Monday, 10 February 2025

மார்க்சின் அரசியல் பொருள்முதல்வாதம்

 (லெனின் கட்டுரையின் அடிப்படையில் EMLS பயிலரங்கில் எடுக்கப்பட்ட வகுப்பின் விரிவாக்கம்)

https://www.youtube.com/watch?v=oQOliq6PyI0 

https://www.youtube.com/watch?v=Ifer5OectJ0&t=5068s

மார்க்சியப் பொருளாதார போதனை என்கிற பகுதியில் லெனின் மதிப்பு, உபரி மதிப்பு ஆகிய உட்தலைப்புகளில் விளக்குகிறார்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உற்பத்தி உறவுகளின் தோற்றம், வளர்ச்சி, நலிவு ஆகிய கட்டங்களை ஆராய்வதே மார்க்சிய அரசியல் பொருள்முதல்வாதத்தின்  உள்ளடக்கம் ஆகும். எந்த உற்பத்தி முறைக்கும் ஒரு தோற்றம் இருக்கிறது, அது தொடர்ந்து வளர்ச்சி பெறுகிறது இறுதியில் அதன் உள்முரண்பாடுகளால் நலிவடைகிறது. இந்த அடிப்படையிலேயே மார்க்சிய அரசியல் பொருளாதாரம் முதலாளித்துவத்தைப் பார்க்கிறது.

மதிப்பு

முதலாளித்துவ உற்பத்தி முறையில் சரக்கு உற்பத்தியே அடிப்படையாக இருக்கிறது, அதனால் சரக்கு பற்றி நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சரக்கு என்பது எதேனும் மனிதத் தேவைகளை நிறைவு செய்கிற பொருள் ஆகும். மேலும் அது மற்றொரு பொருளுக்கு பரிவர்த்தனை செய்துக் கொள்ளக்கூடிய பொருளாகவும் இருக்க வேண்டும்.

சரக்குக்கு இரண்டு காரணிகள் இருக்கின்றன. ஒன்று பயன்மதிப்பு, மற்றொன்று பரிவர்த்தனை மதிப்பு.

மனிதத் தேவைகளை நிறைவு செய்வது பயன்மதிப்பு, ஒரு குறிப்பிட்ட அளவுள்ள பயன்பதிப்பு மற்றொரு குறிப்பிட்ட அளவுள்ள பயன்மதிப்புக்கு மாற்றிக் கொள்வது பரிவர்த்தனை மதிப்பு.

பயன்மதிப்பைக் கொண்டு ஒரு சரக்கை மற்றொரு சரக்குக்கு சமப்படுத்த முடியாது. 

சான்றுக்கு அரிசியையும் ஆடையையும் எடுத்துக் கொள்வோம்.

அரிசி என்பது உணவுத் தேவையை நிறைவு செய்கிறது, ஆடை என்பது உடுக்கும் தேவையை நிறைவு செய்கிறது.  இந்த இரண்டு வகையானத் தேவைகளைக் கொண்டு இரண்டு சரக்கையும் கணக்கிட முடியாது. பரிவர்த்தனை மதிப்பைக் கொண்டே ஒவ்வொரு சரக்கும் சமமாகப் பரிமாறப்படுகிறது.

பரிவர்த்தனை மதிப்பில் அப்படி என்ன பொதுத் தன்மை இருக்கிறது?

அந்தப் பொதுத் தன்மை என்பது அதில் அடங்கி இருக்கிற உழைப்பே ஆகும்.

ரூ.500/-க் கொண்டு ஒரு சட்டை வாங்க முடிகிறது, அதே போல ரூ.500/-க் கொண்டு 10 கிலோ அரிசி வாங்க முடிகிறது

இவை இரண்டும் சம மதிப்புடையதாக இருக்கிறது.  இந்த சம மதிப்பு பணத்தாளில் இருந்து கண்டிப்பாக அளவிட முடியாது. இரண்டு பொருளில் செலுத்தப்பட்ட உழைப்பின் சராசரி அளவைக் கொண்டே மதிப்பு அளவிடப்படுகிறது.

பணத்தால் ஒரு சரக்கின் மதிப்பை அறிந்து கொள்ள முடியாது, சரக்கின் மதிப்பு பணத்தால் வெளிப்படுத்த முடியும். உழைப்பைக் கொண்டுதான் மதிப்பு அளவிடப்படுகிறது.

இந்த உழைப்பின் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் மார்க்ஸ் கூறுகிற உழைப்பின் இரட்டைத்தை தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

சரக்கு உற்பத்தில் தொழிலாளி தமது இரண்டு வகையான உழைப்பைச் செலுத்துகிறார். உழைப்பில் இரண்டு தன்மைகள் அடங்கி இருப்பதாக மார்க்ஸ் கண்டு பிடித்தார்.

ஒன்று ஸ்தூலமான உழைப்பு (குறிப்பான உழைப்பு) மற்றொன்று ஸ்தூலமற்ற உழைப்பு (பொதுவான உழைப்பு).

வடிவத்தைப் படைக்கிற உழைப்பு ஸ்தூல உழைப்பு மற்றது ஸ்தூலமற்ற உழைப்பு. 

அதாவது, வடிவத்தைப் படைக்கிற உழைப்பு குறிப்பான உழைப்பு, மற்றது பொதுவான உழைப்பு.

சட்டைக்கான துணி நெய்யப்படுகிறது என்றால் அதில் செலுத்தப்பட்ட குறிப்பிட்ட உழைப்பு நெசவு. இது ஸ்தூலமான உழைப்பு.

அரசிக்காக நெல் விளைவிக்கப்படுகிறது என்றால் அதில் செலுத்தப்பட்ட குறிப்பிட்ட உழைப்பு உழவு. இதுவும் ஸ்தூலமான உழைப்பு.

இந்த இரண்டு சரக்கில் காணப்படும் நெசவு, உழவு என்கிற அடிப்படையில் சரக்குகள் மதிப்பிடப்படுவதில்லை.  இதில் அடங்கி உள்ள பொதுவான உழைப்பைக் கொண்டே அளவிடப்படுகிறது, அந்த உழைப்பு ஸ்தூலமற்ற உழைப்பு.

நெசவு செய்வதற்கான உழைப்பும் உழவு செய்வதற்கான உழைப்பும் வெவ்வேறானவை என்பது எடுத்த எடுப்பிலேயே தெரிகிறது. ஆனால் இரண்டுக்கும் பொதுவான உழைப்பு இருக்கிறது, அது ஸ்தூலமற்ற உழைப்பு.

உழைப்பை செலுத்தும் போது உழைப்பாளியின் சக்தி இழக்கப்படுகிறது.

உழைப்பை செலுத்தும் போது தசை, மூளை போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அப்போது அவை சோர்வு அடைகிறது. இந்த சோர்வை ஏற்படுத்தக்கூடிய சக்தியே ஸ்தூலமற்ற உழைப்பு என்று கூறப்படுகிறது.

ஸ்தூலமான உழைப்பு பயன்மதிப்பைப் படைக்கிறது, ஸ்தூலமற்ற உழைப்பு பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது. அதாவது குறிப்பான உழைபபு பயன்பதிப்பைப் படைக்கிறது, பொதுவான உழைப்பு பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது.

இந்தப் பரிவர்த்தனை மதிப்பைக் கொண்டே சரக்கின் மதிப்பு அளவிடப்படுகிறது.

ஒரு சட்டையின் மதிப்பு ரூ.500/- , பத்து கிலோ அரசியின் மதிப்பு ரூ.500/- என்று இரண்டு சரக்குகளில் அடங்கி உள்ள ஸ்தூலமற்ற உழைப்பைக் கொண்டே, அதாவது பொதுவான உழைப்பைக் கொண்டே மதிப்பு சமப்படுத்தப்படுகிறது.

லெனின் இங்கே மார்க்ஸ் எழுதிய “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்கிற நூலில் உள்ள பகுதியை மேற்கோளாகக் காட்டுகிறார்.

“மதிப்புகள் என்கிற முறையில், அனைத்து சரக்குகளுமே கெட்டியாக்கப்பட்ட உழைப்பு நேரத்தின் திட்டவட்டமான திரள்களே ஆகும்.”

மார்க்ஸ் சுருக்கமாக சூத்திரத்தைப் போல கூறியுள்ளார். லெனினும் “ஒவ்வொரு குறிப்பிட்ட சரக்கும், சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கைத்தான் பிரதிநித்துவப்படுத்துகிறது.” என்று சூத்திரம் போல் கூறியுள்ளார்.

சூத்திரம் போல் கூறியவற்றை மார்க்சும் லெனினும் தங்களது நூல்களில் விரிவாக விளக்கி உள்ளனர். அரசியல் பொருளாதாரம் பற்றி படிக்கிற போது விரிவாகப் படிக்கலாம். நேரம் கருதி சுருக்கமாகவே இங்கே பார்க்கப்படுகிறது.

உபரி மதிப்பு

பணமும் மூலதனமும் ஒன்றல்ல. பணத்துக்கும் மூலதனத்துக்கு உள்ள வேறுபாட்டை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். மூலதனம் பண வடிவத்தில் இருக்கிறது என்பதனால் அது பணம் என்று கூறப்படுவதில்லை மூலதனம் என்றே அழைக்கப்படுகிறது.

சரக்கு உற்பத்தியின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் பணம் மூலதனம் ஆகிறது.

சரக்குப் புழக்கத்தின் பொதுச் சூத்திரமும் மூலதனப் புழகத்தின் பொதுச் சூத்திரமும் வேறுபடுகிறது.

முதலில் சரக்குப் புழக்கத்தைப் பார்ப்போம்.

கூடுதலாக விளைவித்த சரக்கை விற்றுப் பணத்தைப் பெற்று அந்தப் பணத்தின் மூலம் தேவைப்படும் சரக்கு வாங்கப்படுவது சரக்குப் புழக்கம் என்று அழைக்கப்படுகிறது. பண்ட மாற்றில் இருந்து விரிவடைந்தது சரக்கு புழக்கம். இதில் சரக்கில் தொடங்கி பணத்தைப் பெற்று அந்தப் பணத்தின் மூலம் தேவைப்படுகிற சரக்கு வாங்கப்படுகிறது. அதாவது சரக்கில் தொடங்கி சரக்கில் முடிவடைகிறது. பணம் செலுத்தும் சாதனமாக செயல்படுகிறது.

இந்த சரக்குப் புழக்கத்தின் பொதுச் சூத்திரம் ச-ப-ச, அதாவது சரக்கு-பணம்-சரக்கு என்படும்.

சரக்கை விற்று பணம் பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு வேறு சரக்கு வாங்கப்படுகிறது.

அடுத்து மூலதனப் புழக்கத்தைப் பார்ப்போம்.

தொழில் தொடங்கும் போது முதலாளி தம்மிடம் உள்ள பணத்தை அதாவது மூலதனத்தை செலவழித்து சரக்கை உற்பத்தி செய்கிறார், உற்பத்தி செய்த சரக்கை பணத்துக்கு விற்கிறார். அதாவது மூலதனத்தைக் கொண்டு சரக்கை உற்பத்தி செய்கிறார், உற்பத்தி செய்த சரக்கை சந்தையில் விற்கிறார். விற்று பணம் பெறுகிறார்.

மூலதனப் புழக்கத்தில் பணத்தில் தொடங்கி இறுதியில் பணத்தில் முடிகிறது. இங்கே சரக்கு விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த மூலதனப் புழக்கத்தின் பொதுச் சூத்திரம் ப-ச-ப, அதாவது பணம்-சரக்கு-பணம் ஆகும்.

பணத்தை முதலில் செலவழித்து, சரக்கு உற்பத்தி செய்யப்பட்டு, அந்த சரக்கு விற்று பணம் பெறப்படுகிறது.

சரக்குப் புழக்கத்தில் கூடுதலாக எதுவும் கிடைப்பதில்லை, ஆனால் மூலதனப் புழக்கத்தில் கூடுதலாக பணம் கிடைக்கிறது.

சரக்கு புழக்கத்தில் பணம் இடைச் சாதனமாக செயல்படுகிறது.

மூலதனப் புழக்கத்தில் செலவிட்டப் பணம் கூடுதல் பணத்தைப் படைக்கிறது.

ஒரு முதலாளி சரக்கு உற்பத்தில் செலுத்திய பணத்தைவிட விற்பனை செய்யும் போது கூடுதலாக பணத்தைப் பெறுகிறார்.

இதற்கான சூத்திரத்தை மார்க்ஸ் இவ்வாறு சுட்டுகிறார். ப-ச-ப,. அதாவது பணம் –சரக்கு- கூடுதல் பணம். இந்த கூடுதல் பணம், பணத்தின் “பெருக்கம்” என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெருக்கம்தான் மூலதனமாக தொடர்கிறது.

பணம் கூடுதல் பணத்தைப் பெற்றுத்தருகிறது என்றால் அந்தப் பணம் மூலதனம் ஆகும். ஆதாவது கூடுதல் பணத்தைப் பெற்றுதருகிற பணமே மூலதனம் ஆகும்.

இதன் விரிந்த விளக்கத்தை அரசியல் பொருளாதார நூல்களிலும் வகுப்புகளிலும் பார்க்கலாம்.

தொழிலாளி முதலாளிக்கு விற்பது உழைப்பை அல்ல உழைப்புச் சக்தியை என்று மார்க்ஸ் விளக்குகிறார். பணம் எப்படி ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் மூலதனம் ஆகிறதோ, அதே போல உழைப்பு என்பது குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் உழைப்புச் சக்தி ஆகிறது.

இதனை லெனின் சொற்களிலேயே பார்ப்போம்.

 

"மூலதனத்தின் தோற்றத்திற்கு வரலாற்று வழிப்பட்ட முன்தேவைகளாவன: முதலாவதாக, தனிநபர்களின் கையிலே ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பணம் குவியவும், அதே சமயத் தில் பொதுவாகவே சரக்கு உற்பத்தியின் வளர்ச்சி சார்பு நோக்கில் உயர்ந்த தரத்திற்கு வளர்ந்திருக்கவும் வேண்டும்; இரண்டாவதாக, இரண்டு பொருளில் "சுதந்திரமான உழைப்பாளி இருக்க வேண்டும்அதாவது,தனது உழைப்புச் சக்தியை விற்பதில் எல்லா விதமான கட்டுப்பாடுகளில் இருந்தும் தடைகளில் இருந்தும் விடுபட்டவன் என்ற பொருளிலும், நிலத்திலிருந்தும் பொதுவாக எல்லா உற்பத்திச் சாதனங்களில் இருந்தும் விடுபட்டவன் என்ற பொருளிலும். யாருடனோ எதனுடனோ இணைக்கப்படாத கட்டறுந்த உழைப்பாளி, அதாவது தனது உழைப்புச் சக்தியை விற்பதைத் தவிர வேறெந்த வழியிலும் பிழைக்க முடியாத "பாட் டாளி" இருக்க வேண்டும்."

(காரல் மார்க்ஸ்)

சரக்கு உற்பத்தியின் வளர்ச்சிக் கட்டத்தில் உழைப்பு, உழைப்பு சக்தி ஆகிறது. அப்போது, உழைப்புச் சக்தி ஒரு சரக்காகக் கொள்ளப்படுகிறது.

தொழிலாளி முதலாளிக்கு விற்பது உழைப்பை அல்ல உழைப்புச் சக்தி என்பதை சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

உழைப்புச் சக்தியின் மதிப்பும், உழைப்பின் மதிப்பும் வேறுபடுகிறது. இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றல் உழைப்புச் சக்தியின் மதிப்பை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

உழைப்புச் சக்தியின் மதிப்பைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உழைப்புச் சக்தியின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து, உழைப்புச் சக்தி என்னும் சரக்கின் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பார்ப்போம்.

உழைப்புச் சக்தி என்னும் சரக்கை உற்பத்தி செய்வதற்கு தேவையானதின் பண அளவே உழைப்புச் சக்தியின் விலை ஆகும்.

ஒரு பொருளின் விலை என்பது அந்தப் பொருளை உற்பத்தி செய்யும்போது செலவிடப்பட்ட பணத்தைக் கொண்டு அளவிடப்படுகிறது, அதே போலத்தான் உழைப்புச் சக்தியின் விலையும் அளவிடப்படவேண்டும்.

உழைப்பாளர் உற்பத்தியில் ஈடுபடும்போது தம் உழைப்புச் சக்தியை இழக்கிறார். இதனை மறுவுற்பத்தி செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது உற்பத்திக்கு தொடர்ந்து உழைப்பாளர்கள் கிடைப்பதற்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும், அதற்கான குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும். இதற்கு ஆகும் குறைந்தபட்ச பணமே உழைப்புச் சக்தியின் விலையாகக் கொள்ளப்படுகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழிலாளிக்கு, அவர் உழைத்த முழு நேரத்துக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை, உழைப்புச் சக்திக்கே சம்பளம் கொடுக்கப்படுகிறது.

இதனை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

எளிமைக் கருதி நாம் ஒரு நாள் சம்பளத்தை எடுத்துக் கொள்வோம்.

ஒரு தொழிலாளிக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.1000/-. ஒவ்வொரு நாளும் தொழிலாளி தொழிற்சாலையில் உழைக்கத் தொடங்கிய முதல் ஒரு மணிநேரத்திலேயே ரூ.1000/- மதிப்புக்கான உழைப்பைச் செலுத்திவிடுகிறார். ஆனால் தொழிலாளி ஒவ்வொரு நாளும் 8 மணி நேரம் உழைக்க வேண்டியதாகிறது. கூடுதலாக 7 மணி நேரம் உழைக்க வேண்டி வருகிறது.

இந்த கூடுதல் நேரத்தின் உழைப்பில் இருந்து கிடைக்கும் மதிப்பே, உபரி மதிப்பு என்று மார்க்ஸ் கூறுகிறார். இந்தக் கூடுதல் மதிப்பில் இருந்தே முதலாளிக்கு லாபம் கிடைக்கிறது. இந்த லாபத்துக்காகவே முதலாளி தொழிற்சாலையை நடத்துகிறார்.

உபரி மதிப்பை லெனின் சூத்திரம் போல விளக்குவதை அவரது சொற்களிலேயே பார்ப்போம்.

 

“கூலி பெறும் உழைப்பாளி நிலம், ஆலைகள், உழைப்புக் கருவிகள் ஆகிவவற்றின் சொந்தக்காரர்களிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கிறான். தொழிலாளி வேலை நாளின் ஒரு பகுதியைத் தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரித்துக் கொள்வதற்கு வேண்டிய செலவுக்காக (அதாவது, கூலிக்காக) உழைப்பதில் கழிக்கிறான். மறு பகுதியில் ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரி மதிப்பை உண்டாக்கித் தருகிறான். இந்த உபரி மதிப்புத் தான் லாபத்துக்குத் தோற்றுவாய், அதுதான் முதலாளி வர்க்கத்தின் செல்வத்துக்குத் தோற்றுவாய்.”

(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

இந்த லாபத்துக்காக உழைப்பாளியின் உழைப்பு நேரத்தைக் கூட்டுவதுபற்றிய சிந்தனையிலேயே முதலாளி இருக்கிறார். மேலும் ஒவ்வொரு முதலாளிக்கும் போட்டி முதலாளிகள் இருக்கிறார். போட்டி முதலாளியை விட அதிகம் லாபம் கிடைக்க வேண்டும் என்றால் தம்மிடம் உள்ள உழைப்பாளியை அதிக நேரம் உழைக்க வைக்க வேண்டும்.

உபரி மதிப்பு இரண்டு முறைகளில் பெறப்படுகிறது. 1.அறுதி உபரி மதிப்பு, 2.ஒப்பீட்டு உபரி மதிப்பு.

வேலை நேரத்தை அதிகப்படுத்துவதின் மூலம் கிடைப்பது அறுதி உபரி மதிப்பு. அவசியமான வேலை நேரத்தைக் குறைப்பதின் மூலம் கிடைப்பது ஒப்பீட்டு உபரி மதிப்பு.

தொழிலாளி, உழைப்புச் சக்திக்கு உழைக்கும் நேரமே அவசியமான உழைப்பு நேரம் ஆகும்.

அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைக்க மூன்று வழி இருக்கிறது. 1.கூட்டுழைப்பு, 2.உழைப்புப் பிரிவினை, 3.புதிய இயந்திரத்தை பயன்படுத்துதல்.

 

அறுதி உபரி மதிப்பு, ஒப்பீட்டு உபரி மதிப்பு என்பதை மூல நூல்களிலும் அரசியல் பொருளாதார வகுப்புகளிலும் பார்க்கலாம்.

உபரி மதிப்பை அதிகரிக்கும் நோக்கில் முதலாளி தொழிலாளியை சுரண்டுகிறார். தொழிலாளி இதனை எதிர்க்கிறார்.

முதலாளியின் வர்க்க நலனும் தொழிலாளின் வர்க்க நலனும் மோதுகின்றன.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் இந்த முரணே முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான வர்க்கப் போராட்டமாக உருவாகிறது.

வர்க்கப் போராட்டம் என்பது யாருடைய சொந்த சிந்தனையிலல் தோன்றியது கிடையாது, அது முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் முரணில் அடங்கி இருக்கிறது. அந்த முரண் சிந்தனையில் பிரதிபலிக்கிறது. அதாவது, புறநிலையில் இருப்பதே அகநிலையாக சிந்தனையில் வெளிப்படுகிறது.

இதனை தீர்ப்பதற்கு வழி வர்க்கப் போராட்டமே ஆகும்.

ஏன் வர்க்கப் போராட்டம், சமூக மாற்றம் என்று கூறப்படுகிறது என்றால், முதலாளித்து உற்பத்தி முறையில் காணப்படும் முரணை, முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் தீர்வு காண முடியாது. இந்த முரணுக்குத் தீர்வாக முதலாளித்துவ உற்பத்தி முறையை விழ்த்தி அதனிடத்தில் சோஷலிச உற்பத்தி முறையைக் கொண்டுவர வேண்டும். இதைத் தவிர்த்த  வேறு தீர்வு கிடையாது. 

தனிச் சொத்துடைமையின் அடிப்படையில் முதலாளித்துவ உற்பத்தியாக, கூலி அமைப்பு முறை செயல்படுகிறது, கூலி அமைப்பு முறைக்குள் கூலிப் பிரச்சினை முழுயாகத் தீர்க்க முடியாது. தனிச் சொத்தை பொதுச் சொத்தாக்கப்படும் போதே கூலிப் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படுகிறது.

இதனை சாதிக்க வேண்டும் என்றால் வர்க்கப் போராட்டத்தை நடத்தியே ஆக வேண்டும்.