Friday, 4 June 2021

இயந்திர மனிதனும் உபரி மதிப்பும் (Robot and surplus value)

இயந்திர மனிதனை பொருள் உற்பத்தியில் ஈடுபடுத்துவதினால், அதிகமான உழைப்பாளர்களை வேலையில் இருந்து தூக்கி எறியப்படுகின்றனர். உழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து போவதினால், மார்க்சின் உபரி மதிப்பு என்கிற கோட்பாடு இன்று பொருத்தமற்றுப் போகிறது அல்லது தேவையற்றுப் போகிறது என்ற கருத்தின் அடிப்படையில் இந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது.

இதற்குப் பதில்:-

 

சில காலம்வரை குறிப்பிட்ட முதலாளிக்கு, அதாவது முதலில் இயந்திர மனிதனை உற்பத்தியில் ஈடுபடுத்தும் முதலாளிக்கு உபரி மதிப்புக் கிடைக்கிறது. இந்த உபரி மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகும். இந்த ஒப்பீட்டு உபரி மதிப்பு இயந்திர மனிதனால் கிடைக்கவில்லை. இயந்திர மனிதனைப் பயன்படுத்தும் தொழிற்சாலையில் உழைப்பைச் செலுத்திய உழைப்பாளர்களால் தான் கிடைக்கிறது. இந்த உழைப்பாளர்களின் அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதினால் 

கிடைத்துள்ளது.

 

உழைப்பாளியின் உழைக்குத் திறனை கூட்டுவதினால் கிடைக்கிற, இப்படிப்பட்ட உபரிமதிப்பு, இயந்திர மனிதனைப் பயன்படுத்தாத முதலாளிகளுக்குக் கிடைப்பதில்லை, அதனால் ஒப்பீட்டு அளவில் கிடைக்கும் இந்த உபரி மதிப்பு, ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று அழைக்கப்படுகிறது.

 

தொழிலாளி உழைக்கின்ற காலத்தை நீட்டிப்பதின் மூலம் முதலாளிக்குக் கிடைக்கும் உபரி மதிப்புக்கு அறுதி உபரி மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. கூலியாகக் கொடுக்கிற, அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதின் மூலம் முதலாளிக்குக் கிடைக்கும் உபரி மதிப்பு, ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகும்.

 

காலம் செல்லசெல்ல, அந்த இயந்திர மனிதனை பெரும்பான்மையான முதலாளிகள் பயன்படுத்தும் போது இந்த ஒப்பீட்டு உபரி மதிப்பு கிடைப்பதில்லை. பெரும்பான்மையான முதலாளிகள் இயந்திர மனிதனை பயன்படுத்தும் போது குறிப்பிட்ட முதலாளிக்குக் கிடைக்கிற ஒப்பிட்டு உபரிமதிப்பு நின்று போகிறது.

 

இந்தக் கட்டத்தில், இயந்திர மனிதனின் நிலை என்ன என்று பார்ப்போம்.

 

இயந்திர மனிதனில் உள்ளடங்கிய மதிப்பு, சிறுகசிறுக புதிய உற்பத்திப் பொருளுக்கும் இடம்பெயர்கிறது. பழைய இயந்திராக இருந்தாலும் புதிய இயந்திரமாக இருந்தாலும் இரண்டும் விளைபொருளில் புதிய மதிப்பைப் படைப்பதில்லை. உழைப்பே புதிய மதிப்பைப் படைக்கிறது என்பது மார்க்சிய அரசியல் பொருளாதார அடிப்படை.

 

இந்த இயந்திர மனிதன், மாறா மூலதனத்தால் வாங்கப்பட்டது. அதாவது மதிப்பை படைக்காத மூலதனத்தால் வாங்கப்பட்டது. உழைப்பு சக்தி, மாறும் மூலதனத்தால் வாங்கப்பட்டது. மாறும் மூலதனத்தால் வாங்கப்பட்ட உழைப்பே மதிப்பைப் படைக்கிறது. 

 

மற்றொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. மாறா மூலதனத்தின் வளர்ச்சி என்பது முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கிலும், முதலாளித்துவம் சோஷலிசமாக மாறுவதற்கான இயக்கப் போக்கிலும் முக்கியமானது என்று லெனின் கூறியதை நினைவு கொள்வோம். இது போன்ற உற்பத்திச் சக்தியின் வளர்ச்சி என்பது முதலாளிக்கான வளர்ச்சி மட்டுமல்ல, இந்த வளர்ச்சி முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறுவதற்கான காரணமாகவும் அது அமைகிறது.        

 - இதுதான் பதில்.

இயந்திர மனிதன் போன்ற உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை முதலாளித்துவ அறிஞர்கள் முதலாளித்துவ வளர்ச்சியாகப் பார்ப்பது போலவே கம்யூனிஸ்டுகள் எப்படி பார்க்க முடியும். இது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. மார்க்சிய அடிப்படைப் புரிதல் இல்லாது போனால், இன்றைய நிலைக்கான மார்க்சிய அரசியலை எப்படி நடத்திட முடியும். இத்தகைய கம்யூனிஸ்டுகளிடையே வரலாற்றியல் பொருள்முதல்வாதம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படைப் புரிதல் இல்லை என்பதையே காட்டுகிறது.

லெனின்:-

“.. மிகமிகப் புதுமையானதும் முக்கியமானதும் மூலதனத் திரட்சி பற்றிய மார்க்சின் பகுப்பாய்வாகும். மூலதனத்தின் திரட்சி என்றால் உபரி மதிப்பின் ஒரு பகுதி மூலதனமாக மாற்றப்படுவது; உபரி மதிப்பை முதலாளியின் சொந்தத் தேவைகளையோ, மன விருப்பங்களையோ நிறைவு செய்வதற்காகப் பயன்படுத்தாமல் புதிய உற்பத்திக்காகப் பயன்படுத்துவது. (ஆடம் ஸ்மித் முதல்) முந்தைய மூலச்சிறப்புள்ள அரசியல் பொருளாதாரவாதிகள் எல்லோரும் செய்த தவறை மார்க்ஸ் வெளிப்படுத்தினார். அவர்கள் எல்லோரும் மூலதனமாக மாற்றப்படும் உபரி மதிப்பு முழுவதும் மாறும் மூலதனமாகும் என்று எண்ணிக் கொண்டார்கள். ஆனால் உண்மையிலேயே உபரி மதிப்பு உற்பத்திச் சாதனங்களுக்கு ஒரு பங்காகவும், மாறும் மூலதனத்துக்கு மற்றொரு பங்காகவும் பிரிக்கப்படுகிறது. (மூலதனத்தின் மொத்தத் தொகையில்) மாறும் மூலதனத்தின் பங்கை விட மாறா மூலதனத்தின் பங்கு அதிக வேகத்துடன் வளர்ச்சி பெறுவது முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கிலும், முதலாளித்துவம் சோஷலிசமாக மாறுவதற்கான இயக்கப் போக்கிலும் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.”

(காரல் மார்க்ஸ் (மார்க்சியத்தைப் பற்றிய விரைவுரையுடன்

அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்))

      முதலாளித்துவத்தில் உற்பத்திச் சாதனங்களின் நவீன வளர்ச்சி முதலாளித்துவத்தின் அழிவை நோக்கியும் சோஷலிச மாற்றத்தை நோக்கியும் செல்கிறது என்பதுதான் மார்க்சியம். மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளாமல் தன்னை மார்க்சியவாதி என்று கூறிக் கொண்டு மார்க்சியத்தைக் கேள்வி கேட்டுக் கொண்டிப்பவரை என்ன செய்வது. மார்க்சியத்தை மறுப்பவர்கள் அளவுக்கு மார்க்சியத்தை ஏற்பவர்கள் மார்க்சியத்தைப் படிப்பதில்லை என்பதே பெரிய குறை.

மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்வோம் மார்க்சிய வழியில் சமூகத்தை மாற்றுவோம்.

No comments:

Post a Comment