Tuesday, 6 March 2018

04) மதிப்பின் அடிப்படையாய் அமைவது உழைப்பு– லெவ் யோன்டிவெவ்


வெவ்வேறு பயன்-மதிப்புகளான பொருள்கள் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் போது அவை ஒன்றுக்கு ஒன்று ஈடாகி விடுகின்றன. பொருள்கள் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் வதற்கே காரணம் அவை வெவ்வேறு பயன்-மதிப்பு கள்என்பதுதான். வெவ்வேறு மனித தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருள்கள் தான் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன.

பண்டங்கள் ஒன்றுக்கு ஈடாய் ஒன்று பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் அளவு விகிதங்கள் அடிக்கடி ஏறியிறங்கி அலைவுறுகின்றன. ஆயினும் இந்த அலைவுகள் எவ்வளவு தான் கடுமையான போதிலும், ஒரு டன் செம்பை உதாரணமாய் எடுத்துக் கொள்வோமாயின், எப்பொழுதும் அது ஒரு டன் வார்ப்பிரும்பைக் காட்டிலும் கிராக்கியானதாகவே இருக்கிறது; எப்பொழுதும் ஒரு டன் வெள்ளியைக் காட்டிலும், இன்னும் குறிப்பாய் ஒரு டன் தங்கத்தைக் காட்டிலும் மலிவாகவே இருக்கிறது. எனவே பண்டங்கள் ஒன்றுக்கு ஈடாய் ஒன்று பரிவர்த்தனை செய்து கொள்ளப் படும் அளவு விகிதங்களுக்கு அதிகமாகவோ குறைவாகவோ உறுதி வாய்ந்த ஓர் அடிப்படை இருக்கின்றது.

அளவு வழியிலான எந்த ஒப்பீடும் நடைபெறுவதற்கு, ஒப்பிடப்படும் பொருள்களிடையில் ஒரு பொது இயல்பு இருப்பது இன்றியமையாத நிபந்தனையாகும், முற்றிலும் வெவ்வேறு வகைப்பட்ட பொருள்களும் அடிக்கடி ஒப்பீடு செய்யப்படுகின்றன, ஆனால் இப்பொருள்களுக்குப் பொதுவானது எதேனும் ஒன்று இருந்தாலொழிய இவை ஒப்பீடு செய்யப்படுவது முடியாத காரியம். அதோடு இப்பொருள்களுக்குள்ள இந்தப் பொதுவான இயல்பு அளக்கப்படக் கூடியதாக இருப்பதும் அவசியமாகும்.

இந்தப் பொது இயல்பு எது?

முற்றிலும் வெவ்வேறான பயன்- மதிப்புகளாகிய பரிவர்த்தனைப் பண்டங்களிடையே இருக்கும் பொது இயல்பு ஒன்றே ஒன்றுதான்: இவை யாவும் மனித உழைப்பின் உற்பத்திப் பொருள்கள் என் பது ஒன்றே ஒன்று தான். இந்த இயல்பு அளக்கப்படக் கூடியதே: உழைப்பானது குறிப்பிட்ட ஒரு பண்டத்தை உற்பத்தி செய்வதற்கு ஆகும் நேரத்தைக் கொண்டு அளவிடப்படுகிறது. ஒரு பண்டம் பிறிதொன்றுடன் பரிவர்த்தனை செய்யப் படுவதற்குரிய விகிதங்களை நிர்ணயிப்பது இப் பண்டங்களை உற்பத்தி செய்வதற்கு செலவாகிய உழைப்பின் அளவுதான்.
(அரசியல் பொருளாதாரம்- முன்னேற்றப் பதிப்பகம் - பக்கம்-60-62)

03) பரிவர்த்தனைப் பண்டம் இருவேறு தன்மையானது– லெவ் யோன்டிவெவ்


உழைப்பின் உற்பத்திப் பொருளானது ஒரு பரிவர்த்தனைப் பண்டமாக வேண்டுமாயின், அது மனிதத் தேவைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்வதாய் இருக்க வேண்டும்; அதனுடைய பயனுடைமை (utility) இதில் தான் அடங்கியிருக்கிறது. உழைப்பின் உற்பத்திப் பொருளுக்கு இருக்கக் கூடிய இந்த இயல்புக்குப் பயன் - மதிப்பு (use-value) என்று பெயர். பாலுக்கும் இறைச்சிக்குமுள்ள பயன் - மதிப்பு இப்பொருள்கள் மக்களுடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படுவதில் அடங்கியிருக்கிறது. அருவி ஒன்றின் நீரும், தானாகவே காய்த்துப் பழுத்திருக்கும் பழமும், மனித உழைப்பின் உற்பத்திப் பொருளாய் இராத இவற்றையொத்த ஏனைய பல பொருள்களும்  இதே போல் பயன் - மதிப்பு கொண்டவையே.

இயற்கைப் பொருளாதாரத்திலும் பரிவர்த்தனை பண்டப் பொருளாதாரத்திலும் உழைப்பால் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் குறிப்பிட்ட மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றவையே. விவசாயி தனது சொந்த நுகர்வுக்காக உற்பத்தி செய்யும் ரொட்டி விவசாயியின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது, ஆகவே இது பயன் - மதிப்பாய் இருக்கின்றது. ஆனால் இந்த ரொட்டி பரிவர்த்தனைப் பண்டமாகுமாயின், இது இன்னொரு முக்கிய இயல்பையும் பெறுகிறது-அதாவது, இதைப் பரிவர்த்தனை செய்து இதற்குப் பதில் இன்னொரு பரிவர்த்தனைப் பண்டத்தைப் பெற முடிகிறது.

ஒரு பரிவர்த்தனைப் பண்டத்தைக் குறிப்பிட்ட ஓர் அளவு விகிதத்தில் இன்னொரு பரிவர்த்தனைப் பண்டத்துடன் பரிவர்த்தனை செய்து கொள்ள முடிகிறது; அதாவது, இப்பண்டம் ஒரு பரிவர்த்தனை மதிப்பு (exchange value), அல்லது சுருக்கமாய் மதிப்பு எனப்படுவதையும் கொண்டிருக்கக் காண்கிறோம். உழைப்பின் உற்பத்திப் பொருள் ஒரு பரிவர்த்தனைப் பண்டமாகும் போது, அது இந்தப் புதிய இயல்பைப் பெறுகிறது. ஆகவே பரிவர்த்தனைப் பண்டமானது பயன் - மதிப்பு, மதிப்பு ஆகிய இரு இயல்புகளும் கொண்டதாகும்.
(அரசியல் பொருளாதாரம்- முன்னேற்றப் பதிப்பகம் - பக்கம்-59-60)

02) சாமானியப் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தியும் முதலாளித்துவப் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தியும்– லெவ் யோன்டிவெவ்


பெரிய முதலாளித்துவத் தொழில் நிலையங்கள் தோன்றுவதற்கு முன்பு உற்பத்தியானது விவசாயிகளும் கைவினைஞர்களுமாகிய சிறு பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தியாளர்கள் மூலம் நடந்தேறி வந்தது. இவர்கள் கூலிக்குத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்ளாமல் தாமே நேரில் வேலைகளைச் செய்தனர், அதிக செலவாகாத இலகுவான உழைப்புக் கருவிகளைச் சொந்தத்தில் தம்மிடம் வைத்திருந்தனர். சாமானியப் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தி என்றழைக்கப்படும் இப்படிப் பட்ட பொருளாதாரத்துக்கும் முதலாளித்துவப் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்திக்கும் பொதுவான தொரு முக்கிய இயல்பு என்னவெனில், இரண்டும் உற்பத்திச் சாதனங்களிலான தனியார் உடைமையை அடிப்படையாய்க் கொண்டிருக்கின்றன. ஆயினும் அதே போது சாமானியப் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தியானது முதலாளித்துவ உற்பத்தியிலிருந்து வெகுவாய் மாறுபடுகிறது: எப்படி யெனில் அது சிறு பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தி யாளர்களுடைய சொந்த உழைப்பின் அடிப்படையிலானது, ஆனால் முதலாளித்துவமானது கூலித் தொழிலாளர்களுடைய உழைப்பின் அடிப்படையிலானது.
(அரசியல் பொருளாதாரம்- முன்னேற்றப் பதிப்பகம் - பக்கம்-58-59)

01) பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தி தோன்றுவதற்குரிய நிலைமைகள் – லெவ் யோன்டிவெவ்


விற்பனைக்காக, பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்படும் பொருளுக்குப் பரிவர்த்தனைப் பண்டமென்று பெயர்; பரிவர்த்தனைக்காகப் பொருள்களை உற்பத்தி செய்யும் பொருளாதாரத்துக்குப் பரிவர்த்தனைப் பண்டப் பொருளாதாரமென்று பெயர்-இதை ஏற்கனவே கூறியிருக்கிறோம். விற்பனைக்காக அல்லாமல் நேரடி நுகர்வுக்காகப் பொருள்களை உற்பத்தி செய்யும் பொருளாதாரத்தை இயற்கைப் பொருளாதாரம் என்கிறோம்.

முதலாளித்துவத் தொழில் நிலையங்கள் தமது பொருள்கள் யாவற்றையும் விற்பனைக்காகவே உற்பத்தி செய்கின்றவை. முதலாளித்துவம் வளர வளர சிறு உற்பத்தியாளர்களும் தமது பொருள்களில் மேலும் மேலும் அதிகமானவற்றைச் சந்தையில் விற்க முற்படுகிறார்கள்.

பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தியானது சமூக உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் அமைந்தது. சமூக உழைப்புப் பிரிவினை என்பது சமுதாயத்தின் தனித்தனி உறுப்பினர்கள் வெவ்வேறான பொருள்களை உற்பத்தி செய்வதில் அடங்கியிருக்கிறது. ஆனால் இயற்கைப் பொருளாதாரம் பரிவர்த்தனைப் பண்டப் பொருளாதாரமாய் மாற வேண்டுமாயின், சமூக உழைப்புப் பிரிவினையோடு கூட உற்பத்திச் சாதனங்களில் தனியார் உடை மையும் இருந்தாக வேண்டும்.
(அரசியல் பொருளாதாரம்- முன்னேற்றப் பதிப்பகம் - பக்கம்-57-58)