தொழிலாளி 2 டாலர்களுக்குச் சமமான புதிய மதிப்பைத் தோற்றுவிக்கிறான், ஒரு நாள் உழைப்புச் சக்தியின் மதிப்பு 10 டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட நிலையில் அவன் இதை ஈடு செய்வதற்காக 5 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஆனால் தொழிலாளி ஏதோ ஒரு அளவு உழைப்பை விற்கவில்லை, மாறாக தனது உழைப்புச் சக்தியை விற்கிறான், இதை வாங்குபவன் இதை விருப்பப்படி பயன்படுத்துகிறான். எனவே பாட்டாளி வேலை நாள் முழுவதும் உழைக்கிறான். இந்த வேலை நாள் 8 மணி நேரம் நீடிக்கும் என்றால் தொழிலாளி . இந்நேரத்தில் 16 டாலர்களுக்குச் சமமான புதிய மதிப்பைத் தோற்றுவிக்கிறான். இவ்வாறாக உற்பத்திப் போக்கில் தொழிலாளி தனது உழைப்பின் மூலம் தனது உழைப்புச் சக்தியின் மதிப்பைவிட அதிக மதிப்பைத் தோற்றுவிக்கிறான்.

முதலாளியால் இலவசமாக அபகரிக்கப்படும் இந்த வித்தியாசம் தான்--உபரி மதிப்பு-அவனது செல்வத்தின் மூல ஊற்றகும்.

இவ்வாறாக உபரி மதிப்பை உற்பத்தி செய்து அதை முத லாளிகள் அபகரிப்பதில்தான் முதலாளித்துவச் சுரண்டலின் சாரம் அடங்கியுள்ளது. எனவே கூலியுழைப்பு முறை என்பது கூலி அடிமை முறையாகும்.”
(சமூக விஞ்ஞானம் – முன்னேற்றப் பதிப்பகம் -1985- பக்கம் 144 - 147)

Wednesday, 26 June 2019

மார்க்சின் “மூலதனம்” நூல் பொருளாதாரத்தை மட்டும் பேசுகிறதா? இது பொருளாதார நூலா? அரசியலைப் பேசுகின்ற அரசியல் பொருளாதார நூலா?


மார்க்ஸ் மூலதன நூலுக்கு முன்பு எழுதிய "அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு" என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் கூறப்பட்டுள்ளதை படித்தால், கம்யூனிஸ்டுகளுக்கு பொருளாதாரத்தின் மீதான அரசியல் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். அது சமூக மாற்றமே அதாவது சமூக புரட்சியேயாகும். சமூக மாற்றம் அற்ற பாடமாக முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் மார்க்சின் மூலதனத்தை வெறும் பொருளாதார நூலாக, முதலாளித்துவ அமைப்பை விமர்சனம் மட்டும் செய்கின்ற நூலாக அறிமுகம் செய்கின்றனர்.

"மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது."
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு முன்னுரை)

மார்க்ஸ் எழுதிய மூலதன நூலைப் பற்றிய மதிப்புரையில் எங்கெல்ஸ் எழுதிகிறார்:-

"மூலதனத்தின் ஒரு முகமான குவிதல் மற்றும் திரட்சி என்பதோடு அக்கம்பக்கமாயும் அதே வேகத்தோடும் உழைக்கும் மக்கள் உபரி தொகையின் திரட்சியும் நடைபெறுகிறது. இவ்விரண்டும் சேர்ந்து முடிவில் ஒரு புறம் சமூகப் புரட்சியை அவசியமாக்கும் மறு புறத்தில் அதை சாத்தியமாக்கும் என்பதை நிரூபிக்கச் செய்யும் மார்க்சின் தற்படைப்பான சாதனையாகும்."
(மார்க்சின் "மூலதனம்" முதல் தொகுதி பற்றிய மதிப்புரை பக்கம் 15)

சோஷலிச சமூக மாற்றத்தை பேசாத, முதலாளித்துவ பொருளாதார அமைப்பை மட்டும் மூலதன நூல் பேசுகிறது என்பது அபத்தம் மட்டும் அல்ல, ஆபத்தானதாகும். சோஷலிச சமூக மாற்றத்தை சாத்தியமாக்கும் பொருளாயாத விளக்கத்தையே மூலதன நூல் நமக்கு சொல்கிறது.

எங்கெல்சின் வழிகாட்டுதலுடன் கீழ்காணும் மார்க்சின் வரிகளைப் படிக்கும் போது மூலதனம் என்னும் நூல் முதலாளித்துவம் பற்றிய நூல் மட்டும் கிடையாது, முதலாளிததுவத்தின் முடிவைப் பற்றியதும் ஆகும் என்பதை அறியலாம்.

மார்க்ஸ்:-
“முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்து மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடும்நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெளியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது” மூலதனம் (முதல் தொகுதி பக்கம் 1027)

முதலாளித்துவத்தின் முடிவும், சோஷலிச சமூகத்தின் தொடக்கமும் பற்றியே மூலதன நூல் பேசுகிறது.

அதுமட்டும் அல்லாது மூலதன நூல் கம்யூனிச சமூகம் பற்றியும் பேசுகிறது. சமூக மாற்றத்துக்கு அஞ்சுகிற முதலாளித்துவ அறிஞர்கள், மார்க்சின் மூலதன நூலை வெறும் முதலாளித்துவ அமைப்பைப் பற்றி விமர்சிக்கிறது என்பதாக சுருக்கிக் காட்டுகின்றனர்.

மூலதன நூல் வெறும் பொருளாதார நூல் தான் என்பதே முதலாளித்துவத்தின் சதி.

அரசியல் பொருளாதாரம் என்பது மனிதச் சமூக வாழ்வின் அடித்தளமான பொருளாயாச் செல்வ உற்பத்தியை எடுத்துரைக்கிறது. அதாவது உற்பத்தியின் சமூக அமைப்பு, உற்பத்தி நிகழ்வின் போது மனிதர்களிர்களுக்கு இடையே ஏற்படுகிற பொருளாதார உறவுகள், மனித சமூக வளர்ச்சியில் தோன்றுகின்ற பொருளாயத நலன்கள், மற்றும் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை நிர்வகிக்கும் விதிகளை ஆராய்கிறது.

இந்த விதி எவ்வாறு சோஷலிசப்புரட்சிக்கு இட்டுச் செல்கிறது என்பதையே மூலதன நூல் நமக்கு விளக்குகிறது. சோஷலிசப் புரட்சிக்கான விஞ்ஞானத் தன்மையை மூலதன நூல் நமக்கு அளிக்கிறது. அதனால் இது வெறும் பொருளாதார நூல் அல்ல அரசியல் பேசுகிற அரசியல் பொருளாதார நூலாகும்.