Monday, 2 June 2014

K.R.அதியமானின் தனிப்பட்ட விருப்பம், எப்படி பொது விருப்பமாகும்?

K.R.அதியமான்:-"எத்தனையோ விஞ்ஞான கருத்தாக்கங்கள் பின்னாட்களில் பொய்பிக்கப்பட்டுள்ளன. உபரி மதிப்பு கோட்பாடு அப்படி பொய்பிக்கபடவே முடியாத கோட்பாடா என்ன?"

K.R.அதியமான் அவர்களின் அடிமன விருப்பம் இது தான். இதனை செயற்படுவதற்கு அடுத்தவர்களின் முடிவுகளின் மீதெல்லாம் தலையிடுகிறார். மார்க்சிய அடிப்படைகளை கறாராக பின்பற்றுபவர்களை கண்டால் அவருக்கு எரிச்சல் வருகிறது. அனாதல் கூறுகிறார், "Post-Marxian scholars யாரையும் நீங்க ஏற்பதில்லை." Post-Marxian-யை உடன்படுபவர்கள் தான் அதனை ஏற்பார்கள். உடன்படாதவர்கள் மறுக்கத் தானே செய்வர். இந்த மறுப்பை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் K.R.அதியமான் இல்லை.

இருந்தாலும் அவர் புரிந்து கொள்வதற்கு முயற்சியை  முகநூலி எடுத்தேன். அவைகளே இந்த உரையாடல்:-

(அ.கா.ஈஸ்வரன்:- எங்களது தத்துவப் பார்வை இயக்கவியல் பொருள்முதல்வாதம். இந்த அடிப்படையில் அணுகும் போது எங்களுக்கு மார்க்ஸ் முடிவுகள் சரியாகவே இருக்கிறது. பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களால் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை விஞ்ஞான வழிப்பட்டதாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் நீங்கள் என்ன விளக்கம் கேட்டாலும், அதற்கு எவ்வளவு விளக்கங்கள் கொடுத்தாலும், உங்களால் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. மார்க்சிய அரசியல் பொருளாதாரம் வர்க்க சார்புடையது அதே போல மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை எதிர்ப்பவர்கள் முதலாளித்துவ வர்க்க சார்புடையவர்களே என்பதில் சந்தேகமில்லை.

//அதை முழுவதுமாக உள்வாங்க மார்க்சியத்தை விட்டு சற்று வெளியே வந்து பார்கக வேண்டும்.// என்ற உங்களது கருத்து எங்களைப் பொருத்தளவில் இயலாத காரியம். அனைத்தையும் மார்க்சிய அரசியல் பொருளாதாரப் பார்வையிலேயே படிப்போம்.

நான் படிக்கின்ற எல்லா அரசியல் பொருளாதார நூல்களையும் மார்க்சியக் கண்ணோட்டத்தில் தான் படிப்பேன். )

(//மார்க்ஸின் விதி படி சமூக மாறுதல்கள் உருவாகவில்லை என்பதையே வரலாறு சொல்கிறது.//  உங்கள் பார்வையின் படி கூறுகிறீர்கள். அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்குக் காரணத்தையும் நீங்கள் //, 2003 இருந்து 2008 வரை உலக பொருளாதரமே செயற்க்கையாக வளர்ந்தது’ ; ஒரு பலூனில் தொடர்து காற்றை செலுத்துவது போல் ஊதி பொருகியது.// என்று செயற்கையாகப் பார்க்குகிறீர்கள். நீங்கள் குறிப்பிடுகின்றன "செயற்க்கையாக வளர்ந்தது" என்பதை முதலாளித்துவ உற்பத்தி முறை ஏன் திரும்பதிரும்ப சந்திக்கிறது என்ற காரணத்தை இன்னும் உங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை அல்லது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு அந்த நெருக்கடி மார்க்ஸ் கூறிய முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்ளார்ந்த முரணின் வெளிப்பாடாகப் பார்க்கிறேன். இதன்படி மார்க்சிய விஞ்ஞானத் தன்மையை மெய்பித்துக் கொண்டு தான் இருக்கிறது.)

(அ.கா.ஈஸ்வரன்:- நாம் இருவரும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை வேறுவிதமாகப் பார்ப்பதற்குக் காரணம் நமது அணுகுமுறையின் வேறுபாடேயாகும். இதனை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

உங்களது கருத்தை ஒற்றி பேராசிரியர் எழுதினாலும் ஒரு தொழிலாளி எழுதினாலும் ஒரு சாமானியன் எழுதினாலும் இதற்குப் பொருள் உங்களது கருத்தில் அவர்கள் நிற்கிறார்கள் என்பது தான் உண்மை. அதுவே அனைவருக்குமானதாக ஆகாது.

கடந்த 1000 ஆண்டுகளின் மிகப் பெரிய சிந்தனையாளர் யார்? என்று பிபிசி செய்தி நிறுவனத்தால்  கேட்கப்பட்டது, அதற்கு அளித்த பதிலில் முதலிடம் பிடித்தவர் காரல் மார்க்ஸ்.
http://news.bbc.co.uk/hi/english/static/events/millennium/sep/winner.stm

பெருவாரியான மக்களால் மிகப் பெரிய சிந்தனையாளராக ஏற்றுக் கொண்ட மார்க்சின் சிந்தனைகளை, நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டயாப்படுத்த முடியுமா? முடியாது. அவரவர் அணுகுமுறையின் படி சிந்தனையின் முடிவுகளை ஏற்பர் என்பதே நடைமுறை உண்மை. ஆனால் நீங்கள் //எமது பொருளாதார பேராசிரிய நண்பர், எனது கட்டுரை பற்றி எழுதிய மின்மடல்// என்று எல்லா இடங்களிலும் பதிவிட்டு வருகிறீர்கள்.)

(அ.கா.ஈஸ்வரன்:- கிறித்துவர்கள் செய்கின்ற ஊழியத்தைப் போல் நீங்கள் முகநூலில் உங்கள் கருத்தை திணித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் எனது கருத்தை தெரிவிக்கிறேன். எனது கருத்தை ஏற்று விளக்கம் கேட்பவர்களுக்கு விளக்கம் கொடுக்கிறேன். மார்க்சியம் கற்போம் என்ற முகநூல் குழவில் இதனைத் தான் செய்கிறேன்.

மார்க்சிய ஒருமைக்கும் அத்வைத ஒருமைக்கும் உள்ள வேறுபாட்டை கூறுகிறேன். அத்வைத ஒருமை தவறு மார்க்சிய பொருளாயத ஒருமையே அனைவருக்குமானது என்று கூறவில்லை. தத்துவங்கள் வர்க்கச் சார்பானவை என்பதே எங்களது கருத்து. அதனால் தான் தெளிவோடு மாற்றுக் கருத்தை அணுகமுடிகிறது. ஆனால் நீங்கள் தான் உங்களது கருத்து அனைவருக்குமானதாக பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.)

(மார்க்சிவாதிகளான நாங்கள் இயற்கையையும் சமூகத்தையும் பொருள்முதல்வாதக் கணோட்டத்தில் அணுகுகிறோம். இயற்கையை பற்றிய தத்துவத்தை இயக்கவியல்பொருள்முதல்வாதம் என்றும் சமூகம் பற்றி தத்துவத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்கிறோம். அரசியல் பொருளாதாரத்தை, மார்க்சியர்களான நாங்கள், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் படியே  அணுகுகிறோம். எங்களுக்கு இந்த அணுகுமுறையே சரியாகப் படுகிறது, முதலாளித்துவ சுரண்டலை இதுவே தெளிவாக வெளிப்படுத்துகிறது. அதனால் இதனையே பின்பற்றுகிறோம்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தோன்றும் பொருளாதார நெருக்கடியை, மார்க்சிய வழியில் புரிந்து கொள்ளாமல் //2003 இருந்து 2008 வரை உலக பொருளாதரமே செயற்க்கையாக வளர்ந்தது’ ; ஒரு பலூனில் தொடர்து காற்றை செலுத்துவது போல் ஊதி பொருகியது.// என்றும்  "பொருளாதார மந்தங்களை தவிர்க்க தேவையானவை" என்று நீங்கள் பட்டியல் இடுவது அனைத்துவம் நிர்வாக தொடர்பானவையாகவே இருக்கிறது. ஆனால் மார்க்சியர்களுக்கு பொருளாதார நெருக்கடி முதலாளித்து உற்பத்தி முறையின் உள்ளார்ந் சிக்கலாகப் படுகிறது. இங்கே எங்களது பொருளாதாரத்துக்கான அரசியல் பாட்டாளி வர்க்க சார்புடையதாக இருக்கிறது. உங்களது பொருளாதாரத்துக்கான அரசியல் முதலாளித்துவத்துக்கான சார்பாக இருக்கிறது.

"இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்." கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நூலில் எங்களது சமூகப் பார்வை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கக் கோட்பாட்டை எதிர்க்கும் உங்களை முதலாளி வர்க்கக் கோட்பாளர் என்று கூறாமல் எப்படி இருக்க முடியும். மார்க்சியத்தை விமர்சிக்க வந்தவருக்கு, இந்த வார்த்தையைக் கேட்டாளே கொதிப்படைவது வியப்பையே தருகிறது. //இதுனால தான் இது போன்ற ஆட்டங்களுக்கு நான் வர விரும்புவதில்லை.// மார்க்சியத்தை விமர்சிப்பீர்கள் அதனை எங்களது கண்ணோட்டத்தில் பதிலளிக்காமல் வேறுவிதமாக எப்படி விமர்சிக்க முடியும்.

மார்க்ஸ், எங்கெல்ஸ்  இருவரும் "ஜெர்மன் சித்தாந்த்தம்" என்ற நூலில் கூறுகிறார்கள்:- ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆளும் வர்க்கங்களின் கருத்துக்களே கோலோச்சும் கருத்துக்களாக விளங்கும். அதாவது, சமுதாயத்தின் பொருள்வகை சக்தியை     ஆளும் வர்க்கம், அதே சமயம் அதன் கோலோச்சும் அறிவுத்துறை சக்திகளாகவும் விளங்கும். பொருள் உற்பத்தி சாதனங்களைத் தனது செயலாட்சியில் வைத்திருக்கும் வர்க்கம், அதேசமயம் அறிவுத்துறை உற்பத்தி சாதனங்கள் மீது கண்காணிப்புச் செலுத்தும், எனவே அதன் மூலம், பொதுப்படச் சொன்னால், அறிவுத்துறை உற்பத்தி சாதனங்கள் தம் வசம் இல்லாதவர்கள், அதற்குக் கீழடங்கி இருப்பார்கள். கோலோச்சும் கருத்துக்கள் என்பவை மேலோங்கி நிற்கும் பொருள்வகை உறவுகளின் லட்சிய வெளிப்பாடும், கருத்துக்களாகப் புரிந்து கொள்ளப்பட்ட மேலோங்கி நிற்கும் பொருள்வகை உறவுகளும் தவிர வேறு எதுவுமல்ல.

கோலோச்சும் கருத்துக்கள் என்பவை மேலோங்கி நிற்கும் பொருள்வகை உறவுகளின் லட்சிய வெளிப்பாடும், கருத்துக்களாகப் புரிந்து கொள்ளப்பட்ட மேலோங்கி நிற்கும் பொருள்வகை உறவுகளும் தவிர வேறு எதுவுமல்ல என்பதே எங்களது முடிவு. இன்றை சமூகத்தில் கோலோச்சும் கருத்தை நீங்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கும் போது உங்களை முதலாளித்துவ வர்க்கத்தின் கருத்துரையாளர் என்று கூறாமல், முதலாளியையும் பாட்டாளியையும் விடுவிக்க வந்த இறைதூதன் என்றா கூறமுடியும்.

சமூகம் வர்க்கமாக பிளவுட்டுள்ள நிலையில் கருத்துக்கள் வர்க்க சார்புடையவையாகவே இருக்கும், நீங்கள் பாட்டாளி வர்க்கத்தை சுரண்டுகிற, முதலாளித்துவ கருத்துரையாளர் என்று கூறுவது எங்களைப் பொருத்தளவில் சரியாது. கம்யூனிஸ்டுகள் எதனையும் மறைப்பது கிடையாது. அதனால் தான் பாட்டாளி வாக்கத்தின் ஆட்சி என்பது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று கூறுகிறோம். இன்றைய ஆட்சி முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரம் என்று கூறுவதற்கு உங்களுக்கு வேண்டுமானால் சங்கடமாக இருக்கலாம். நாங்கள் யாதாத்த உண்மையே பேசுகிறோம்.
//. பாட்டளி வர்கத்தின் நலன்களை பேண சரியான சந்தை பொருளியல் பாணி தான் சிறந்தது என்று தரவுகளுடன் பேசுகிறேன். // தரவுகளுடன் பேசினால் முடிவுகள் ஒரே மாதிரியாக இருக்குமா என்ன? பொருளாதார நெருக்கடிப் பற்றிய தரவுகள் உங்களை வேறுமாதிரி பேசவைக்கிறது, எங்களை வேறுமாதிரி பேசவைக்கிறது. இந்த வர்க்க சார்ப்பை புரிந்து கொள்ளாமல் மார்க்சியர்களுடம் விமர்சனத்துக்கு வராதீர்கள். வர்க்கத்துக்குப் அப்பாற்பாட்ட பார்வை எங்களுக்குக் கிடையாது.)

(//அறிக்கையில் சொன்னால் அது தான் இறுதியாகிவிடுமா என்ன ?// அறிக்கையின்  மார்க்ஸ் எங்கெல்ஸ் முன்னுரைகளைப் படித்திருந்தால், அறிக்கை இறுதியாகிவிடுமா என்பது போன்ற கேள்விகைகளை நீங்கள் எழுப்பியிருக்க மாட்டீர்கள்.

அறிக்கையில் சொன்னது எனக்கு ஏற்புடையதாக இருப்பதால் அதனையே நான் ஏற்கிறேன்அறிக்கையில் கூறப்பட்ட அடிப்படைக் கோட்பாடுகள் தான் எங்களுக்கு வழிகாட்டி. உங்களுக்கு  யாரெல்லாம் ஏற்புடையவரோ அவர்களை எல்லாம் நான் படித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள். உங்களுக்கு ஏற்புடையதேயே ஏற்கிறீர்கள். அதே போல் எனக்கு ஏற்புடையதையே நான் ஏற்கிறேன்.

அறிக்கையில் காணப்படும் கருத்து எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது என்பதனால் அதனை நான் பின்பற்றுகிறேன். அறிக்கையில் காணப்படும் கருத்து உங்களோடு முரண்படுவதால் அதனை நீங்கள் மறுக்கிறீர்கள். இதனை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

உங்கள் கருத்தோடு உறுதியாக நிற்பதற்கு என்ன உரிமை உங்களுக்கு இருக்கிறதோ அதே உரிமையும் எனக்கும் இருக்கிறது. உங்களது கருத்துக்களை கேட்டவுடன் நான் மாறியாக வேண்டும் என்ற உங்களது நினைப்பை நினைக்கும் போது வியப்பையே ஏற்படுத்துகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழிலாளர்களை சுரண்டும் விதத்தை அம்பலப்படுத்திய உபரிமதிப்பை ஏற்காதவரை, பாட்டாளி வாக்க நல விரும்பி என்று எவ்வாறு கூறமுடியும்.

இஸ்லாமியர்களுக்கு குரான், கிருத்துவர்களுக்கு பைபிள், இந்துக்களுக்கு பிரஸ்தானதிரியம், எங்களுக்கு மார்க்ஸ், உங்களுக்கு மார்க்சிய எதிரியான அனைத்து பொருளாதார நூல்களும் இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது.)

(//உபரி மதிப்பு கோட்பாடு அப்படி பொய்பிக்கபடவே முடியாத கோட்பாடா என்ன ? எதுவும் அறுதியில்லை.//  பொய்பிக்க வேண்டும் என்ற உங்களது விருப்பத்தை எங்கள் மீது எப்படி திணிக்க முடியும். நீங்கள் பேசுவது அனைத்தும் எனக்குப் பொய்யாகத் தான் படுகிறது, அதனால் அதை எல்லாம் நீங்கள் விட்டுவிடுங்கள் என்று கூறமுடியுமா?

உபரி மதிப்பை எதிர்க்கின்ற உங்களது கோட்பாடு என்பது புதியதா என்ன? உபரி மதிப்பை மார்க்ஸ் கண்டுபிடித்தது முதல் சந்தித்து வருகின்ற ஒன்றே அது.

மார்க்சியத்தின் மீது நாங்கள் பிடிப்போடு இருப்பது உங்களை வேதனைப்படுத்துகிறது. அதற்கு நாங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

டெனிஸ் கொலன் எழுதிய "மார்க்ஸின் கொடுங்கனவு" போன்ற மார்க்சிய எதிர்ப்பான நூல்கள் ஆயிரக்கணக்காக வந்தாலும் எங்களது மார்க்சிய சிந்தனையை சிதைத்திட முடியாது என்பதே உண்மை. இது போன்ற நூல்களை சந்தித்த எங்களுக்கு, உங்களது கருத்துக்கள் பெரிதாகப்படவில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

//பல குறைகள் இருந்தாலும் அடிப்படை ஜனனாயக ம் அங்கு இந்தியாவை விட செம்மையாகவே இருக்கிறது// உங்களது அமெரிக்க பற்றை என்வென்பது.

அடுத்த நாட்டினுள் நுழைந்து தனது நலன்களை திணிக்கும் அமெரிக்கா உங்களுக்கு சிறந்த ஜனநாயக நாடாகத் தெரிகிறது. எண்ணை வயல்கள் நிறைந்த நாட்டின் மக்கள் மீது அமெரிக்காவின் ஜனநாயக!!!! பாய்ச்சல் எல்லாம் உங்களுக்கு சிறந்த ஜனநாயகமாகத் தெரிகிறது. எண்ணை வயல் கொண்ட நாட்டின் அதிபர், அமெரிக்க முதலாளிகளின் நலன்களுக்கு எதிராய் நின்றால் நயவஞ்சகமாக கொல்லும் போக்கு உங்களுக்கு சிறந்த ஜனநாயகமாகத் தெரிகிறது.

இந்த நிலைப்பாடுகளின் வெளிப்பாடே //உபரி மதிப்பு கோட்பாடு அப்படி பொய்பிக்கபடவே முடியாத கோட்பாடா என்ன ? எதுவும் அறுதியில்லை.//  என்ற உங்களது கருத்துக்கள் என்பதை நான் தெரிந்தே உங்களோடு பேசிவருகிறேன். நீங்கள் அமெரிக்க தொழில்முனைவோர்களின் நலன்களைப் பிரதிபலிக்கலாம், மார்க்சியத்தை ஆதரித்து நாங்கள் தொழிலார்களின் நலனில் அக்கறை செலுத்தினால் கடுப்பாவீர்கள்)

(K.R.அதியமான்:- //வெங்கடேஸ் ஆதிரயிவின் நூலை பற்றிய விமர்சனத்தில் அவர் முதலாளிகளுக்கு சார்பாக பேசுகிறார் என்று ஒரு வரியை கொண்டு முடிவு செய்கிறிர்கள்.//  மார்க்ஸ் எழுதிய "அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு" என்ற நூலிற்கு, எங்கெல்ஸ் தமது மதிப்புரையில் எழுதியுள்ளார், "இந்தக் கட்சி (ஜெர்மன் பாட்டாளி வர்க்கக் கட்சி) தோன்றியதில் இருந்துதான் தனிப்பட்ட விஞ்ஞானம் என்ற முறையில் ஜெர்மன் அரசியல் பொருளாதாரம் தொடங்குகிறது. வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதம் இந்த ஜெர்மன் அரசியல் பொருளாதாரத்தின் அவசியமான அடிப்படையாகும்,..." ஆக வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அரசியல் பொருளாதாரத்துக்கு அவசியமான அடிப்படையாகும். இந்த வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை வெங்கடேஷ் ஆத்ரேயா ஏற்றுக் கொள்ளாமல் சிதைந்த வகையில் வெளிப்படுத்துயுள்ளார்:-
உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் ஒரு சமூதாயத்தின் கட்டுமானம் அல்லது பொருளாதார அடித்தளம் என்று பல மார்க்சிய எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர். .. ..

சில மேற்கட்டுமானமும் அடித்தளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அடிக்கட்டுமானம் தான் மேல்கட்டுமானத்தின் மீது       தீர்மானகரமான செல்வாக்கைச் செலுத்துகிறது என்பதும் வலியுறுத்தப்படுகிறது."

உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் சமூகத்தின் அடித்தளம் என்று மார்க்ஸ், எங்கெல்ஸ், மற்றும் லெனின் கூறியிருக்க, பல மார்க்சிய எழுத்தாளர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

மேலும் எனது விமர்சனத்தில்:-

"பொருளாதார நியதிவாதம் என்றால் என்னஅடித்தளம் மேல்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது என்பதை மட்டும் ஏற்றுக் கொண்டு, மேல்கட்டமைப்பினுடைய அடித்தளத்தின் மீதான வரம்விற்குட்பட்ட தாக்கத்தை, ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதாகும். அது மட்டுமல்லாது அடித்தளம் மேற்கட்டமைப்பை தானே நிறுவிக் கொள்ளும் என சோம்பியிருப்பதுமாகும். இதை புரியவைப்பதற்கு எந்த சிரமும் எடுக்கத் தேவையில்லை. ஆனால், மேல்கட்டுமானத்தின் சுதந்திரம் சார்புநிலையானது என்பதை வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதனால் தான் சிக்கல் ஏற்படுகிறது.

சித்தாந்த .. .. துறைகளை மற்றவற்றுடன் ஒப்பிடும்போது கணிசமான அளவில் சுதந்திரமாகச் செயல்படுகின்றன என்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறது. ஆனால், அதே நேரத்தில் மேலே விளக்கப்பட்ட விரிவான பொருளில் அடிப்படையில் பொருளாதாரம் இறுதியாகத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்று வரலாற்றுப் பொருள்முதல்வாதம் குறிப்பிடுகிறது.  (பக்கம் 26)

அது எப்படி மேல்கட்டுமானம் சுதந்திரமாகவும், அதே நேரத்தில் பொருளாதாரம் இறுதியாக தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கிறது என்று சொல்லமுடியும். அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானித்தால், மேற்கட்டமைப்பு முழுமையான சுதந்திரம் பெற்றதாகக் இருக்கமுடியாது. மேற்கட்டமைப்பு முழுச் சுதந்திரமாக செயல்படும் என்றால், அடித்தளத்தின் தீர்மானிக்கும் பங்கை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு பதிலாக வெங்கடேஷ் ஆத்ரேயா  கூறுகிறார்."

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை மார்க்சிய வழியில் ஏற்றுக்கொள்ளாமல் போனால் அரசியல் பொருளாதாரத்தில் மார்க்சின் முடிவுக்கு வரமுடியாது என்பதை நான் விமர்சனத்தில் எழுதியிருக்கிறேன். "சூப்பர் தோழர். இப்படியே எல்லோரையும் நிராகரித்து கொண்டு தொடருங்கள். ஊர் இரண்டு பட்டால்...." என்று நான் எழுதியதை புரிந்து கொள்ளும் திறமில்லாமல் கருத்துரைத்துள்ளீர்கள்.

இதனை புரிந்து கொள்ள முடியாத அறிவுடன் தான் மார்க்சியத்தைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை இன்றாவது புரிந்து கொள்ளுங்கள்.

மார்க்சியத்தை மார்க்சியமாக புரிந்து கொண்டு எதிர்க்க முயலுங்கள். மார்க்சியத்தை எதிர்பதற்கான தகுதியை முதலில் பெற்றுக்கொள்ள முயற்சியுங்கள்.)

(:-//வேதைனை எல்லாம் படுத்தவில்லை. சொந்த வாழ்க்கையை விணாக்கமல் நல்ல விதமாக பிழைத்து கொண்டால் சரி.//  இது போன்ற வீண் முயற்சியும் ஆதங்கத்தையும் விட்டுவிடுங்கள். மார்க்சியத்தை அம்பேத்காரிடம் கற்க தேவையில்லை. அத்வைதத்தை மத்தவாச்சாரியிடமும், துவைதத்தை விவேகானந்தரிடமும் யாரும் கற்க மாட்டார்கள். அத்வைதத்தின் மீதான துவைத விமர்சனத்தை மத்துவரிடமும். துவைதத்தின் மீதான அத்வைத விமர்சனத்தை விவேகானந்தரிடமும் கற்கலாம்.

மார்க்சிய அடிப்படைகளை நான் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின்  ஆகியோர்களின் நேரடி நூல்களில் படித்தவன். சமூகத்தின் புதிய வளர்ச்சியை புரிந்து கொள்வதற்கு அதுபோதும். மார்க்சியத்தை ஏற்காதவர்கள் கருத்து மார்க்சிய எதிரான கருத்துத்தான். அது மார்க்சியமாகாகது. நமது உரையாடலின் தொடக்கத்திலிருந்து ஒன்றை, உங்களுக்கு சொல்லிவந்ததை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கவே இல்லை. பொருளாதாரத்தை அவரவர் தத்துவப் போக்கின் வழியில் தான் விளக்கப்படுத்துகிறோம். பொருளாதாரத்தைப் பற்றிய வேறுபாட்டிற்கு நம்மிருவரின் தத்துவ அணுகுமுறையே காரணம்.

பொருளாதாரத்தில் அரசியல் செயல்படுகிறது, அந்த அரசியலுக்கு ஒரு தத்துவம் இருக்கிறது. அந்தத் தத்துவம் வர்க்க சார்பானது. நான் வரலாற்றியல் பொருள்முதல்வாத அணுகுமுறையைப் பின்பற்றுகிறேன். பொருளாதார நெருக்கடியைப் பற்றிய உங்களது பார்வைக்கும் எனது பார்வைக்கும் வேறுபடுவதற்கு தத்துவமும், வர்க்க சார்பும் காரணமாகிறது. அதே போல் சோவியத் வீழ்ச்சிக்கும், சோஷலிச முகாம் தகர்வுக்கும் காரணங்கள் நம்மிடையே வேறுபடும்.

சோவியத் வீழ்ச்சிக்கு சித்தாந்த பிடிப்பு காரணம் கிடையாது மார்க்சிய அடிப்படைத் திரிபே காரணம். அதனால் எங்களைப் போன்றோரின் மார்க்சியப் பிடிப்பு, சோவியத் வீழ்ச்சியினால் பாதிப்புக்குள்ளாகாது. நான் செல்லும் வழி எனக்குத் தெளிவாகத் இருக்கிறது. மற்றவர்களுக்கு வருத்தப்படுவதை விடுங்கள்.

இயந்திரத்தின் உதவியால் உற்பத்தி தொடங்கிய காலத்தில் மார்க்சியம் தோன்றியது. தானியங்கி காலத்தில் தானியங்கிகளை எவ்வாறு மார்க்சிய வழியில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை "மூலதன" நூலின் வரிகளில் காண முடியாது. ஆனால் எப்படி அணுக வேண்டும் என்பதை எங்களுக்கு அந்த "மூலதன" நூலின் அணுகுமுறை வழிகாட்டுகிறது. அதற்கான கோட்பாடு எங்களிடம் இருக்கிறது. அதனால் எங்களுக்கு "மூலதன" நூல் பகவத்கீதையோ, பைபிளோ, குரானோ கிடையாது.

"அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு" என்ற நூலின் முன்னுரையில் மார்க்ஸ் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் பற்றி சுருக்கமா தெளிபடுத்தியிருக்கிறார். இந்த வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை கண்டுபிடித்தது முதல் அதனையே வழிகாட்டும் கோட்பாடாக அவர் ஏற்றுக் கொண்டதை கூறுகிறார், "இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்சிகளுக்கு வழிகாட்டும் கோட்படாக (guiding principle of my studies) மாறியது"

ஆக எங்களுக்கு "வழிகாட்டும் கோட்பாடு" (guiding principle) இருக்கிறது அதனையே பின்பற்றி, புதியது அனைத்தையும் அணுகுவோம். நீங்கள் எங்களுக்காக கவலைபடுவதை விடுத்து உங்களுக்காக கவலைப்படுங்கள்அடுத்தவங்களின் பணியில் தலையிடுவதை விடுத்து, உங்களது பணியினை செய்யுங்கள். இப்போது செய்யும் இந்தப் பணி தான் சமூகப் பணியாக நினைத்தால் இதனையே தொடருங்கள். அதற்கெல்லாம் நாங்கள் கவலைப்பட்டு கொண்டிருக்கவில்லை. )

(உபரி மதிப்பு ஆழமான குறைபாடுள்ளது என்பதை மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை எதிர்க்கின்ற அனைத்து அறிஞர்களும் கூறிவருகிற ஒன்றே, இது ஒன்றும் புதியதானது கிடையாது. அவர்கள் மார்க்சின் உபரி மதிப்புக் கோட்பாட்டை மார்க்ஸ் கூறியபடி புரிந்து அதனை மறுக்கின்றனர்.  ஆனால் நீங்கள் "தொழில்முனைவோரின் 'உபரி மதிப்பு' என்ன ?" என்பது போன்ற மார்க்சிய அரசியல் பொருளாதரத்தின் அடிப்படையை புரிந்திடாமல் கேள்விகள் அவர்கள் கேட்பதில்லை. எந்த உபரி உழைப்பு நேரத்தையும் செலுத்தாத, தொழில்முனைவோரின் 'உபரி மதிப்பு' என்ன? என்ற கேள்வி உபரி மதிப்பைப் பற்றி புரிதல் இல்லாமையை வெளிப்படுத்துகிறது.

முதலாளித்துவ பொருளுற்பத்தி சந்திக்கின்ற நெருக்கடியின் போதெல்லாம், முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களே மார்க்சின் பொருளதார முடிவுகளை ஆராய்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். பொருளதார நெருக்கடியின் போது வங்கிகளும் பெரிய நிறுவனங்களும் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். வேலையற்றோரின் எண்ணிக் கூடிக் கொண்டே செல்கிறது. சகஜ நிலை திரும்புவதற்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் செல்கிறது.

தொழிலாளர்களின் மேம்பட்ட நிலை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் சார்புநிலையில் தான் இருக்கிறது. தற்போது அமெரிக்க பொருளாதார நிலையினால் தொழிலாளர்கள் அனுபவிக்கும் இன்னல்களை நிங்கள் கணக்கில் கொள்ளவேயில்லை. வளர்ச்சியடைந்த நாட்டில் தான் பொருளாதார நெருக்கடி பெரிய அளவில் சந்தித்துள்ளன. அமெரிக்காவில் வேலையற்றோர்களின் விகிதம் பற்றி நீங்கள் கவலைக் கொண்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக 2010 முதல் 2013 வரையிலான ஆண்டுகளில் வேலையற்றோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதே போல் பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் நூறு ஆண்டுகாளக நிலைத்து நின்ற வங்கிகள் அமெரிக்காவில் திவாலாகிப் போன தகவல்கள் உங்களுக்கு முதலாளித்துவத்தின் வெற்றியாகப்படுகிறது. இந்த சார்பு நிலையையே நான் குறிப்பிட்டுக் கூறியுள்ளேன்.

முதலாளித்துவ உற்பத்தி முறையும் பல ஏற்ற இறக்கத்துடன் தான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. சோஷலிச அரசின் இறக்கம் அல்லது வீழ்ச்சி என்பது உங்களுக்கு கம்யூனிசத்தின் வீழ்ச்சியாகப்படலாம் ஆனால் எங்களுக்கு அப்படிப்படவில்லை. அனைத்து நாடுகளும் கம்யூனிச நாடாக மாறிவிட்டப் பின்பும், உங்களைப் போன்ற கடைசி ஒருவர் இந்த உலகத்தில் இருப்பார், அவரையும் நாங்கள் சந்திக்க வேண்டிவரும் என்பது தெரிந்த ஒன்றே.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் பொருளாதார நெருக்கடி தவிர்க்க முடியாது என்று மார்க்ஸ் சொன்னது எப்படி உண்மையாக நிகழ்ந்து கொண்டிக்கிறதோ, அதே போல் முதலாளித்துவ உற்பத்தி முறையின் இறுதி விளைவு பற்றி என்ன கூறினாரோ அதுவும் உறுதியானது.

"ஒரு புதிய நெருக்கடியின் பின்விளைவாக மட்டுமே ஒரு புதிய புரட்சி சாத்தியம். ஆயினும் இது இந்த நெருக்கடி எவ்வளவு நிச்சயமானதோ அவ்வளவுக்கு அதுவும் நிச்சயமானது" , (பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை) என்கிற மார்க்சின் கருத்துக்கள் எங்களுக்கு மெய்பித்துக் கொண்டு தான் இருக்கிறது.)

(அ.கா.ஈஸ்வரன்:- பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் உங்களது பார்வைக்கும் எங்களது பார்வைக்கும் வேறுபாடு இருக்கிறது. //2003 இருந்து 2008 வரை உலக பொருளாதரமே செயற்க்கையாக வளர்ந்தது’ ; ஒரு பலூனில் தொடர்து காற்றை செலுத்துவது போல் ஊதி பொருகியது. // நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த செயற்கை என்பதை நாங்கள் முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்ளார்ந்த முரணின் வெளிப்பாடு என்கிறோம்.

நீங்கள் ஆலோசனையாக கூறும் "பொருளாதார மந்தங்களை தவிர்க்க தேவையானவை இவைகளை பின்பற்ற முடியாமைக்கு காரணம் முதலாளித்துவ மூலதனத்தின் போக்கேயாகும் என்பது எங்களது கருத்து. “”சித்தாந்தங்களால் பொருளியல் விதிகளை மீறி செயல்பட முடியாது. இது உங்களுக்குத் தான் மிகவும் பொருத்தமானது. நாங்கள் சித்தாந்தங்களை பொருளியலுக்குள் நுழைப்பதில்லை, பொருளியலிருந்து தான் சித்தாந்தத்தை அமைத்திக் கொள்கிறோம். இது தான் வரலாற்றியல் பொருளாதாரம்.

எங்கெல்ஸ் கூறுகிறார் :-
"வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருத்தோட்டமானது (மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின்) உற்பத்தியும், அதற்கு அடுத்தபடி இந்த உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையும் தான், சமுதாயக் கட்டமைப்பு அனைத்துக்குமான அடித்தளமாகும் என்ற வரையறுப்பிலிருந்து தொடங்குகிறது. வரலாற்றில் தோன்றியுள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்விதம் செல்வம் வினியோகிக்கப்படுகிறது, சமுதாயம் எப்படி வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாய் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது, என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்திப் பொருள்கள் எவ்விதம் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பவற்றைச் சார்ந்தே உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தின் படி எல்லாச் சமுதாய மாறுதல்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான இறுதிக் காரணங்களைப் பொருளுற்பத்தி மற்றும் வினியோக முறைகளின் மாற்றங்களில் கண்டறிய வேண்டுமே அல்லாது, மனிதனது மூளையில் அல்லநிலையான சாசுவத உண்மை மற்றும் சாசுவத நீதி குறித்து மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வில் அல்ல. இவற்றை அந்தந்த சகாப்தத்தின் பொருளியலில் கண்டறிய வேண்டுமே அல்லாது தத்துவவியலில் அல்ல.-(டூரிங்குக்கு மறுப்பு)

(சரக்கின் மதிப்பு (உங்களைப் பொருத்தளவில் விலை) சந்தையில் ஏற்படுகின்ற தேவை அளிப்பைக் கொண்டு நிர்ணிக்கப்படுகிறது என்ற உங்களது கூற்றை கேள்விக்குள்ளாக்கி தான் மாக்சியம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.  இந்த தேவை அளிப்பு என்ற விதி பயன்படாமல் போய்விட்டதை இன்றைய பொருளாதார நெருக்கடி வெளிப்படுத்திய பிறகும் நீங்கள் அதனையே கூறிக் கொண்டிருப்பீர்கள். எங்களைப் பொருத்தளவில் தேவை அளிப்புக் கோட்பாடு தவறானது என்பது நிருபிக்கப்பட்ட ஒன்றே.

நீங்கள் சந்தையின் தேவையைப் பற்றி பேசுவீர்கள், நாங்கள் மக்களின் அடிப்படைத் தேவையைப் பற்றி பேசுகிறோம். அதானால் தான் இந்த முதலாளித்து பொருளுற்பத்தி முறையைக் கடந்த சிந்தனைக்கு நாங்கள் செல்கிறோம். உங்களுக்கு முதலாளித்துவ உற்பத்திமுறையே போதுமானது, அதனால் அதனைக் காப்பற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது. )

இவைகள் எல்லாம் முகநூலில் K.R.அதியமான் அவர்களுடன் உரையாடியவை.

மார்க்சிய எதிர்ப்பு நூல்களை அறைகுறையாகப் படித்துவிட்டு, படித்ததில் சிலவற்றை தொடர்ந்து காப்பிபேஸ்ட் செய்து கொண்டு, போட்டதைப் மார்க்சியர்கள் படித்துவிட்டு திரிந்திவிடுவார்கள் என்று கனவை வளர்த்துக் கொண்டு, அது நிறைவேறாத போது, போகும் இடம் எல்லாம் புலம்பிக் கொண்டே இருக்கும் இந்த K.R.அதியமானையை கோமாளி என்று நான் சொன்னதற்கு அவர் வருத்தப்படுகிறார்.

"சொந்த வாழ்க்கையை விணாக்கமல் நல்ல விதமாக பிழைத்து கொண்டால் சரி. இந்த பாதையில் சென்று இறுதி நாட்களில் மனம் வெதும்பி, வறுமையில் வாடிய லட்சியவாதிகளை பற்றி அறிவேன். ஏற்கெனவே பல பத்தாண்டுகள் பல லச்சம் லட்சியவாதிகள் இதை முயன்று தோற்றனர். செம்புரட்சி நடந்த நாடுகளில் உண்மையில் என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பதை பற்றியும் ஓரளவு தெரிந்தால், ஏன் இந்த வீண் முயற்சி என்ற ஆதங்கம் தான்"

அடுத்தவர்களின் முயற்சியை வீண்முயற்சி என்று முடிவெடுக்கும் அளவுக்கு சிந்திக்கும் இவர் எந்தளவுக்கு மார்ச்சியத்தை அறிந்திருக்கிறார் என்று பார்ப்போம்

K.R.அதியமான்:-"வர்க்க எதிரிகள் என்று ஒரு வர்க்கத்தை கட்டமைத்து, அழித்தொழிப்பு மூலம் அவர்களை அழிக்கும் பாணியை மார்க்சியம் தான் வித்திட்டது.அராஜகவாதத்தை மார்க்சியமாக புரிந்து கொண்டு அதன் அடிப்படையில், உபரி மதிப்புஎன்னும் மாயை” என்று முடிவெடுத்துள்ளார். அராஜகவாதத்துக்கும் மார்க்சியத்துக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் K.R.அதியமான் தமது விமர்சனத்தை முன்வைக்கிறார் என்பதே உண்மை.

சுரண்டும் வர்க்கத்தை ஒழித்தல் என்பது அராஜகவாதக் கோட்பாடு, மார்க்சியம் அவ்வாறு கூறுவதில்லை. சமூகத்தில் பொருளாதார வளர்ச்சியினுடைய முதிற்சியின் போது, தனி முதலாளிகளால் இனிமேல் நிர்வகிக்கப்பட முடியாத வகையில் உற்பத்தி முறை சமூகமயமாக்கப்பட்டிருக்கும் அப்போது முதலாளி வர்க்கம் சமூகத்துக்கு அவசியமற்று போவார்கள் என்கிறது மார்க்சியம்.

பலப்பிரயோகக் கோட்பாட்டினைப் (THEORY OF FORCE) பற்றி மார்கசியம் என்ன கூறுகிறது என்பதை, K.R.அதியமான் அறிந்திருக்க வாய்பில்லை என்றே நினைக்கிறேன்.

பலப்பிரயோகக் கோட்பாட்டினைப் பற்றிய, மார்க்சிய கருத்தை எங்கெல்ஸ் கூறுகிறார்:-
"கெல்டுகள், ஜெர்மானியர், இந்திய பஞ்சாபியர் ஆகீயோர் விஷயத்தில் புராதன பிரபுக்குலம் உருவானதும் கூட.. முதலில் எந்த வழியிலும் பலப்பியோகத்தை அடிப்படையாக்கி இருக்கவில்லை, மாறாக சுய விருப்பம் மற்றும் வழக்கத்தை அடிப்படையாக்கியதாக இருந்தது. எங்கெல்லாம் தனியுடைமை மலர்ந்ததோ அங்கெல்லாம் அது உற்பத்தி மற்றும் பரிவர்த்தனையின் மாற்றமடைந்த உறவுகளின் விளைவாகவே, அதிகரித்த உற்பத்தி, பரஸ்பர உறவுகளை மேம்படுததல் ஆகியவற்றின் நலன்களுக்காகவே அதாவது பொருளாதாரக் காரணங்களின் விளைவாகவே ஏற்பட்டது. இதில் பலப்பிரயோகம் எவ்விதப் பங்கும் வகிக்கவில்லை. இன்னொரு நபரின் உடைமையை ஒரு கொள்ளைக்காரன் பறித்துக் கொள்ள வேண்டுமானால் தனியுடைமை அமைப்பு ஏற்கெனவே நிலவியிருந்திருக்க வேண்டும் என்பது தெட்டத் தெளிவு, எனவே பலப்பிரயோகம் உடைமையை மாற்ற முடியுமே தவிர தனியுடைமை என்ற முறையில் எதையும் படைக்க முடியாது."

"சுருங்கக் கூறின், எப்பொழுதும் எல்லா இடங்களிலும் பொருளாதார நிலைமைகளும் பொருளாதார சாதனங்களும் தான் "பலப்பிரயோகம்" வெற்றி ஈட்ட உதவுகின்றன, இவை இல்லாவிடில் பலப்பிரயோகம் பலப்பிரயோகமாக இருக்காது."

"எல்லாக் காலங்களிலும் ஆளப்பட்டவர்களும் சுரண்டப்பட்டவர்களும் ஆளவோரையும் சுரண்டுவோரையும் விட மிகமிக அதிகமாக இருந்தார்கள் என்ற உண்மையும், எனவே முந்தியவர்களின் கரங்களில் தான் உண்மையான சக்தி இடம் பெற்றிருந்தது என்பதும் பலபிரயோகத்தைப் பற்றிய தத்துவத்தின் அபத்தத்தை எடுத்துக்காட்டப் போதுமானவை" (டூரிங்குக்கு மறுப்பு)

பொருளாதாரக் காரணங்களின் விளைவாகவே சமூக மாற்றம் ஏற்படுகின்றனவே அன்றி பலப்பிரயோகத்தால்  ஏற்படுவதில்லை எங்கெல்ஸ் கூறுகிறார். சுரண்டுவோரைவிட சுரண்டலுக்கு ஆட்பட்டவரே அதிகமாக சமூகத்தில் காணப்படுகின்றனர். ஆனால் சுரண்டலாளர்களிடம் தான் பலப்பிரயோக சக்தி காணப்படுகிறது.

பலப்பிரயோகம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்துக்கு மாறானதை மார்க்சியமாக K.R.அதியமான் கருத்துரைத்திருக்கிறார்.

"லெனின் செய்த மானுட அழிப்பை பற்றி வரலாறு செய்யும் மதிப்பிட்டை நீங்க வேண்டுமானால் ஏற்க்க மறுக்கலாம்." "வர்க்க எதிரிகள் என்று ஒரு வர்க்கத்தை கட்டமைத்து, அழித்தொழிப்பு மூலம் அவர்களை அழிக்கும் பாணியை மார்க்சியம் தான் வித்திட்டது." இது போன்ற K.R.அதியமான் கருத்துக்கள் எல்லாம் வெறும் அபத்த குவியலே.

அரசியலில் உயிர் இழப்பு என்பது எல்லா இடங்களிலும் நடைபெற்றுள்ளது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் எத்தனையோ பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கம்யூனிஸ்டுகள் என்ற ஒரே காரணத்துக்காக கொல்லப்பட்டவர்கள்.

இன்று உலகமயமாக்கல் என்று கூறிக் கொண்டு, ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் நலனின் அடிப்படையில் பிறநாட்டு மக்களை கொன்றதை முன்வைத்து, யார் அதிகம் கொன்றார்கள் என்ற கணக்குகளுக்கு நான் இங்கே புகவில்லை. உயிரைப் பறித்தல் என்பதை எல்லா சிந்தாந்தத்தைப் பின்பற்றியவர்களும் நடத்தி இருக்கிறார்கள். மத சித்தாந்தம் உட்பட. இங்கே நான் மார்க்சியத்தின் அடிப்படை பலப்பிரயோகம் கிடையாது என்பதை வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

சமூக வளர்ச்சியைப் பற்றி மார்க்சியம் என்ன கூறுகிறது, உற்பத்தி சக்தியின் வளர்ச்சியை மார்க்சியம் ஏன் முதன்மைப்படுத்துகிறது, அது மனித சிந்தனைகளை எவ்வாறு மாற்றுகிறது என்பதை அறிந்திடாமல், குறுட்டாம் போக்கான அணுகுமுறையில் K.R.அதியமான் மார்க்சியத்தின் மீது விமர்சனம் வைக்கிறார்.

முதலாளியை பலப்பிரயோகத்தால் அல்ல, மேம்பட்ட சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தி முறையினால் சமூகத்துக்கு தேவையற்றவராகிறார் என்று எங்கெல்ஸ் கூறுகிறார்:-
"இன்றைய எதார்த்தமான சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி மேன்மேலும் ஒன்று குவித்தலை, தனி முதலாளிகளால் இனிமேல் நிர்வகிக்கப்பட முடியாத மாபெரும் நிறுவனங்களாக உற்பத்தியை சமுகமயமாக்குதலை நோக்கிச் செல்கிறது. ஒரு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளர்ச்சி அடைந்ததும் "முதலாளியின் நேரடியான பார்வை" மற்றும் அது ஏற்படுத்தும் அதிசங்களைப் பற்றிய கதைகள் அனைத்தும் வெறும் பிதற்றலாக மாறிவிடுகின்றன.

லண்டன் மற்றும் வட மேற்கு ரயில்வேயின் "முதலாளியின் பார்வையைப்" பற்றிக் கற்பனை செய்து பாருங்கள்! ஆனால் முதலாளி செய்ய முடியாததைத் தொழிலாளி, கம்பெனியின் கூலி வாங்கும் ஊரியர்கள் செய்ய முடியும், அதை வெற்றிகரமாகச் செய்ய முடியும்.

ஆகவே முதலாளி தன்னுடைய லாபம் "மேற்பார்வை செய்ததற்குக் கூலி" என்று இனி உரிமை கோர முடியாது. ஏனென்றால் அவர் எதையும் மேற்பார்வை செய்யவில்லை. மூலதனத்தை ஆதரித்துப் பேசுபவர்கள் அந்த ஓட்டைச் சொற்றொடரை நம் காதுகளுக்குள் டமாரமடிக்கின்ற பொழுது நாம் அதை நினைவுபடுத்திக் கொள்வோம்." (சமூகத்தின் அவசியமான வர்க்கங்களும் மிகையான வர்க்கங்களும்)

இங்கே எங்கெல்ஸ் முதலாளிக்கு "மேற்பார்வை செய்ததற்குக் கூலி" என்று எதையும் கோரமுடியாத நிலையைப் பற்றி பேசுகிறார். ஆனால், மார்க்சியத்தை புரிந்து கொள்ளாமல், தொழில்முனைவோரின் (முதலாளியின்) 'உபரி மதிப்பு' என்ன? என்று, K.R.அதியமான் நம்மிடம் கேட்கிறார்.

"தன் உழைப்பின் முழு பலனையும் தான் அடைய வேண்டும் என்ற லாப நோக்குதான் மனிதர்களை கடுமையாக உழைக்க, தம் முழு திறமையையும் செய்யும் வேலையில் முழுமனதோடு செழுத்த ஊக்குவிக்கும்."- K.R.அதியமானின் கருத்தெல்லாம் லாபநோக்குடைய முதலாளியின் சிந்தனையோடு நின்று போய்விட்டது.

மனித சமூகம் தோன்றியது முதல் லாப நோக்கோடு செயற்பட்டதா என்ன?

முதலாளித்துவ சமூகத்தின் செயற்பாடு தான் லாப நோக்கோடு செயற்படுகிறது. இந்த முதலாளித்துவ சிந்தனையை என்றைக்குமான, மனித சிந்தனையின் நித்திய தன்மையாக, தவறாக புரிந்து கொண்டு அதனையே தொடர்ந்து கூறிகொண்டிருக்கிறார்.

"தேனிக்களும், எறும்புகளும், நாள் பூராவும் கடுமையாக உழைத்து, உழைப்பின் பயனை தம் சமூக கூட்டிற்க்கு மனமுவந்து அளிக்கும். அவை அங்கு சேகரிக்கப்பட்டு, பிறகு ஒவ்வொறு தனி உறுப்பினருக்கும், அவரின் தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் மனிதர்களிடம் இதே போன்ற தன்னலமற்ற முழு உழைப்பை, தேவைக்கேற்ற ஊதியம் அளித்து பெற முடியாது. சாத்தியமே இல்லை என்பதை தான் மனித உளவியலும், வரலாறும் சொல்கிறது.."
K.R.அதியமான் சாத்தியமற்றது என்று கூறியதை, எங்கெல்ஸ் கம்யூனிச சமூகத்தில் கீழ் எப்படி சாத்தியம் என்பதை மனித உளவியல் அடிப்படையில் கூறியிருக்கிறார் என்பதை பார்ப்போம்:-
"உற்பத்தி சாதனங்களை அனைத்துக்கும் தன்னைத்தானே எஜமானனாக்கிக் கொள்ளவும் ஒரு சமூகத் திட்டப்படி அவற்றைப் பயன்படுத்தவும் முயலும் சமுதாயமானது, மனிதர்கள் தமது சொந்த உற்பத்தி சாதனங்களுக்கு ஆட்பட்டுக்கிடந்த முன்னாள் நிலைமைக்கு முடிவு கட்டுகிறது. ஒவ்வொரு தனிநபரும் விடுவிக்கப்பட்டாலன்றி சமுதாயம் தன்னைத் தானே விடுவித்துக் கொள்ள முடியாது என்பது சொல்லாமலே விளங்கும். எனவே பழைய உற்பத்தி முறை அடிமுதல் முடிவரைப் புரட்கரமாக மாற்றப்பட வேண்டும், குறிப்பாக முன்னாள் உழைப்புப் பிரிவினை மறைய வேண்டும். அதற்குப் பதிலாக நிறுவப்படும் உற்பத்தி அமைப்பில் ஒரு புறம் எந்த ஒரு தனிநபரும் மற்றவர்கள் தோள்கள் மீது மனித வாழ்க்கையின் இயல்பான நிபந்தனையான உற்பத்தித்திறனுள்ள உழைப்பின் தமது பங்கைச் சுமத்த முடியாது, மறுபுறம் உற்பத்தித் திறனுள்ள உழைப்பு மனிதர்களை அடிமைப்படுத்தும் ஒரு சாதானமாக இல்லாமல், ஒவ்வொரு தனிநபரும் தனது உடல் மற்றும் உள்ளது ஆற்றல்களை எல்லாத் திசைகளிலும் வளர்த்துக் கொள்ளவும் அவற்றை முழுமையாகச் செயல்படுத்தவுமான வாய்ப்பினை வழங்குகிறது, சுமையாக இல்லாமல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
இன்று இது ஆகாசக் கற்பனையோ அல்லது செயல்படா விருப்பமோ அல்ல. உற்பத்தி சக்திகளின் இன்றைய வளர்ச்சி, உற்பத்தி சக்திகள் சமூகமயமாதல், முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவான தடைகள் மற்றும் தொந்தரவுகள் ஒழிக்கப்படுதல், உற்பத்திப் பண்டங்களும் உற்பத்தி சாதனங்களும் விரயமாவது தவிர்க்கப்படுதல் ஆகியவற்றால் பொருளுற்பத்தி பெருகுவதானது ஒவ்வொருவரும் தமது பங்கு வேலையைச் செய்யும் பட்சத்தில், உழைப்பதற்கு அவசியமான நேரத்தை ஓர் அளவு வரைக் குறைப்பதற்குப் போதுமானது, இந்த நேரம் இன்றைய கருத்தோட்டங்களை வைத்து அளவிடும் போது உண்மையில் சிறியதாகவே இருக்கும்." (டூரிங்கக்கு மறுப்பு -பக்கம் 317-318)
இங்கு, சமூகத்தில் காணப்படும் உழைப்புப் பிரிவினை மறைந்திடும் போது ஏற்படுகின்ற மாற்றங்களை விவரித்துள்ளார் ஏங்கெல்ஸ். இது போன்ற மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்தை நேரடியாக K.R.அதியமான் வாசித்திருப்பாரா?
மார்க்சியத்தின் அடிப்படையில் நேரடியான எந்தவித பரிச்சயமும் இல்லாமல், மனித மனங்களை (human psychology) பற்றிய போதிய தெளிவில்லாமல் உருவாக்கப்பட்ட சித்தாந்தம் இது. எனறு K.R.அதியமான் கூறுகிறார். தனிநபர் உணர்வுநிலையைப் (Consciousness) பற்றியும், சமூக உணர்வுநிலையைப் பற்றியும் அதே போல் மனம், சிந்தனைப் பற்றியும் மார்க்சியம் என்ன கூறுகிறது என்பதை மேம்போக்க்கூட அறிந்திடாமல் இது போன்ற விமர்சனத்தை வைக்கிறார்.
பருப்பொருள் மனதின் உற்பத்திப் பொருள் அன்று. ஆனால் மனம் என்பது பருப்பொருளின் உன்னதமான விளைபொருளே ஆகும். இது தூய பொருள்முதல்வாதம் என்பது உண்மையே. (லுத்விக் ஃபாயர்பாக்கும் செவ்வியல் ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்) என்று எங்கெல்ஸ் கூறுகிறார்
மேலும், சமுதாயத்தின் வரலாற்றில் செயல்படுவோர் அனைவரும் தன்னுணர்வு கைவரப்பெற்ற, ஆழ்ந்த சிந்தனை அல்லது மனவெழுச்சியுடன் திட்டடவட்டமான குறிக்கோள்களை நோக்கிச் செயலாற்றுகிற மனிதர்களாவர். உணர்வு பூர்வமான ஒரு நோக்கம் இல்லாமல், திட்டமிட்ட ஒரு குறிக்கோள் இல்லாமல் சமுதாயத்தில் எதுவும் நிகழ்வதில்லை. ஆனால், இந்த வேறுபாடு, வரலாற்று ஆய்வுக்கு, குறிப்பாகத் தனித்தனி சகாப்தங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய வரலாற்று ஆய்வுக்கு, எவ்வளவுதான் முக்கியமாக இருந்த போதிலும், வரலாற்றின் உள்ளார்ந்த பொது விதிகளே வரலாற்றுப் போக்கின் மீது ஆட்சி செலுத்துகின்றன என்னும் உண்மையை மாற்ற இயலாது. இங்கேயுங்கூட, மொத்தத்தில் பார்க்கும்போது, தனிநபர்கள் அனைவரின் உணர்வுபூர்வமாய் விரும்பப்பட்ட குறிக்கோள்களையும் மீறி, நிகழ்வுகளின் மேற்பரப்பில் தற்செயலே ஆட்சி புரிவதாகத் தோன்றுகிறது. தீர்மானிக்கப்பட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன, ஆனால் அபூர்வமாகத்தான். பெரும்பான்மையான நிகழ்வுகளில், விரும்பப்பட்ட எண்ணற்ற குறிக்கோள்கள் ஒன்றையொன்று குறுக்கிட்டு மோதிக்கொள்கின்றன. அல்லது இந்தக் குறிக்கோள்கள் தொடக்கத்திலிருந்தே நிறைவேற்றச் சாத்தியமற்றவையாகவோ அல்லது அவற்றை அடைவதற்கான சாதனங்கள் போதாமலோ இருக்கின்றன.
இவ்வாறாக, வரலாற்றுத் துறையில் எண்ணற்ற தனித்தனி விருப்பங்களின், தனித்தனி செயல்களின் மோதல்கள், உணர்வற்ற இயற்கையில் மேலோங்கி நிற்கும் நிலவரங்களுக்கு முற்றிலும் ஒப்பான, அதேபோன்ற நிலையை உண்டாக்கி விடுகின்றன. செயல்களின் குறிக்கோள்கள் திட்டமிடப்பட்டவை. ஆனால் இச்செயல்களிலிருந்து நடைமுறையில் பின்தொடரும் விளைவுகள் திட்டமிடப்பட்டவை அல்ல. அல்லது அவை திட்டமிடப்பட்ட குறிக்கோளுடன் பொருந்துவதாகத் தோன்றுகிற வேளையிலும், திட்டமிடப்பட்டதற்கு முற்றிலும் வேறான பின்விளைவுகளையே முடிவாக அவை கொண்டுள்ளன. ஆக, மொத்தத்தில், தற்செயலானது வரலாற்று நிகழ்ச்சிகளையும் அதேபோல ஆட்சி புரிவதாகத் தோன்றுகிறது. ஆனால் எங்கே மேற்பரப்பில் தற்செயல் ஆட்சி புரிகிறதோ, அங்கே உண்மையில் அந்த நிகழ்வின் மீது அதன் உள்ளார்ந்த, மறைவான விதிகள் எப்போதும் ஆட்சி செலுத்துகின்றன. இவ்விதிகளைக் கண்டுபிடிப்பது ஒன்றே இப்போதைய தேவை. (லுத்விக் ஃபாயர்பாக்கும் செவ்வியல் ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)
இவ்விதியைப் (வரலாற்றியல் பொருள்முதல்வாதம்) பற்றி மார்க்ஸ் கூறுகிறார்:-
இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம்.

மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும்  சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச் சொல்வதென்றால்  சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து  கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.

ஒரு தனிநபர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே, இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக, இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாக, உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்க முடியும்.

எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்கக் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.” (அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு  முன்னுரை)

இந்த வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தான் தமது அரசியல் வேலைத்திட்டத்தை கம்யூனிஸ்டுகள் அமைத்துக் கொள்கின்றனர். K.R.அதியமான் நினைப்பது போல் பலப்பிரயோகத்தால் கிடையாது.

முதலாளித்துவ உற்பத்தி முறை தோன்றியது முதல் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதைப் பற்றி எங்கெல்ஸ் கூறுகிறார்:-
"உற்பத்தித் திறன் (Productivity) பெருக்கு விகிதத்தில் அதிகரிக்கும் அதே போது சந்தைகளின் விரிவாக்கம் அதிகபட்சம் கூட்டு விகிதத்தில் தான் முன்னேறுகிறது. 1825 முதல் 1867வரை ஓயாது திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்த தேக்கம் (Stagnation), செழுமை (Prosperity), மிகை உற்பத்தி (Over peoduction), நெருக்கடி (Crisis), இவற்றின் பத்தாண்டுச் சகடம் (Decennial cycle) உண்மையிலேயே சுழன்று முடிந்து விட்டதாகத் தோன்றுகிறது, ஆனால் நிரந்தரமான, நீடித்த மந்தத்தின் விரக்திச் சகதியில்தான் அது நம்மை இறக்கிவிட்டுள்ளது. ஏக்கத்துடன் எதிர்பார்த்த செழுமைக் காலம் வராது, அதன் முன்னறிகுறிகள் தெரிவதாக அடிக்கடி தோன்றுகிறது, ஆனால் ஒவ்வொரு முறையும் அவை மாயமாய் மறைந்து போகின்றன.” (மூலதனம் முதல் தொகுதி (ஆங்கிலப் பதிப்புக்கு முன்னுரை))

முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாட்டின் வெளிப்பாடே இந்த பொருளாதார நெருக்கடி என்று மார்க்சியம் கூறுகிறது. K.R.அதியமான் இந்த பொருளாதார நெருக்கடி செயற்கையாக வளர்ந்தது என்று தவறாகப் புரிந்து கொண்டு, பொருளாதார மந்தங்களை தவிர்க்க தேவையானவை என்று நான்கை பட்டியலையிட்டுவிட்டு, நெருக்கடியை தவிர்த்துவிடலாம் என்று எளிமையாக கூறுகிறார். இதே எளிதான புரிதலின் படி ""உபரி மதிப்பு என்னும் மாயை என்று முடிவெடுத்துள்ளார். K.R.அதியமான் கூறியவை எப்படி பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடையாதோ, அதே அளவுக்கு உபரி மதிப்பு என்னும் மாயை என்பதும் தவறானது.
ஒரு தவறான முடிவை எடுத்துஅதனை கொண்டு உபரி மதிப்புக் கோட்பாட்டை பற்றி புரிதலுடன் இருப்பவர்கள், தங்களது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அடாவடியாக கருத்துரைப்பது எனக்கு கோமாளியாகவே படுகிறது. முதலாளி வர்க்கம் போன்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், ஒவ்வாமையில் அவதிப்படுபவர், எதிர் காலத்தில் சந்திக்க இருக்கும் மனச் சிக்கலை கொஞ்சமும் யோசிக்காமல் இருக்கிறார். தனக்கு சரியெனப்பட்டதைக் கொண்டு, அது தவறு என்று கூறுக் கொண்டிருக்கும் கோட்பாளர்களை மாற்றியே தீருவேன் என்று கங்கணம்கட்டிக் கொண்டு அலைந்து திரியும் போது ஏற்படுகின்ற தோல்விகள் அவரது மனதை சிதைக்கும்.
போகிறபோக்கில் யார்யாரோ கூறியதை மார்க்சியம் என்று புரிந்து கொண்டு, மார்க்சியத்தை அறிந்தவர்களிடம், அரைகுறையாக புரிந்ததைக் கொண்டு உரையாடும் போது, மார்க்சியர்களை மாற்ற முடியவில்லை என்ற ஏக்க பெருமூச்சு விடுவதும், எதோ எதிர்காலத்தில் ஏற்படும் கொலைபாதக செயலை தடுக்க முடியாமல் போய்விட்டதே என்று புலம்புவதும் மன சிதைவையே ஏற்படுத்தும். இதனை மனதில் கொண்டே அவரை எச்சரித்தேன். மார்க்சியம் இதுவரை எவ்வளவு எதிர்ப்பை சந்தித்து செயற்படுகிறது என்பதை அறியாதவராக K.R.அதியமான் இருக்கிறார்.

தத்துவம், பொருளாதாரம், சமூகம் பற்றி விரிவான கோட்பாடான மார்க்சியத்தை "மானுட அழிப்பை" நிகழ்த்தும் கோட்பாடாக சித்தரித்துவருகிறார்.

மார்க்சியம் பல்கலைக்கழகப் பலதுறை பாடத்திட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. தத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மார்க்சிய சிந்தனையை படிப்பது போலவே, சமூகவியல், இலக்கிய ஆய்வியல், வரலாற்றியல் ஆகிய துறைகளிலும் பல்கலைக் கழகங்களில் படிக்கின்றனர். குறிப்பாக எங்கெல்ஸ் எழுதிய, "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்"  என்ற நூல் ஆதாரக்குறிப்பு நூலாக (Reference Book) இன்றும் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றுத் துறையின் ஆய்வுமுறைமையில் என்ற பிரிவில் வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் என்கிற மார்க்சிய அணுகுமுறையும், இலக்கிய ஆய்வுமுறையியலில் மார்க்சிய ஆய்வு முறையும் பல்கலைக் கழகப் பாடத்திட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ் இணையக் கல்விக்கழகம (Tamil Virtual University) இணைய தளத்தில் 'இலக்கியவுலகில்     மிகவும்     செல்வாக்கு வாய்ந்த திறனாய்வுமுறை, மார்க்சியத் திறனாய்வு ஆகும். மார்க்சியம் எனும் சமூகவியல் தத்துவத்தை அடித்தளமாகவும் வழிகாட்டுதலாகவும் கொண்டது மார்க்சிய அணுகுமுறையாகும். மார்க்சியம் என்பது அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய சமூக தளங்களில் மனிதகுல விடுதலையை முன்னிறுத்துவது ஆகும். இது, அறிவியல் பூர்வமானது; தருக்கம் சார்ந்தது; இயங்கியல் தன்மை கொண்டது." என்று மார்க்சிய அணுகுமுறையை  அறிமுகப்படுத்தி இருப்பதை K.R.அதியமான் போன்றோர்கள் முதலில் படிக்கட்டும்.

http://www.tamilvu.org/courses/degree/d061/d0614/html/d0614330.htm
http://www.tamilvu.org/courses/degree/d061/d0614/html/d0614331.htm

1 comment:

  1. முகநூலில் வாசிக்க
    https://www.facebook.com/photo.php?fbid=507383096060188&set=a.137688413029660.28762.100003655058620&type=1&theater

    ReplyDelete