இதன் வீடியோவைப் பார்க்க இங்கே கிளிக்கவும்:-
வீடியோ
சென்னை மாவட்ட, தமிழ்நாடு
கலை இலக்கியப் பெருமனறம், நடத்துகிற தத்துவப் பயிலரங்கத்தில், நான் பங்கு பெருவதில்
பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தப் பதிநான்கு நாள் பேசப்படுகிற பொருள், நமது சமூகத்தைப
புரிந்து கொள்வதற்கு வழிகாட்டியாக அமையும். இந்தப் பெரும் பணியைத் தொடங்கியதற்குக்
கலை இலக்கியப் பெருமன்றத்திற்கு நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பணியைத் தொடங்குகிறேன்.
மார்க்சியம் மூன்று பிரிவுகளைக்
கொண்டுள்ளது. 1) தத்துவம், 2) அரசியல் பொருளாதாரம்,
3) விஞ்ஞானச் சோஷலிசம். இந்த அடிப்படைகளைத் தான் இந்தத் தத்துவப் பயிலரங்கத்தில்
நாம் பார்த்து வருகிறோம்.
மார்க்ஸ் இந்த மூன்று பிரிவில்
பலவற்றைப் புதியதாகக் கண்டுபிடித்து இருந்தாலும், எங்கெல்ஸ் இரண்டை மார்க்சின் மாபெரும்
கண்டுபிடிப்பாகக் கூறுகிறார். அந்த இரண்டில் ஒன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம், மற்றொன்று
உபரிமதிப்பு.
இன்று நாம் “உபரிமதிப்பும் மூலதனமும்” என்பது பற்றிப்
பார்க்கப் போகிறோம்.
உபரி மதிப்பே மூலதனத்தைப்
பெருக்குகிறது என்பதனால், இரண்டையும் சேர்த்தே பார்க்கலாம்.
உபரிமதிப்பை நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?
ஆய்வு மாணவர்கள் மார்க்சிய
வழியில் ஆய்வு செய்ய வேண்டுமானால், அவர்கள் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைத் தெரிந்திருக்க
வேண்டும்.
வரலாற்றியல் பொருள்முதல்வாதம்,
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை ஒட்டி அந்தந்த சமூகத்தை ஆய்வு செய்கிறது.
அந்தந்த கால உற்பத்தி-வினியோக
முறைக்கு ஏற்பவே அன்றைய சிந்தனைகள், கருத்துக்கள், தத்துவங்கள், அறநெறிகள், கலைகள்
ஆகியவை அமைந்துள்ளதாக வரலாற்றியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.
அதனால், இன்றைய முதலாளித்துவச்
சமூகத்தில் உள்ள சிந்தனைகளின் முரண்பாடுகள், இன்றைய உற்பத்தி முறையில் தான் அடங்கி
இருக்கிறது என்பதனால், மார்க்சிய வழியில் கலைகளை அணுகுவதற்கு, மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தையும்
அறிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.
இன்று நாம் அரசியல் பொருளாதாரத்தை
முழுமையாகப் பார்க்கப் போவதில்லை, அரசியல் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமானதான
“உபரிமதிப்பும் மூலதமும்” பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.
அதற்கு முன் ஒன்றை நாம்
தெரிந்து கொள்ள வேண்டும். மார்க்ஸ் தமது அரசியல் பொருளாதாரம் பற்றிய பகுப்பாய்வை எந்த
ஆய்வு முறையை (Research
Methodology) கையாண்டு
எழுதியுள்ளார்.
வரலாற்றியல் பொருள்முதல்வாதம் தான் மார்க்சின் ஆய்வு முறை.
இது பற்றி அவரே வெளிப்படையாகக்
கூறியுள்ளார். 1859ஆம் ஆண்டு வெளியான “அரசியல்
பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்ற தமது நூலின் முன்னுரையில் கூறியுள்ளார்.
இதில் உள்ள முதல் வாக்கியத்தை
அப்படியே பார்க்கலாம், மீதமுள்ளதை சிறு விளக்கத்துடன் பார்ப்போம்.
“இதன்
மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை- இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு
வழிகாட்டும் கோட்பாடாக மாறியது- பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம்.
மனிதர்கள்
தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க
முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து
நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக்
குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின்
கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது.
இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்த கூடிய
சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன.
பொருளாயத
வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது.
மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக
வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது.”
(“அரசியல் விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” –முன்னுரையில்)
மார்க்சே தமது ஆய்வு முறைக்கான
அணுகுமுறை கூறியுள்ளார்.
மார்க்ஸ், கூறியதை சற்று
விளக்கத்துடன் பார்ப்போம்.
வாழ்நிலை தான் சிந்தனையைத்
தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை. இது தான் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின்
அடிப்படை ஆகும்.
வாழ்நிலை என்றால் என்ன?
ஒவ்வொரு மனிதனும் தமது
வாழ்வாதரத்துக்காக வேலை செய்யும் போது பொருளாதார உறவுகள் ஏற்படுகின்றன. பொருளாதார உறவுகளே,
உற்பத்தி உறவுகள் என்று கூறப்படுகிறது. இந்த உற்பத்தி உறவுகளே வாழ்நிலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த உற்பத்தி உறவுகளால்
ஏற்படுகிற பொருளாதார நலன்களே அவர்களின் சிந்தனையைத் தீர்மானிக்கின்றது.
மனிதர்கள் தங்களது வாழ்க்கைக்காக
வேலை செய்யும் போது சமூகத்தில் தவிர்க்க முடியாத வகையில் உற்பத்தி உறவுகள் ஏற்படுகின்றது.
இந்த உறவுகள் மனிதனது விருப்பதையோ, மனதையோ சாராமல் புறத்தில் இருக்கிறது.
குறிப்பிட்ட கட்டத்துக்கு
உரிய உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் அன்றைய சமூகத்தின் அடித்தளமாகும், அதனை
ஒட்டி எழுகின்ற சிந்தனை, கருத்துக்கள் ஆகியவை மேற்கட்டமைப்பாக அமைகிறது.
இந்த அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாடு என்ன சொல்கிறது?
சிந்தனை, கருத்து என்பது
தனிப்பட்ட மனிதனை மட்டும் சார்ந்தது அல்ல, தமது வாழ்க்கைக்காக வேலை செய்யும் போது ஏற்படுகிற,
உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் தோன்றுகிற, பொருளாதார நலன்களே, சிந்தனையாக-கருத்தாகத்
உருவாகிறது.
இதன் மூலம் நமக்கு என்ன தெரிகிறது?
எந்தக் கருத்தும், எந்தச்
சிந்தனையும் ஒவ்வொரு மனிதனின் பொருளாதார நலன்களின் அடிப்படையில் தோன்றுகிறது. அதனால்
தான் முதலாளிகளின் நலன்களும் தொழிலாளிகளின் நலன்களும் முரண்படுகின்றன.
இதுதான் மார்க்ஸ் அணுகுமுறை,
மார்க்சிய ஆராய்ச்சி முறைமையியல் (Marxist
Research Methodology.)
அரசியல் பொருளாதாரம் கற்பது,
சற்று சிரமமானது என்று ஒரு பொதுவான கருத்து இருக்கிறது. உண்மை தான். ஒரு புதுத் துறையைப்
படிக்க முனையும் போது, சற்றுச் சிரமம் இருக்கத்தான் செய்யும்.
அந்தச் சிரமத்தை குறைப்பதற்கு
என்ன வழி?
எளிதாக எடுக்கப்படும் வகுப்புகளில்
கலந்து கொள்ளது, எளிதாக எழுதப்பட்ட நூல்களைப் படிப்பது. இதைத் தவிர வேறுவழி கிடையாது.
மெனகெடாமல் எந்தப் புதிய
துறையையும் அறிந்து கொள்ள முடியாது. மெனக்கெடுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த வகுப்பு
இருக்கும் என்று நாம் நம்புகிறேன்.
மார்க்சுக்கு முன்பே, ஆடம்
ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ போன்ற செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்கள் (classical
political economists), ஒரு
சரக்கின் மதிப்பானது, அச் சரக்கில் செலுத்தப்பட்ட உழைப்பால் உருவானது என்பதைக் கண்டுவிட்டனர்.
ஆனால் அவர்கள் இந்த விளக்கத்துடன்
நின்றுவிட்டனர்.
மார்க்ஸ் இதனைத் தொடர்ந்து
ஆராய்ந்தார். அந்த ஆராய்ச்சியின் முடிபே உபரி மதிப்பு.
“உபரிமதிப்பும் மூலதனமும்” என்ற தலைப்பில் பேசுவதற்குப்
பயன்படுத்திய நூல்களை முதலில் பார்ப்போம்.
1849 ஆம் ஆண்டு மார்க்ஸ்
எழுதிய “கூலியுழைப்பும் மூலதனமும்”
1865 ஆம் ஆண்டு மார்க்ஸ்
எழுதிய “கூலி, விலை, லாபம்”,
1867 ஆம் ஆண்டு மாக்ஸ்
எழுதிய “மூலதனம்” முதல் தொகுதி,
1878 ஆம் ஆண்டு எங்கெல்ஸ்
எழுதிய “டூரிங்குக்கு மறுப்பு” இந்த நூலில்
தான் மார்க்சியத்தின் மூன்று பகுதிகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் என்று
பிரித்து, முதன்முறையாக விளக்கப்பட்டுள்ளது. மார்க்சியத்தில் எதைப் பற்றிப் பேசினாலும்,
எங்கெல்சின் “டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலை தொடமால் இருக்க முடியாது.
இத்துடன், மார்க்ஸ் எழுதிய
“கூலியுழைப்பும் மூலதனமும்” நூலுக்கு எங்கெல்ஸ், 1891 ஆம் ஆண்டு எழுதிய “முன்னுரை”.
குறிப்பாக இந்த முன்னுரையை
அடிப்படையாக வைத்தே “உபரிமதிப்பும் மூலதனமும்” என்பதை அறிந்து கொள்ளப் போகிறோம்.
முதலில் ஒன்றை நான்றாகப்
புரிந்து கொள்ள வேண்டும். மூலதனமும் பணமும் ஒன்றல்ல.
மூலதனம் பணத்தைக் கொண்டது
தான், ஆனால் பணத்தின் பணியும் மூலதனத்தின் பணியும் வெவ்வேறு ஆகும்.
சிறிய பண்டமாற்றுக் காலத்திலேயே
பணம் தோன்றிவிட்டது.
ஆனால், மூலதனம் உருவாவதற்கு
ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டம் அவசியமாகிறது, சமூக வேலைப் பிரிவினையின் வளர்ச்சியிலும்,
சரக்கு உற்பத்தி முறை வளர்ச்சியிலும் பணம் மூலதனமாக மாறுகிறது.
தெருவில் பூ விற்கும் பெண்மணி
ஒரு நாளைக்குத் தம்மிடம் உள்ள 700/-.ரூபாய்க்குப் பூக்களை வாங்கி,
அதனை நாளெல்லாம் விற்று 1,000 அல்லது 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம். இந்தச் சம்பாத்தியம்
லாபம் ஆகாது. இது அந்தப் பெண்மணியின் அன்றைய வருமானம், இது சம்பாத்தியம், லாபம் என்று
கூறிட முடியாது.
லாபம் என்பது மூலதனத்தால்
மட்டுமே கிடைக்கிறது. தம் கைப்பணத்தைப் போட்டு, பூ வியாபாரத்தை நடத்துவதனால், அந்தப்
பூவிற்கும் பெண்மணியை ஒரு முதலாளி என்று கூறிடமுடியாது.
முதலாளி உழைப்பைச் சுரண்டுகிறார்.
பூ விற்கும் பெண்மணி யாரையும் சுரண்டவில்லை.
பணத்தைக் கொண்டு வருமானத்தைப்
பார்க்கலாம் ஆனால் மூலதனத்தைக் கொண்டே லாபத்தைப் பார்க்க முடியும். முதலாளித்துவ உற்பத்தி
முறை இந்த வகையில் தான் அமைந்துள்ளது.
நாம் முதலாளித்துவ உற்பத்தி
முறையின் முழுமையையும் இன்று பார்க்கப் போவதில்லை. முதலாளித்துவ உற்பத்தி முறையைப்
புரிந்து கொள்வதற்குத் தேவைப்படுகிற அடிப்படையாக உள்ள உபரிமதிப்பு, மூலதனம் ஆகிய இரண்டை
மட்டுமே இங்கே பார்க்கப் போகிறோம்.
உபரி மதிப்பில் இருந்து
மூலதனம் எவ்வாறு பெருகுகிறது என்பதையே இன்று விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
உபரி மதிப்பு என்பது முதலாளித்துவ
உற்பத்தி முறையில் தான் நடைபெறுகிறது. அதே போலப் பணம், மூலதனமாக மாறுவதும் முதலாளித்துவ
உற்பத்தி முறையின் தோற்றத்தில் தான்.
அதனால் நாம் நேரடியாக முதலாளித்துவ
உற்பத்தி முறைக்குச் செல்வோம்.
முதலாளித்துவ உற்பத்தி
முறை நடைபெற வேண்டுமானால் அதற்கு, இரண்டு முன்நிபந்தனைகள் இருக்கின்றன.
ஒரு பக்கம் பணம் சிலரிடம்
திரளாகச் சேர்ந்திருப்பது, மறு பக்கம் நிலத்தில் இருந்தும், உற்பத்திக் கருவிகளில்
இருந்து விலக்கப்பட்ட, உழைப்பால் மட்டுமே பிழைக்கக்கூடிய தொழிலாளி வேண்டும்.
இந்த இரண்டு சக்திகள் இருந்தால்
தான் முதலாளித்துவ உற்பத்தி முறை நடைபெறும்.
முதலாளியிடம் தொழிற்சாலை
நடத்துவதற்கு வேண்டிய “மூலதனம்” இருக்கிறது, தொழிலாளியிடம் அந்தத் தொழிற்சாலையில் உழைப்பை
செலுத்துவதற்கான “சக்தி” இருக்கிறது.
முதலாளி தம்மிடம் உள்ள
மூலதனத்தைக் கொண்டு தொழிற்சாலை நடத்த முற்படுகிறார்.
முதலில் எந்தத் தொழில்
செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இங்கே இரும்பு அலமாரி அதாவது பீரோ செய்யும்
தொழிற்சாலையை முதலாளி உருவாக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
தொழிற்சாலைக்கு இடம் வேண்டும்,
இரும்பு அலாமாரி செய்வதற்குக் கச்சாப் பொருளான இரும்பு வேண்டும். அதனை உருக்குவதற்கு
இயந்திரம் வேண்டும், இயந்திரம் செயல்பட மீன்சாரம் வேண்டும்.
இவற்றை எல்லாம் இயக்குவதற்குப்
பாட்டாளி வர்க்கம் வேண்டும். அதாவது தொழிலாளியின் உழைப்பு வேண்டும்.
இரும்பு அலமாரி செய்வதற்கான தொழிற்சாலை தயாராகிவிட்டது.
உற்பத்தியைத் தொடங்க வேண்டியது தான்.
உற்பத்தி நிகழ்கிறது, தயாரான இரும்பு அலமாரி சந்தையைக் நோக்கி
செல்கிறது, சந்தையில் விற்கப்படுகிறது. முதலாளிக்கு லாபம் கிடைக்கிறது.
இந்த லாபம் எவ்வாறு வந்தது.
இந்தப் புதிய மதிப்பு எவ்வாறு பிறந்தது.
இதுதான் பொருளாதாரத்தின் அடிப்படைக் கேள்வி.
சரக்கின் மதிப்பானது, அச்சரக்கின்
உற்பத்திக்கு அவசியமான அதனுள் அடங்கியுள்ள உழைப்பால் நிர்ணயிக்கப்படுகிறது என்று செம்மை
அரசியல் பொருளாதாரம் முதலில் கண்டுபிடித்தது.
உழைப்பு தான் சரக்கின்
மதிப்பை படைக்கிறது என்று கூறியவுடன், உழைப்பின் மதிப்பை நிர்ணயிப்ப எப்படி? என்ற கேள்வி
எழுகிறது.
சரக்கில் அடங்கியுள்ள அவசியமான
உழைப்பு, என்பதே அந்தக் கேள்விக்குப் பதில்.
ஒரு தொழிலாளி, ஒரு நாளைக்குச் செலுத்திய உழைப்பின அளவு எனன?
இதை எப்படி அளப்பது?.
உழைப்பின் மதிப்பு “உழைப்பில்”
தான் கூற முடியும். ஆனால் “ஒரு மணி நேர உழைப்புக்கு, ஒருமணி நேர உழைப்புச் சமம்” என்று
கூற முடிகிறதே தவிர, ஒரு மணி நேர உழைப்பின் மதிப்பைப் பற்றி இன்னும் நாம் ஏதும் அறிந்து
கொள்ளவில்லை.
உழைப்பின் மதிப்பை நிர்ணயிப்ப
எப்படி? என்ற கேள்வியின் தொடக்கத்தில் தான் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்.
உழைப்பின் மதிப்பை இன்னும்
அறிந்து கொள்ளவில்லை.
செம்மை அரசியல் பொருளாதாரம்,
வேறொரு வழியில் முயன்று பார்த்தது. அது என்னவென்றால், சரக்கின் மதிப்பு அதன் உற்பத்திச்
செலவுக்குச் சமம்.
அடுத்து, உழைப்பின் உற்பத்திச் செலவு என்ன? என்ற கேள்வி
எழுகிறது.
இதற்குச் செம்மை அரசியல்
பொருளாதார அறிஞர்கள், தர்க்கவியலுக்கு எதிராகச் செயல்பட்டனர். அவர்களால் உழைப்பின்
உற்பத்திச் செலவைக் கணக்கிட முடியவில்லை.
வேறு என்ன செய்வது என்று
நினைத்த அவர்கள் தொழிலாளியின் உற்பத்திச் செலவை ஆராய முற்பட்டனர்.
இதைக் கணக்கிடலாம். தொழிலாளியின்
உற்பத்தி செலவை கணக்கிடுவோம்.
தொழிலாளி தொடர்ந்து வேலை
செய்வதற்கும், வேலை செய்யும்படியான திறனை பராமரிப்பதற்கும், மேலும் முதுமை, நோய் அல்லது
மரணம் காரணமாக அவர் வேலையில் இருந்து நீங்கினால், அவருக்குப் பதிலாக ஒரு புதிய தொழிலாளியைத்
தருவதற்கும், அதாவது, தொழிலாளி வர்க்கத்தை இனவிருத்தி செய்வதற்கும், தேவைப்படுவதே தொழிலாளியின்
உற்பத்தி செலவாகும்.
ஆக மொத்தத்தில் வாழ்வதற்குக்
குறைந்தபட்ச தேவையை நிறைவேற்றுவதற்கு உரிய பணமே, தொழிலாளியின் உற்பத்தி செலவு ஆகும்.
ஒரு தொழிலாளி, தன்னையும்
தனது குடும்பத்தையும் காப்பதற்கு ஆகும் செலவே தொழிலாளியின் பிழைப்பாதாரச் செலவாகும்.
இந்தக் கணக்கு அவர்களின் தேவையை, முழுமையாக நிறைவு செய்வதற்காகக் கணக்கிடப்படவில்லை,
அவர்கள் தொடர்ந்து வாழ்வதற்குத் தேவையானதே கணக்கிடப்படுகிறது.
இந்தப் பிழைப்பாதாரச் செலவு
ஒரு நாளைக்கு ரூபாய் 1,000/- என்று வைத்துக் கொள்வோம்.
நாம் இரும்பு அலமாரி செய்யும்
தொழிலாற்சாலையை முன்வைத்தே கணக்கிடுகிறோம்.
தொழிற்சாலையில், ஒரு நாள்
வேலை செய்வதற்கு 1,000/- ரூபாய் தொழிலாளிக்கு முதலாளி கொடுக்கிறார். இதற்காகத் தொழிலாளியை,
முதலாளி எட்டு மணிநேரம் வேலை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
இந்த முதலாளி, எப்படிக்
கணக்கிடுகிறார் என்று பார்ப்போம்.
உதாரணத்துக்கு எடுத்துக்
கொண்ட தொழிலாளி இரும்பு அலமாரி செய்பவர். ஒரு நாளைக்கு ஒர் இரும்பு அலமாரி செய்கிறார்
என்று வைத்துக் கொள்வோம்.
இங்கே நாம் ஒரு அலமாரியைத்
தான் கணக்கிடுகிறோம் என்பதை நினையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கச்சாப்பொருளுக்கு ரூபாய்
8,500/-
இயந்திரம், கையாண்ட கருவிகள்
ஆகியவற்றின் தேய்மானம், பயன்படுத்திய மின்சாரம் ஆகியவற்றின் ஒரு நாளைய செலவு ரூபாய்
500/-
தொழிலாளரின் ஒரு நாள் கூலி
ரூபாய் 1,000/- என்று முதலிலேயே பார்த்தோம்.
ஆக மொத்தம் 10,000/- ரூபாய் முதலாளி செலவு செய்துள்ளார்.
இந்த இரும்பு அலமாரியை,
சந்தையில் ரூபாய் 18,000/-க்கு முதலாளி விற்கிறார்.
விற்பதின் மூலம், கூடுதலாக
ரூபாய் 8,000/- கிடைக்கும் என்று கணக்குப்
போடுகிறார்.
லாபமாகக் கருதுகின்ற ரூபாய்
8,000/- எங்கிருந்து வந்தது? என்பது
தான் கேள்வி?
செம்மை பொருளாதார அறிஞர்களின்
கூற்றுப்படி, சராசரியாகச் சரக்குகள் அவற்றின் மதிப்புகளுக்கே விற்கப்படுகின்றன.
அப்படி என்றால் இந்த ஒர்
இரும்பு அலமாரி அதில் உள்ளடங்கிய உழைப்புக்கு, சராசரி விலையான ரூபாய் 18,000/-க்குச் சமம்.
ஆனால்,
ரூபாய் 18,000/-த்தில், ரூபாய் 9,000/-ம், இந்த இரும்பு அலமாரி, செய்ய முற்படுவதற்கு
முன்பே இருந்த மதிப்புகளாகும்.
அதாவது கச்சாப்பொருளின்
மதிப்பு ரூபாய் 8,500/- உற்பத்திக் கருவிகளின் தேய்மானம் ரூபாய் 500/- ஆக விற்பனையானதில் உற்பத்திக்கு முன்பாக
உள்ள பொருட்களின் மதிப்பு ரூபாய் 9,000/-.
மீதம் உள்ள
ரூபாய் 9,000/-.
செம்மை அரசியல் பொருளாதார
அறிஞர்களின் அனுமானத்தின்படி இந்த ரூபாய் 9,000/-.
தொழிலாளியால்
செலுத்தப்பட்ட உழைப்பில் இருந்து தோன்றியதாகும்.
தொழிலாளியுடைய எட்டு மணி
நேர உழைப்பானது, ரூபாய் 9,000/-.க்கு உரிய, புதிய மதிப்பைப் படைதிருக்கிறது. ஆக இந்தக்
கணக்கின்படி தொழிலாளியின் எட்டு மணிநேர உழைப்பு, ரூபாய் 9,000/-க்குச் சமம் ஆகும்.
ஒருவழியாக “உழைப்பின் மதிப்பை” செம்மை பொருளாதார அறிஞர்கள்
வழிகாட்டுதலின் படி கண்டுபிடித்துவிட்டோம். அப்படா… கணக்கு முடிந்தது.
“நிறுத்துங்கள் நிறுத்துங்கள்” என்று நமது உழைப்பாளி
அழைக்கிறார்.
“9,000/- ரூபாயா? எனக்கு 1,000/- ரூபாய் மட்டுமே முதலாளி கொடுத்துள்ளார்.
எனது எட்டு மணி நேர உழைப்பின் மதிப்புக்கு ரூபாய் 1,000/- தான் என்று எனது முதலாளி சத்தியம் செய்கிறாரே. இது நல்ல கதையா
இருக்கிறதே” -என்று தொழிலாளி கோபப்படுகிறார்.
உழைப்பு தான் மதிப்பைப்
படைக்கிறது என்று கணக்குப் போட்டு, பிரச்சினை தீர்ந்தது என்று நினைத்தால், பெரிய முரண்பாட்டில்
அல்லவா அகப்பட்டுக் கொண்டோம்.
எட்டு மணி நேர உழைப்பின்
மதிப்பு தொழிலாளிக்கு ரூபாய் 1,000/-மாக இருக்க, அதுவே முதலாளிக்கு ரூபாய்
9,000/-மாக உள்ளது.
இந்த9,000/- ரூபாயில் இருந்து
தொழிலாளிக்கு 1,000/- ரூபாய் கொடுத்துவிட்டு,
முதலாளி, மீதம் உள்ள ரூபாய் 8,000/-தை தனக்கென எடுத்துக் கொள்கிறார்.
இதன்படி பார்த்தால், உழைப்புக்கு
ஒரு மதிப்பல்ல, இரண்டு மதிப்புகள் இருக்கின்றது. அதுவும் மிக வேறுபட்ட இரண்டு மதிப்புகளாக
இருக்கின்றது.
பொருளாதார அறிஞர்கள் “உழைப்பின்”
உற்பத்திச் செலவாகக் கருதியது, உண்மையில் உயிருள்ள தொழிலாளியின் உற்பத்திச் செலவாகுமே
அன்றி “உழைப்பின்” உற்பத்திச் செலவு ஆகாது.
மேலும், இந்தத் தொழிலாளி முதலாளிக்கு விற்றது தன் உழைப்பை
அல்ல, “உழைப்பு சக்தியை”.
இது, மார்க்சின் சிறந்த
கண்டு பிடிப்பாகும்.
“உழைப்பு சக்தி” என்பது அதன் உடைமையாளராகிய கூலித் தொழிலாளி,
முதலாளிக்கு விற்கும் ஒரு “சரக்கு” ஆகும்.
உழைப்பு சக்தி எப்பொழுதுமே.
இப்படி ஒரு பரிவர்த்தனைச் சரக்காக இருந்து இல்லை. உழைப்பு எப்பொழுதுமே கூலியுழைப்பாய்,
அதாவது சுதந்திர உழைப்பாய் இருந்து இல்லை. ஆனால் பாட்டாளி சுதந்திர உழைப்பாளி ஆவார்.
அது என்ன சுதந்திர உழைப்பாளி?
அனைத்துக் கட்டுப்பாடுகளில்
இருந்தும் விடுபட்டவன். நிலத்தில் இருந்தும், உற்பத்திச் சாதனங்களில் இருந்தும் விடுபட்டவன்,
தான் வாழ்வதற்காக, உழைப்பு சக்தியை விற்பதைத் தவிர வேறு வழி இல்லாதவன். இவன் தான் சுதந்திரம்
பெற்ற உழைப்பாளி.
இவன் எந்த முதலாளியிடத்தும்
தமது உழைப்பு சக்தியை விற்க சுதந்திரம் பெற்றவனாக இருக்கிறான். ஆனால் உழைத்திடாமல்,
வாழவழி இல்லாதவன்.
இந்த அடிப்படையில் தான்
பாட்டாளி வர்க்கம் விற்பது, உழைப்பாக இல்லாமல், உழைப்பு சக்தியாக இருக்கிறது என்று
மார்க்ஸ் விளக்குகிறார்.
தொழிலாளி, முதலாளிக்கு
விற்பது “உழைப்பை” அல்ல “உழைப்பு சக்தியை” என்ற தெளிவோடு, மீண்டும் நாம் இரும்பு அலமாரி
நிகழ்வுக்குச் செல்வோம்.
நமது தொழிலாளி எட்டு மணி
நேரம் உழைப்பதின் மூலம், இரும்பு அலமாரியில் ரூபாய் 8,000/- பெறுமானமுள்ள புதிய மதிப்பை சேர்க்கிறார்.
உற்பத்தி செய்யப்பட்ட இரும்பு
அலமாரியை முதலாளி விற்பனை செய்து, இந்தப் புதிய மதிப்பைப் பணமாக்குகிறார்.
இதில் உள்ள 1,000/- ரூபாயை தொழிலாளிக்கு கொடுத்துபோக, மீதமுள்ள
ரூபாய் 7,000/-த்தை தனதாக்கிக் கொள்கிறார்.
எட்டு மணிநேரத்தில், தொழிலாளி
8,000/- ரூபாய் மதிப்புள்ள சரக்கை
உற்பத்தி செய்கிறார் என்றால், தொழிலாளி ஒரு மணி நேரத்தில் 1,000/- ரூபாய் பெறுமான மதிப்பை உருவாக்கி விடுகிறார்.
ஆகவே தமது கூலியில் அடங்கியுள்ள
1,000/- ரூபாய்க்கான மதிப்பை,
ஒரு மணி நேரம் வேலை செய்ததுமே, தொழிலாளி முதலாளிக்குத் திரும்பித் தந்துவிடுகிறார்.
இந்த ஒரு மணி நேர உழைப்புக்குப்
பிறகு இருவர் இடையிலும் கணக்குத் தீர்ந்துவிடுகிறது.
அதாவது “சம மதிப்புக்கு சம மதிப்பு” இருவரும் பரிமாறிவிட்டனர்,
எனவே இருவரில் எவரும் மற்றவருக்கு இனி தர வேண்டியது எதுவும் இல்லை.
“நிறுத்துங்கள் நிறுத்துங்கள்” என்று முதலாளி இப்போது
கூவுகிறார்.
“லாபத்துக்குத் தான் நான்
தொழிலாற்சாலையை நடத்துகிறேன். தொழிலாளியை நான் பகல் முழுவதுக்கும் உழைப்பதற்குத் தான்
வேலைக்கு அமர்த்தினேன். அதனால் தொழிலாளி எட்டு மணி நேரம் உழைத்துதான் ஆக வேண்டும்.
அப்போது தான் நம்மிடையே கணக்குத் தீர்வதாய்க் கொள்ள முடியும். இல்லை என்றால் எனக்கு
லாபம் கிடைக்காது.” -பதட்டத்துடன் முதலாளி இவ்வாறு கூறி முடிக்கிறார்.
முதலாளித்துவ உற்பத்தி
முறையில், நாள் முழுதும் உழைப்பதாய் தான் தொழிலாளியும் முதலாளியும், மனமுவந்து ஒப்பந்தம்
செய்து கொண்டுள்ளனர், அதனால் தொழிலாளி, முதலாளித்துவச் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு
நாள் முழுதும் உழைக்க வேண்டியவர் ஆகிறார்.
இது எந்த வகையில் நியாயம்
என்று நாம் கேள்வி எழுப்பலாம். ஆனால் இது நீதி நெறியைச் சார்ந்த விஷயமல்ல, பொருளாதாரம்
சார்ந்த விஷயம் ஆகும் அதனால் இதனைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் தீர்க்க முயல வேண்டும்.
இதனை இறுதியில் பார்ப்போம்.
இப்போது, செம்மைப் பொருளாதார
அறிஞர்களான ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகியோர்களின்
மதிப்புக் கோட்பாட்டில் உள்ள குறைபாட்டைப் பார்த்தோம்.
மதிப்பைப் படைத்தது “உழைப்பு”
என்று கருதியதால் ஏற்பட்ட சிக்கல்களைப் புரிந்து கொண்டோம்.
இந்தச் சிக்கலில் இருந்து
விடுபடுவதற்கு மார்க்ஸ் நமக்கு வழிகாட்டுனார்.
உண்மையில் தொழிலாளி, முதலாளியிடம்
விற்றது “உழைப்பை” அல்ல, “உழைப்பு சக்தியே” என்று புரிந்து கொண்டோம்.
இதுவரை உபரி மதிப்பு பற்றி,
எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையின் அடிப்படையில் புரிந்து கொண்டோம். இது சிறிய அளவு, கதை
வடிவிலானது. ஆனால் இதனைப் பொருளாதார அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது
தான் பொருளாதார அடிப்படையில் அதற்குத் தீர்வு காண முடியும்.
இதற்கு அடுத்து, மார்க்ஸ்
“கூலி விலை லாபம்” என்கிற நூலில் உபரி
மதிப்பை எவ்வாறு விளக்குகிறார் என்று பார்ப்போம்.
இதுவரை உழைப்பு-உழைப்பு
சக்தி, இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை ஓரளவுக்குப் புரிந்து கொண்டோம். அதனால் உபரி மதிப்பைப்
பற்றி மார்க்ஸ் கூறுவதை, இப்போது பார்க்கும் போது
கண்டிப்பாக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
இந்த நூலுக்கு முன்பு மார்க்ஸ்
எழுதிய “கூலியுழைப்பு மூலதனம்” என்கிற நூலிலோ, “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு
ஒரு பங்களிப்பு” என்ற நூலிலோ உபரி மதிப்பைப் பற்றி விளக்கவில்லை. “கூலி விலை லாபம்” என்கிற நூலில் தான் முதன்முதலாக
விளக்கி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மார்க்ஸ் இதனை முதல் அகிலத்தில் நடைபெற்ற
கூட்டத்தில் விளக்கியது தான் நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூலின் அடிப்படையிலும் “மூலதனம்” முதல் தொகுதியில் கூறப்பட்டதைக்
கொண்டும் சுருக்கமாகப் பார்ப்போம்.
மீண்டும் ஒன்றை நாம் நினைவில்
வைத்துக் கொள்ள வேண்டும். பணமும் மூலதனம் ஒன்றல்ல. மூலதனம் ஒரு வரலாற்று வழியில் குறிப்பிட்ட
கட்டத்தில் தோன்றியது.
முதலாளித்துவ உற்பத்தி
முறையில் காணப்படும் மூலதனம் முக்கியமான இரு பிரிவுகளாக வேலை செய்கிறது. இந்த இரண்டை
சரியாகப் புரிந்து கொண்டால் தான் “உபரி மதிப்புக் கோட்பாட்டை” தெளிவாகப் புரிந்து கொள்ள
முடியும்.
“மாறா மூலதனம்” (constant
capital), “மாறும் மூலதனம்” (variable capital). என்பதைப் பற்றித் தான்
பார்க்கப் போகிறோம்.
தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்ட
முதலாளி பல்வேறு செலவுகளைச் செய்கிறார். தொழிற்சாலைக்குத் தேவைப்படும் இடம், கச்சாப்
பொருள், இயந்திரம், கருவிகள் போன்றவற்றை வாங்குகிறார். இதற்கு வாங்கும் மூலதனத்திற்குப்
பெயர் “மாறா மூலதம்”.
தொழிலாளியின் உழைப்பு சக்திக்குக்
கூலியாகக் கொடுக்கும் மூலதனத்திற்கு “மாறும் மூலதனம்” என்று பெயர்.
மாறா மூலதனத்தினால் வாங்கியவைகளைக்
கொண்டு உற்பத்தியில் ஈடுபடும் போது, அதில் காணப்பட்ட மதிப்பு, புதிய சரக்குக்கு, பகுதிப்
பகுதியாக, சிறிது சிறிதாக மாறுகிறது-இடம் பெயர்கிறது. அவ்வாறு மாறும் போது எந்தப் புதிய
மதிப்பையும் அது படைக்கவில்லை. இங்கிருந்த பழைய மதிப்பு, புதிய சரக்கில் இடம்பெயர்ந்துள்ளது.
அதனால் தான் மாறா மூலதனத்தை “பூஜ்யம்” என்று மார்க்ஸ் கூறுகிறார்.
ஆனால் மாறும் மூலதனம் என்று கூறப்படுகிற மூலதனத்தினால் வாங்கப்பட்ட
“உழைப்பு சக்தி” என்பது, தனது மதிப்பை புதிய சரக்கில் மாற்றப்படும் போது, புதிதான மதிப்பையும்
சேர்த்துப்படைக்கிறது.
தொழிற்சாலை முதலாளி, தொழிலாளியின்
உழைப்பு சக்தியை பெற்று அதன் மதிப்பை சம்பளமாகக் கொடுத்துவிடுகிறார்.
பொருளை வாங்குவோர் அதனைப்
பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமையும் பெற்றவர் ஆவார்.
அது போலவே தொழிலாளியின்
“உழைப்பு சக்தி” என்கிற சரக்கை விலை கொடுத்து முதலாளி வாங்குகிறார். இதனை வாங்கிய முதலாளி,
தொழிலாளியை நாள் முழுதும் வேலை வாங்கும் உரிமை பெற்றவராகிறார்.
தொழிலாளியின் உழைப்பு சக்தியை
வாங்கிய முதலாளி, ஒரு நாளைக்குத் தொழிலாளியை எட்டு மணி நேரம் வேலை வாங்குகிறார். அதில்
தொழிலாளி தமக்குக் கூலியாகக் கொடுக்கப்பட்டதற்கு ஈடான மதிப்பை ஒரு மணி நேரத்தில் அந்த
மதிப்பைப் படைத்துவிடுகிறார்.
இந்த ஒரு மணி நேரம் என்பது
“அவசியமான உழைப்பு நேர”த்தால் கணக்கிடப்படுகிறது. தொழிலாளியின் பிழைப்பும் அவனது குடும்பத்தின்
வாழ்வும், தொழிலாளி வர்க்க மறுவுற்பத்திக்கும் சரிக்கட்டும் விதமாக இது கணக்கிடப்படுகிறது.
இது ஊருக்கும் ஊரும், நாட்டுக்கு நாடும் வேறுபடும்
“சம மதிப்புக்கு சம மதிப்பு
தான்” பரிமாறப்படுவது வழக்கம் என்றாலும் முதலாளித்துவ “கூலி அமைப்பு முறை”யினால் தொழிலாளி
நாள் முழுதும் முதலாளிக்கு உழைப்பதற்காக நிர்பந்திக்கப்படுகிறார். சூழ்நிலையின் காரணமாகத்
தொழிலாளியும் வேறுவழியின்றி இதற்குச் சம்மதிக்கிறார்.
தொழிலாளி தன் உழைப்பு சக்திக்கு
ஈடான ஒரு மணி நேரத்துக்கு மேலாக, ஏழு மணி நேரம் உழைக்க வேண்டி வருகிறது. இதனைக் கூடுதல்
“உழைப்பு மணி நேரம்” என்று மார்க்ஸ் கூறுகிறார்.
கூடுதலாக உழைக்கிற உபரி
உழைப்பு, உபரி மதிப்பாக, உபரி உற்பத்திப் பொருளாகப் பரிணமிக்கிறது.
இந்த உபரி நேரத்திற்கு,
முதலாளி தொழிலாளிக்கு எதையும் கொடுப்பதில்லை.
இந்த உபரி மதிப்பில் இருந்தே
முதலாளிக்கு “மூலதனம்” பெருகுகிறது. உபரி மதிப்பை, முதலாளி எதிர்பார்ப்பதும் மூலதனம்
திரட்டுவதற்கே ஆகும்.
”கூலி முறை” (Wage System) இருக்கும்வரை இந்தச் சிக்கலுக்குத்
தீர்வு கிடைக்காது. கூலி உயர்வுக்கான போராட்டமானது, தற்காலிகத் தீர்வே ஆகும். இதற்கு
நிரத்திரத் தீர்வு “கூலி அமைப்பு முறை”யின் ஒழிப்பில் தான் அடங்கி இருக்கிறது.
கூலி உயர்வுக்கான போராட்டத்தை,
கூலி அமைப்பு முறை ஒழிப்பதற்கான போராட்டமாக, வர்க்கப் போராட்டமாக மாற்ற வேண்டும்.
இது உழைப்பாளிகளின் மனதை
மட்டும் சார்ந்த விருப்பம் அல்ல, முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் உள்முரண்பாடு
காரணமாகும். உள்முரண்பாடு முற்றுகிற போது அதற்குத் தீர்வாக முதலாளித்துவம் தூக்கி எறியப்படுகிறது.
மார்க்சிய வரலாற்றியல்
பொருள்முதல்வாதமும், மார்க்சிய அரசியல் பொருளாதாரமும் இதனையே கூறுகிறது.
மார்க்சிய அரசியல் பொருளாதாரம்
ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையின் தோற்றம், வளர்ச்சி, நலிவு பற்றி விளக்குகிறது. முதலாளித்துவத்தின்
தோற்றத்தைப் பற்றி ஓரளவுக்குப் பார்த்தோம் அதே போல அதன் அழிவு பற்றிப் பார்ப்போம்.
சரக்கு உற்பத்தியை அதிகரிப்பதிலும்,
உபரி மதிப்பை பெருக்குவதிலும், மூலதனம் திரட்டுவதிலும் பல்வேறு முதலாளிகளிடையே போட்டி
நிலவுகிறது.
இந்தப் போட்டியினால் உற்பத்தி
சக்திகள் நவீனமாகிக் கொண்டே செல்கிறது. முதலாளித்துவச் சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களின்
அதி நவீன வளர்ச்சியின், அதீதத் தன்மையை, நாம் பார்த்துக் கொண்டு தான இருக்கிறோம்.
அடுத்து, உபரி மதிப்பின்
இரண்டு வகைகளைப் பார்ப்போம்.
உபரி மதிப்பில் இரண்டு
தன்மைகள் காணப்படுகிறன, ஒன்று “அறுதி உபரி மதிப்பு”
(Absolute
Surplus Value),
மற்றொன்று “ஒப்பீட்டு உபரி மதிப்பு” (Relative Surplus Value).
நாம் இதுவரை பார்த்தது
அறுதி உபரி மதிப்பு.
தொழிலாளியின் உழைப்பு நேரத்தைக்
கூட்டுவதின் மூலம் கிட்டுவது அறுதி உபரி மதிப்பு.
உழைப்பாளியின் எட்டு மணி
நேர உழைப்பை, 10 மணி நேரமாகவோ, 12 மணி நேரமாகவோ நீட்டிப்பதால் கிடைப்பது அறுதி உபரி
மதிப்பு ஆகும்.
தொழிலாளியின் அவசியமான
உழைப்பு நேரத்தைக் குறைப்பதின் மூலம் கிடைப்பது ஒப்பீட்டு உபரி மதிப்பு.
அவசியமான உழைப்பு நேரத்தை
பல வழிகளில் குறைக்கலாம், முக்கியமாக நவீன இயந்திரங்களை, மற்ற முதலாளிகளுக்கு முன்பாகப்
பயன்படுத்துவதின் மூலம் கிடைக்கிறது.
நவீன இயந்திரங்களை முதலில்
பயன்படுத்துவதால் இந்தக் குறிப்பிட்ட முதலாளிக்கு கிடைக்கும் உபரி மதிப்பு ஒப்பீட்டு
உபரி மதிப்பு ஆகும்.
அதாவது பிற முதலாளிகளுடன்
ஒப்பிடும் போது இவருக்குக் கூடுதல் உபரி மதிப்பு கிடைப்பதால் இதற்கு ஒப்பீட்டு உபரி
மதிப்பு என்று பெயர்
இன்று இந்தச் சுருக்கமான
விளக்கம் போதுமானது.
இதன் மூலம் அதாவது ஒப்பீட்டு
உபரி மதிப்பை அதிகரிப்பதின் மூலம், முதலாளித்துவத்தின் வளர்ச்சி ஏற்படுகிறது என்பது
மட்டுமல்ல, அதன் வீழ்ச்சிக்கும் அதுவே காரணமாகிறது, அதுமட்டும் இல்லாது சோஷலிசத்துக்கு
வழியாகவும் இருக்கிறது.
அது எப்படி என்று பார்ப்போம்.
“முதலாளித்துவ வர்க்கத்தால்
ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும், இவற்றுடன்
கூடவே சமூக உறவுகள் அனைத்திலும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது”
என்று “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” கூறுகிறது.
இது முதலாளித்துவத் தொடக்கக்
காலத்திற்கு மட்டுமல்லாது, ஏகாதிபத்திய-உலகமயமாதல்-நிதிமூலதனக் கட்டத்துக்கும் பொருத்தமாக
இருக்கிறது.
முதலாளிகளுக்கு இடையேயான
போட்டி உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியும் அதனால் மிகை உற்பத்தியும் ஏற்படுகிறது.
இந்த மிகை உற்பத்தியால் சந்தைகளில் சரக்குகள் விற்காமல் தேங்கிவிடுகிறது. அப்போது பொருளாதார
நெருக்கடி ஏற்படுகிறது.
இந்தப் பொருளாதார நெருக்கடியின்
போது சரக்கு உற்பத்தி தடைப்பட்டுப் போகிறது.
இந்த வளர்ச்சி அடைந்த உற்பத்தி
சக்திகளைத் தொடர்ந்து நிர்வகிப்பதற்கு முதலாளித்தும், சக்தி அற்றுப் போனதையே இந்தப்
பொருளாதார நெருக்கடி எடுத்துக் காட்டுகிறது.
முதலாளித்துவ வர்க்கம்
தனது சொந்தப் பொருளுற்பத்தி சக்திகளை நிர்வகிப்பதற்கான திறனை இழந்துவிட்டது.
முதலாளித்துவ வர்க்கம்,
வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளை நெறியாண்மை செய்ய முடியாமல் திணருவதையே இத்தகைய
நெருக்கடிகள் காட்டுகிறது.
பொருளுற்பத்தி முறை, பரிவர்த்தனை
முறையை எதிர்த்துக் கலகம் செய்கிறது. உற்பத்தி உறவுகளில் ஏற்படுகிற கலகம் சமூகத்தில்
பிரதிபலிக்கிறது.
சமூகம் கொந்தளிக்கிறது. சமூகம்- புரட்சிக்குத் தயாராகிறது.
முதலாளித்துவ உற்பத்தி
முறைக்கு, இந்த உற்பத்தி உறவுகள் பழைமைபட்டுப் பொருந்தாமல் தூக்கி எறியப்படுகிறது.
முதலாளித்துவத்துக்குச்
சாவு மணி அடிக்கப்படுகிறது. உடைமைப் பறித்தோரின் உடமை பறிக்கப்படுகிறது.
முதலாளித்துவம் தானே வளர்த்த
உற்பத்தி சக்திகளை நெறியாண்மை செய்ய முடியாமல் அழிந்து போகிறது.
முதலாளித்துவத்தின் கைகளில்
இருந்து நழுவி கொண்டிருக்கும், சமூகமயமான உற்பத்திச் சாதனங்களை, சமூகப் புரட்சியின்
மூலம், தொழிலாளி வர்க்கம் பொதுச் சொத்தாக்குகிறது.
தொழிலாளர்களின் ஆட்சியின்
மூலம. “கூலி முறை” என்கிற சுரண்டலின் ஆதிக்கம்
முடிவுக்கு வருகிறது.
உபரி மதிப்பு என்கிற மார்க்சின்
கோட்பாடு, கூலி முறை என்கிற சுரண்டல் அமைப்பை ஒழிப்பது வரை செல்கிறது.
அரசியல் பொருளாதாரத்தின்
நோக்கம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி, மறைவு ஆகியற்றை ஆராய்வதாகும்.
இன்று நாம் முதலாளித்துவத்தின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவற்றைப் பற்றிச் சுருக்கமாகப்
பார்த்தோம்.